திறந்திருந்த ஆழ்துளை கிணற்றில் 6 வயது சிறுவன் சிக்கிக்கொண்ட சம்பவம் கர்நாடகாவில் மீண்டும் நடந்துள்ளது.
ஜூன் 17ம்தேதி, பிஜாப்பூர் மாவட்டத்தில் நான்கு வயது சிறுமி அக்ஷதா ஆழ்துளை கிணற்றில் விழுந்து 46 மணி நேரத்துக்கு பிறகு உயிரிழந்தாள்.
கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஆறுவயது சிறுவன்: உயிரோடு மீட்க போராட்டம் இந்நிலையில் பாகல் கோட்டை மாவட்டம் பாதாமி தாலுகா சூலிகேரி கிராமத்தில் இன்று அதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.
இன்று மதியம், அக்கிராமத்திலுள்ள சுமார் 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் திம்மண்ணா என்ற ஆறு வயது சிறுவன் எதிர்பாராமல் தவறி விழுந்துள்ளான். ஹனுமந்தஹட்டி என்பவர் இந்த ஆழ்துளை கிணற்றை தோண்டிவிட்டு தண்ணீர் வரவில்லை என்று அதை அப்படியே திறந்துவிட்டதன் விளைவாக இந்த சம்பவம் நடந்துள்ளது.
சிறுவன் சுமார் 90 அடி ஆழத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. உடனடியாக மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்பு துறை இணைந்து மீட்பு பணியை துவக்கியுள்ளன.
குழாய் மூலம் ஆக்சிஜன் உள்ளே அனுப்பப்படுகிறது. ஆக்சிஜனை சிறுவன் சுவாசிப்பதால் அவன் உயிரோடு இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனிடையே, ஆழ்துளை கிணற்றில் விழும் சிறுவர்களை ரோபோ உதவியுடன் மீட்பதில் பயிற்சி பெற்ற மதுரையை சேர்ந்த மணிகண்டனுக்கும் சம்பவ இடத்துக்கு வருமாறு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் பெங்களூருக்கு சாலை மார்க்கமாகவும், அதன்பிறகு ஹெலிகாப்டர் மூலமாக பாதாமி செல்வார்.