யாழ்ப்பாணம் காரை நகர் பகுதியில் இரண்டு சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் ஆனது குடாநாட்டில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.
பால் குடி மறவாத சின்னம் சிறு குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதை சகித்துக்கொள்ளவே முடியாது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் விசனம் தெரிவித்துள்ளார்.
யாழ்.குடா நாட்டில் போதை வஸ்துபாவனையும் அதிகரித்துள்ளது. இத்தகைய போதைப்பொருட்களை குடா நாட்டுக்குள் கொண்டு வருபவர்கள் யார் என்பதை அரசாங்கம் அறிந்து கொள்ள வேண்டும். இத்தகைய போதைப்பொருட்களை கொண்டு வந்து விற்கக்கூடிய அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்பதனை நாம் அறிந்துக் கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறினார்.
யாழ். குடா நாட்டின் தற்போதைய நிலைவரம் குறித்து கருத்து கேட்ட போது அவர் இவ்வாறு கூறினார். அவர் இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,
யாழ்.குடா நாட்டின் இளைஞர்களையும் யுவதிகளையும் குறி வைத்து படைத்தரப்பினரின் செயற்பாடுகள் இடம் பெறுகின்றன.அண்மையில் காரைநகரில் இரு சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு வழங்க வேண்டிய பாதுகாப்பு தரப்பினரே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
யாழ்.குடா நாட்டில் இளைஞர், யுவதிகளை சுயமான நிலையில் இயங்காத படி ஆக்கும் செயற்பாடாகவே போதை வஸ்து விநியோகமானது அமைந்துள்ளது. இதனால் சமூக சீர்கேடுகள் அதிகரித்து வருகின்றன. போதைவஸ்துக்களை விநியோகித்து குடாநாட்டில் தனித்துவத்தை அழிக்கும் நோக்கமும் இதன் பின்னணியில் காணப்படுகின்றது.
கடந்த 25 வருடங்களுக்கு மேலாக காரை நகரில் கடற்படை முகாமை தவிர வேறு எந்த முகாமும் அமைக்கப்பட்டிருக்கவில்லை. தற்போது ஏழுபேருக்கும் பத்துப்பேருக்கும் என்றுமுகாம்கள் அமைக்கப்படுகின்றன. இவ்வாறு முகாம்களை அமைப்பதற்கான நோக்கம் என்னவென்று தெரியவில்லை.
காரைநகரில் கல்வி அறிவில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த சிறுமிகளே பாலி
யல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 25 வருடங்களே காரை நகரில் அசம்பாவிதங்கள் எதுவும் இடம் பெற்றிருக்கவில்லை. அப்படியான இடத்தில் சிறிய சிறிய முகாம்களை படையினர் அமைத்து வருகின்றமை சந்தேகத்தை
ஏற்படுத்துகின்றது.