Site icon ilakkiyainfo

சிறிலங்காவில் தமிழர்கள் உயிர் வாழ்வதற்கான சூழ்நிலைகள் இல்லை – தமிழ்நாடு வந்தடையும் அகதித் தமிழர்கள்

சிறிலங்கா இராணுவம் மற்றும் சிறிலங்கா காவற்துறையிடமிருந்து பாதுகாப்புத் தேடி தனது குடும்பம் நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்த பின்னர் தனது பிள்ளைகள் வாழ வேண்டிய அமைதி வாழ்க்கை மற்றும் அவர்களுக்கான சிறந்த கல்வி போன்றன தடைப்பட்டுவிட்டதாக கிளிநொச்சியைச் சேர்ந்த 33 வயதான பொறியியலாளரான தயாபரராஜா கூறுகிறார்.

திங்கள் அதிகாலையில் தனுஸ்கோடிக்கு அருகிலுள்ள அரிச்சல்முனையை வந்தடைந்த ஐந்து சிறார்கள் உட்பட சிறிலங்காவைச் சேர்ந்த பத்து ஈழ அகதிகளில் தயாபரராஜாவும் ஒருவராவார்.

இந்தியாவுக்குள் நுழைவதற்குத் தேவையான எவ்வித ஆவணங்களையும் இவர்கள் கொண்டிருக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி இவர்கள் அனைவரும் வெளிநாட்டு சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டனர்.

சிறிலங்கா இராணுவத்தினர் எந்தவேளையிலும் தமிழ் மக்களின் வீடுகளைச் சுற்றிவளைத்து தமிழர்களை தமது முகாங்களுக்குக் கொண்டு செல்கின்ற நிலை காணப்படுவதாகவும் ஆனால் இவர்களில் பலருக்கு என்ன நடக்கின்றது என்பது வெளியில் தெரிவதில்லை எனவும் கடந்த திங்கட்கிழைமை இந்தியாவைச் சென்றடைந்த பத்து ஈழஅகதிகளில் ஒருவரான 34 வயதான முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சாரதியாகப் பணிபுரிந்த தவீந்திரன் தெரிவித்தார்.

தவீந்திரன் தது மனைவி லக்சனி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் முல்லைத்தீவில் வாழ்ந்தார்.

ஆனால் சிறிலங்காவின் வடக்கில் வாழும் தமிழர்கள் சந்தேகத்தின் பேரில் அவர்களது வீடுகளிலிருந்து கூட்டிச்செல்லப்படுவதாகவும் இவ்வாறான சம்பவங்கள் 2010லிருந்து தொடர்வதாகவும் தவீந்திரன் மேலும் குறிப்பிட்டார்.

தனது மைத்துனரான கார்த்தீபன் பூசா தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் எவ்வித காரணமுமின்றி ஆறு மாதங்களின் முன்னர் இவர் புனர்வாழ்வு முகாம் ஒன்றுக்கு அனுப்பப்பட்டதாகவும் தவீந்திரன் குறிப்பிட்டார்.

2009ல் சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போது தமது நாட்டில் மீண்டும் அமைதி திரும்பிவிட்டதாகவும், இதன்மூலம் தமிழ் மக்கள் இயல்புவாழ்வை வாழமுடியும் எனவும் மக்கள் நம்பிக்கை கொண்ட போதும், யுத்தம் முடிந்த பின்னரும் தமிழ் இளையோர்கள் சிறைகளிலும் முகாங்களிலும் அடைக்கப்பட்டுள்ளதாக தவீந்திரன் சுட்டிக்காட்டினார்.

2001-2005 வரையான காலப்பகுதியில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகத் தான் கடமையாற்றியதாகவும், தன்னை இருதடவைகள் சிறிலங்கா இராணுவத்தினர் கைதுசெய்து கடற்படை முகாம் ஒன்றில் தடுத்து வைத்ததாகவும், தான் இரண்டு ஆண்டு கால சிறைத்தண்டனையை அனுபவித்ததாகவும் தயாபரராஜா கூறுகிறார்.

இதனால் தான் தனது குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல முயற்சித்த போது சிறிலங்கா காவற்துறையினர் தன்னைத் தடுத்து நிறுத்தி கைதுசெய்ததாகவும் தயாபரராஜா கூறுகிறார்.

இதனைத் தொடர்ந்து தான் தனது குடும்பத்தாருடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பல இடங்களிலும் மாறி மாறி வாழ வேண்டிய நிலையேற்பட்டதாகவும், இறுதியில் இந்தியாவில் தஞ்சம் புகுவதெனத் தீர்மானித்து படகொன்றுக்கு 50,000 சிறிலங்கா ரூபாக்களைக் கட்டணமாகச் செலுத்தி மன்னாரிலிருந்து இந்தியாவுக்கு படகு மூலம் பயணித்ததாகவும் தயாபரராஜா விளக்கினார்.

மண்டபம் அகதி முகாமை அடைவதற்கு முன்னர், முழங்கால் வரையான கடல் நீரின் ஊடாக கரையை வந்தடைவதற்கு பெரும் பிரயத்தனப்பட்டதாகவும் தயாபரராஜா மேலும் குறிப்பிட்டார்.

ஆனால் சிறிலங்காவிலிருந்து இந்தியாவில் தஞ்சம் கோரும் எவரும் வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டதைத் தான் அறியவில்லை எனவும் குறிப்பிட்டார்.

இதேபோன்று இந்தப் படகில் இந்தியாவை வந்தடைந்த பிறிதொரு அகதியான 35 வயதான சுதாகாரன் முல்லைத்தீவைச் சேர்ந்தவராவார். இவர் 1996-2005 வரை விடுதலைப் புலிகள் அமைப்பில் உணவு வழங்கல் பணியை மேற்கொண்டார்.

இவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட போது புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவரால் தடுத்து வைக்கப்பட்டு மூன்று மாத கால தண்டனை அனுபவித்தார்.

சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் அமைதியான வாழ்வை வாழ்வதற்கு சிறிலங்காப் படைகள் ஒருபோதும் அனுமதி வழங்காது எனவும் இதனால் தமிழ் மக்களுக்கு சிறிலங்காவில் எவ்வித பாதுகாப்பும் இல்லை எனவும் சுதாகரன் சுட்டிக்காட்டினார்.

ஈழத்தமிழர்களின் புனர்வாழ்வுக்காக இந்தியா நிதியை வழங்குகின்ற போதிலும் இந்த நிதி முற்றாகத் தமிழர்களைச் சென்றடைவதில்லை எனவும் சுதாகாரன் குறிப்பிட்டார்.

தன்னை சிறிலங்கா காவற்துறையினர் கைதுசெய்து ஆறுமாதகாலம் சித்திரவதைகள் புரிந்து விடுவித்த பின்னர், 2008ல் சிறிலங்கா கடற்படையால் தடுக்கப்பட்டு மூன்று ஆண்டுகாலம் சிறைத்தண்டனை அனுபவித்ததாகவும் சுதாகாரன் தெரிவித்தார்.

இவர் விடுவிக்கப்பட்ட பின்னரும் சிறிலங்கா காவற்துறையினர் தொடர் கண்காணிப்பை மேற்கொண்டனர்.

இதனால் சுதாகாரன் படகொன்றுக்கு 1.2 லட்சம் சிறிலங்கா ரூபாக்களைச் செலுத்தி அரிச்சமுனையை வந்தடைந்தார். சிறிலங்காவை விட்டு படகொன்றின் மூலம் தப்பிச் செல்ல முற்பட்ட மேலும் ஏழு பேர் சிறிலங்கா கடற்படையால் தடுக்கப்பட்டு மீண்டும் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக சுதாகாரன் குறிப்பிட்டார்.

இவ்வாறு தனுஸ்கோடிக்குத் தப்பிச் சென்ற ஈழத்தமிழ் அகதிகளிடம் இந்திய புலனாய்வு அமைப்பினர் விசாரணை மேற்கொண்டதுடன், இவர்களை வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ் பதிவு செய்ததாக தனுஸ்கோடி காவற்துறை நிலையத்தின் மேலதிகாரி மயில்வாகனம் தெரிவித்தார். கைதுசெய்யப்பட்ட ஈழத்தமிழ் அகதிகள் நீதிமன்றில் முன்னிறுத்தப்படவுள்ளதாகவும் மயில்வாகனம் மேலும் குறிப்பிட்டார்.

செய்தி வழிமூலம் : The New Indian Express – By S Raja – RAMESWARAM
மொழியர்கம் : நித்தியபாரதி

Exit mobile version