உலகில் உள்ள அனைத்து தேசங்களும் பெரும் குற்றமாக கருதும் ஓர் நடவடிக்கையே மனிதக் கடத்தலாகும் கடத்தல் என்ற பொதுப் பெயருக்குள் வரும் இந்த மனிதக் கடத்தல்கள் பல தரப்பட்டடவை.
தேசத்தை விட்டு தேசமொன்றுக்கு ஒருவரின் விருப்புடனேயே அவரைக் கடத்துவது முதல் பணம் பறிக்கும் நோக்குடன் ஒருவரை கடத்தி கொலை செய்வது வரை அதன் பட்டியல் நீண்டது. பிள்ளைகளை கடத்தி பெற்றோரின் பாசத்தை பயமாக்கி அந்த பயத்தை பணமாக்கும் ஒரு வகையான பாதாள செயற்பாடுகளை மேற்கொள்ளும் குழுக்களின் செயற்பாடுகளை அவ்வப்போது செய்திகளில் நாம் அறிந்திருப்போம்.
அவ்வாறான கடத்தல்கள் பெரும்பாலும் பெற்றோரின் பராமரிப்பிலிருந்து பிள்ளைகள் தூரமாக இருக்கும் சந்தர்ப்பங்களிலேயே இடம்பெறும். அத்துடன் இதன் நோக்கமானது பெரும்பாலும் பணத்தையே அடிப்படையாகவும் கொண்டிருக்கும்.
அண்மையில் இலங்கையிலும் இது போன்ற சம்பவங்கள் பதிவாகின. குறிப்பாக மாளிகாவத்தை பகுதியில் மாலை நேர குர்ஆன் வகுப்புக்கு சென்ற ஒரு சிறுவனை கடத்தி கப்பம் கோரிய சம்பவம் தொடர்பாக அண்மையில் செய்திகளில் படித்திருப்பீர்கள். அவை பணத்தை அடிப்படையாக கொண்ட மனிதக் கடத்தல்கள்.
இவ்வாறான கடத்தல்கள் பலவற்றை சந்தித்துள்ள எமது பொலிஸாருக்கு புதிதாக ஒரு சவாலை இந்த சம்பவம் ஏற்படுத்தியிருக்கின்றது. கடந்த 28ஆம் திகதி திங்கட்கிழமை இரவு வடமேல் மாகாணத்தின் கல்கமுவ, மீகலேவ, கடுகம்பலகம பிரதேசத்தில் நான்கரை வயது சிறுவன் ஒருவன் கடத்தப்பட்ட சம்பவமே இந்த சவாலை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது தனது பெற்றோருடன் வீட்டிலிருந்தபோது சுமார் இரவு 7.30 மணியளவில் இரு மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் இந்த சிறுவனை கடத்திச் சென்றுள்ளனர்.இந்த கடத்தலுக்கான நோக்கம் அல்லது காரணம் அச்சிறுவன் கடத்தப்பட்டு நான்கு நாட்கள் கடந்தும் இன்னும் மர்மமாகவே உள்ளது.
யசீன் லங்காநாத் குமார ஏக்க நாயக்க என்ற நான்கரை வயதான சிறுவன் மீகலேவ கட்டுகம்பலகம பிரதேசத்தில் பிரபலமான நெல் ஆலை ஒன்றினை நடத்திவரும் வர்த்தகரான மஹிந்த குமார ஏக்கநாயக்க சிகராமி சுதேசிகா ஹேரத் தம்பதியரின் கடைக்குட்டி யசீன் லங்காநாத்துக்கு 7 வயதில் ஒரு அக்காவும் உள்ளார். அவளது பெயர் யசோதரா சந்தமினி குமாரி. இந்த நான்கு உறுப்பினர்களுடன் தான் அந்த குடும்பம் சந்தோசமாக ஓடிக் கொண்டிருந்தது.
அன்றும் அப்படித்தான் வழமை போன்றே கட்டுகம்பலகம அமைதியாக இருந்தது. மஹிந்த குமாரவும் தனது நெல் ஆலை வேலைகளை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நேரமது. 28 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை சூரியன் மறைந்து மக்கள் சந்திரனை தேடிக்கொண்டிருந்த நேரமது கடிகாரமும் இரவு 7.15 மணியைக் கடந்து ஓடிக்கொண்டிருந்தது.
அப்போது இரு மோட்டார் சைக்கிள்கள் வேகமாக வந்து வர்த்தகர் மஹிந்த குமாரவின் வீட்டருகே நின்றன. நல்ல கண்கொண்டே பார்த்துப் பழகிய அந்த ஊர் மக்களுக்கு கடத்தல்காரர்களின் மோட்டார் சைக்கிளினை சந்தேகக்கண் கொண்டு பார்க்கத் தெரிந்திருக்கவில்லை.
இரவு 7.00 மணிக்கெல்லாம் மஹிந்த குமாரவின் வீட்டுக் கதவுக்கு பூட்டு போடுவது வழமை. அப்படித்தான் அன்றும் அந்த கதவு பூட்டப்பட்டே இருந்தது.
இந்நிலையில் மஹிந்த குமாரவின் வீட்டின் முன்னால் வந்து நின்ற இரு மோட்டார் சைக்கிள்களில் இருந்து இருவர் இறங்கிச் சென்றுள்ளனர். உடலை முழுமையாக மறைத்து ஜாக்கட் அணிந்திருந்துள்ள அந்த நபர்கள் நேராக வர்த்தகர் மஹிந்த குமாரவின் வீட்டின் பிரதான கதவருகே சென்றுள்ளனர்.
டக்… டக்… குமார மஹத்தயா… குமார மஹத்தயா.. வந்தவர்களில் ஒருவன் கதவை தட்டிக் குரல் கொடுக்க ஓய்வில் இருந்த வர்த்தகர் கதவை திறந்து வந்துள்ளார்.
எதிரிகளே இல்லாது வாழ்ந்து பழக்கப்பட்ட மஹிந்த குமார அந்த கயவனின் நயவஞ்சகத்தனமான குமார மஹாத்தயா என்ற வார்த்தையின் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.
யாரோ ஏதோ தேவைக்காக தன்னை தேடி வந்திருப்பதாக நினைத்த மஹிந்த குமார எழுந்து சென்று கதவை திறந்துள்ளார். அப்போது அம்மா சிரோமி யசீனுக்கு இரவு ஆகாரத்தை ஊட்டிக்கொண்டிருந்துள்ளார்.
தந்தை முன்னால் சென்று கதவை திறக்க யசீனும் தந்தையின் பின்னால் கதவருகே சென்றுள்ளான். அப்போது முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிந்திருந்துள்ள நபர் ஒருவர் யசீனை தூக்கிச் செல்ல முற்பட்டுள்ளார்.
யசீனை தூக்கிச் செல்ல முன் கடத்தல்காரர்களுக்கும் மஹிந்த குமாரவுக்கும் இடையே எவ்வித சம்பாஷணைகளும் இடம்பெற்றதாக அறிய முடியவில்லை.
தனது கடைக்குட்டி யசீனை கடத்தல்காரர்கள் கடத்த முயன்ற போது தந்தை மஹிந்தகுமாரவும் தாய் சிரோமியும் போராடியுள்ளனர்.
அதன் விளைவு மஹிந்த குமாரவின் கழுத்துப் பகுதியும் சிரோமியின் வலது காலும் பதம் பார்க்கப்பட்டுள்ளன.
கூரிய கத்திகளால் தாக்குதல் நடத்தியுள்ள கடத்தல்காரர்கள் இருவர் அந்த இரு கத்திகளை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு யசீனை கடத்திக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அப்போது நடந்தவை தொடர்பில் யசீனின் அக்காவான ஏழு வயதுடைய யசோதரா சந்தமினி குமாரி எம்மிடம் இவ்வாறு விளக்கினார்.
அப்போது நான் படித்துக் கொண்டிருந்தேன். வீட்டின் பிரதான சாலையில் சத்தம் கேட்டது. நான் அறையில் இருந்தேன். பின்னர் படிப்பதை நிறுத்தி விட்டு நான் பிரதான அறைக்கு வந்தேன். வரும் போது தந்தையின் கழுத்தில் இரத்தம் தோய்ந்திருந்தது. அவர் கீழே கிடந்தார்.
அப்போது யாரோ தம்பியை இழுத்துக் கொண்டு சென்றனர். அவர்கள் தம்பியைத் தள்ளிக் கொண்டு போய் கதவை அடைத்தனர்.அப்போது உடனடியாகவே தந்தை கதவை திறந்தார் அதன்போது முன்னால் உள்ள லைட் தூண் அருகே அவர்கள் தம்பியை தூக்கிச் செல்வதை கண்டேன் என தனது கவலை தோய்ந்த குரலில் சம்பவத்தை சொல்லி முடித்தார் யசோதரா..
நாம் சம்பவம் இடம்பெற்ற மீகலேவ கட்டுகம்பலகம பகுதிக்கு செல்லும் போது இருள் ஓரளவு அந்த ஊரை சூழ்ந்திருந்தது. எனினும் இருளைவிட அதிகமாகவே அந்த கிராமத்தையும் அதனை அண்டிய பகுதியையும் கவலை ஆட்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
சம்பவம் தொடர்பில் அயலவர் ஒருவர் தகவல் தருகையில்: மஹிந்த குமாரவின் வீட்டுக்கு பலர் வந்து செல்வது வழமை என்பதால் மோட்டார் சைக்கிளில் நால்வர் வருவதை கண்டும் நாம் அதை பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. எனினும் சிறிது நேரத்தில் மஹிந்த குமார வீட்டில் இருந்து கதறிக்கொண்டு ஓடி வந்தார். அப்போது தான் மகன் கடத்தப்பட்டுள்ள விடயத்தை அறிந்தோம். அதனையடுத்து நாம் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்தோம் என விளக்கினார்.
கடத்தல்காரர்களின் தாக்குதல்களுக்கு இலக்கான மஹிந்த குமாரவும் சிரோமியும் நாம் செல்லும் போது வீடு திரும்பியிருந்தனர். எனினும் அவர்கள் மனதில் இருந்த காயம் மேலும், மேலும் வளர்ந்து செல்வதினையும் மகனை மீட்கும் வரை ஆகாரம் எதிலும் நாட்டமில்லாமல் இருப்பதை நாம் அவதானிக்க முடிந்தது.
இதனிடையே ஸ்தலத்துக்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்த மீகலவே பொலிஸார் இரு கூரிய கத்திகளை மீட்டதாகவும் அவை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டவை என சந்தேகிப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்த கடத்தல் இடம்பெற்று 96 மணித்தியாலங்கள் இரவு 7.30 மணியுடன் நிறைவடைந்தது. எனினும் சிறுவன் யசீன் தொடர்பிலான விசாரணைகளில் எவ்வித துப்பு துலக்கு தகவல்களும் விசாரணை குழுவினருக்கு கிடைக்கவில்லை.
வடமேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் அபேசிறி குணவர்த்தன நிகவரட்டிய பொலிஸ் வலயத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சந்தன அழகக்கோன் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் ஐந்து பொலிஸ் குழுக்கள் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளன.
மாஹோ பிராந்தியத்துக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சர் சமன் திஸாநாயக்கவின் நேரடி கட்டுப்பாட்டில் மீகலேவ கல்கமுவ கிரிபாவ கல்னேவ பொல்பித்திகம ஆகிய 5 பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கியதாக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடத்தல்காரர்களை கைது செய்வதை விட சிறுவன் யசீனை மீட்பதே தமது விசாரணையின் பிரதான இலக்கு என விசாரணைகளை முன்னெடுக்கும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் எம்மிடம் குறிப்பிட்டார்.
இதனைவிட நேற்றுவரை எவ்விதமான தடயங்களும் பொலிஸாருக்கு கிடைக்காத நிலையில் அறிவியல் சார் ஆதாரங்களை பெற்று அதன் அடிப்படையில் சிறுவன் யசீன் இருக்கும் இடத்தை கண்டறியும் செயற்பாடுகளில் தற்போது பொலிஸார் இறங்கியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன ‘கேசரி’ உடனான கலந்துரையாடலில் சுட்டிக்காட்டினார்.
அதன் விளைவு மீகலேவ பொலிஸ் பிரிவில் கடந்த 28 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு 7.30 மணிக்கும் அதனை அண்டிய நேரங்களிலும் பரிமாற்றப்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதனூடாக துப்பு துலக்க எதிர்பார்ப்பதாகவும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறானதொரு பின்னணியில்தான் இந்த சிறுவனை கண்டுபிடிக்கும் செயற்பாடுகளுக்கு பொலிஸார் பொது மக்களின் உதவிகளை நாடியுள்ளனர்.
நிலைமை இவ்வாறு இருக்கும் போது மகனை இழந்து தவிக்கும் பெற்றோரின் மனோ நிலை மேலும் மோசமடைந்துள்ளது.
கடத்தல்காரர்களின் நோக்கம் எதுவென்று இதுவரை அறியப்படாத நிலையில் மகனை மீட்க வேண்டியதொரு விலையை செலுத்த அந்த பெற்றோர் தயாராகி விட்டனர்.
நாம் நடுத்தெருவுக்கு வந்தாலும் பரவாயில்லை கேட்கும் தொகையை எப்படியேனும் தருகிறோம். தயவு செய்து எனது தங்க மகனை தந்து விடுங்கள் என யசீனின் தாய் கதறியழும் காட்சிகளிலிருந்து நாம் இன்னும் மீளவில்லை.
உணவையும் பானத்தையும் தனது மகன் வரும்வரை தள்ளியே வைத்துள்ள அந்த தாய் அந்த வீட்டில் குழுமியிருக்கும் பொதுமக்களிடம் கதறிக் கதறி தனது மகனை கேட்கிறார்.
குறைந்த பட்சம் ஒரு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தச் சொல்லுங்கள் மகன் உயிரோடு இருப்பதையேனும் அறிய என கண்ணீர் சிந்தும் அந்தத் தாய் மகனை பசியில் போட வேண்டாம் எனவும் கேட்கும் தொகையை குறைவின்றித் தரத் தயார் என அழுது புலம்புகின்றார்.
இதே மனநிலையில்தான் தந்தை மஹிந்த குமாரவும் உள்ளார். எனது மகனுக்கு பால் என்றால் மிகவும் பிடிக்கும் அவனுக்கு பால் ஒரு கோப்பை கொடுங்கள். வேண்டிய அளவு பணம் தருகிறேன்.
எனது சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதனை தருகின்றேன். அவர்களுக்கு பயப்பட வேண்டாம் என்று சொல்லுங்கள் பொலிஸாருக்கு தெரியாமல் அந்த பணத்தொகையை தருகிறேன் என அழுது புலம்பும் தந்தை மஹிந்த குமார தனது மகனை எங்கேனும் பாதையில் விட்டுவிட்டு இருக்கும் இடத்தை மட்டும் தொலைபேசியில் அறிவிக்குமாறும் கேட்கும் தொகையை தான் செலுத்த தவறும் பட்சத்தில் தன்னை கொலை செய்யுமாறும் குறிப்பிடுகிறார்.
மஹிந்த குமாரவின் நெல் ஆலையும் அவரது வீடு மட்டுமின்றி முழு மீகலேவ பிரதேசமும் துயரத்தில் இன்றும் சோகமயமானதாக காட்சியளிக்கின்றது. மஹிந்த குமாரவும் வீட்டுக்குள் செல்வதையே தவிர்த்து தனது காயத்தினையும் பொருட்படுத்தாது மகன் மீண்டும் வரும் வரை ஒரு சாரத்துடன் காத்துக் கிடக்கிறார். இந்நிலையில் நடந்தது என்ன என்பதை ஊகித்துக் கொள்ள முடியாமல் எனி்னும் தனது தம்பி தன்னுடன் இல்லை என்பதனை மட்டும் உணர்ந்தவளாக 7 வயதான யசோதரா தம்பி யசீன் லங்காநாத் மீண்டும் தன்னுடன் விளையாட வருவான் என்ற நம்பிக்கையில் காத்து கிடக்கின்றாள்.
தம்பிக்கு இருள் என்றால் ரொம்ப பயம் அவனை இழுத்துச் செல்லும் போது அழுது கொண்டே சென்றான். எனக்கு தம்பி வேண்டும். அவனில்லாமல் ஊரே பாழாய் கிடக்கிறது. என்னாலும் இருக்க முடியவில்லை என கவலை தோய்ந்த குரலில் யசோதரா கூறி முடித்து யசின் லங்காநாத்தின் விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ள அந்த அலுமாரியை ஏக்கத்துடன் பார்க்கும் போது எமது கண்க ளும் ஆறு குளமாக மாறுவதை தவிர்க்க முடியவில்லை. அதனால் நாம் அந்த சோகமயமான சூழலுக்குள் இருந்து யசினின் நினைவுகளுடன் வெளியேறி இந்த கடத்தல் தொடர்பான விசாரணைகள் குறித்து அவதானம் செலுத்தினோம்.
யசீன் லங்காநாத் கடத்தப்பட்டு 96 மணித்தியாலங்கள் கடந்துள்ள நிலையில் கடத்தலுக்கான உண்மைக்காரணம் இதுவரையில் தெரியாத நிலையில் பல்வேறு ஊகங்கள் வெளியிடப்படுகின்றன.
கப்பம் பெறும் நோக்கில் யசீன் லங்காநாத் என்ற 4 1/2 வயது சிறுவன் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற ஊகம் கடத்தல் காரர்கள் இதுவரை கப்பத் தொகை ஒன்றினை கோராத நிலையில் ஊமையாகிறது. அத்துடன் பொலிஸார் இதுவிடயத்தில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதன் விளைவாகக் கூட கடத்தல்காரர்கள் கப்பத் தொகையை கோர முன்வராமல் இருப்பதற்கும் சாத்தியப்பாடுகள் இல்லாமலில்லை.
அத்துடன் வர்த்தகர் மஹிந்த குமார தம்பதியருடன் தகராறு உள்ள அல்லது பழைய பகைமை உள்ள ஒரு தரப்பினர் இந்த கடத்தலை மேற்கொண்டிருக்கவும் வாய்ப்புக்கள் இல்லாமலில்லை. எனினும் தனக்கு பகைவர்கள் எவரும் கிடையாது என வர்த்தகர் மஹிந்த குமார மீகலேவ பொலிஸாருக்கு அளித்துள்ள வாக்குமூலத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இதனை விட வர்த்தகர் மஹிந்த குமாரவுடனான வர்த்தக போட்டி உள்ளிட்ட விடயங்களும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
இவையனைத்தையும் விட இன்னுமொரு காரணியும் அவதானத்தில் எடுக்கப்பட வேண்டியதே. அதாவது புதையல் புராதன பொருட்களை நிலத்திற்கடியில் இருந்து வெளியே எடுப்பதற்காக நரபலி கொடுக்க வேண்டும் என்ற ஒரு ஐதீகம் பரவலாக உள்ளது. இதன் பின்னணியில் கூட யசீன் லங்காநாத்தின் கடத்தலை நாம் அவதானிக்க வேண்டியுள்ளது.
மீகலேவ பிரதேசத்தில் உள்ள பலரும் இது தொடர்பில் சந்தேகங்களை வெளியிடுவதையும் மறுப்பதற்கில்லை.இந்நிலையில்தான் விசாரணைகளை மேற்கொள்ளும் ஐந்து பொலிஸ் குழுக்களையும் வழி நடத்தும் மாஹோ பிராந்தியத்துக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சர் சமன் திஸாநாயக்கவுடன் இது தொடர்பில் கலந்துரையாடினோம்.
மேற்சொன்ன அனைத்து காரணிகள் உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய உதவி பொலிஸ் அத்தியட்சர் சமன் திஸாநாயக்க இதுவரை சிறுவன் தொடர்பிலோ அல்லது கடத்தல்காரர்கள் தொடர்பிலோ எவ்வித தகவல்களும் இல்லை என குறிப்பிடுகிறார். எனினும் விசாரணைகள் தீவிரமாக்கப்பட்டுள்ள நிலையில் குற்றவாளிகளை அடையாளம் கண்டு சிறுவனை விரைவில் மீட்க முடியும்
என தாம் நம்புவதாகவும் அனைவரின் பிரார்த்தனைகள் போன்றே சிறு வனை மீட்பதில் முழு கவனம் செலுத்தப்பட்டுள் ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனை விட நேற்று காலை வரை பொதுமக்களிடம் இருந்து சிறுவன் தொடர்பிலோ கடத்தல்காரர்கள் தொடர்பிலோ எவ்வித உருப்படியான தகவல்களும் கிடைக்கவில்லை என கை விரிக்கின்றனர்.
யசீன் லங்காநாத் கல்வி கற்று வந்த பாலர் பாடசாலையும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. அத்துடன் ஊர் விகாரை, பாலர் பாடசாலை என அத்தனை இடங்களிலும் யசீன் லங்காநாத்துக்கான பிரார்த்தனைகளில் குறைவில்லை.
இனம் மதம் குலம் கடந்து நாடளாவிய ரீதியில் யசீன் லங்காநாத்துக்கான பிரார்த்தனைகள் தொடர்கின்றன. யசீன் லங்காநாத் மீண்டும் திரும்பி வந்து அங்கு காத்திருக்கும் சிறுவர்களுடன் வழமை போன்றே துள்ளி குதித்து விளையாடவும் கல்கமுவ மீகலேவ பிரதேசத்தை சூழ்ந்துள்ள சோக மேகங்கள் நீங்கவும் ஆயிரம் ஆயிரம் பிரார்த்தனைகளுடன் நாமும் காத்திருக்கின்றோம்.