Site icon ilakkiyainfo

அரசியல் தீர்வு : மஹிந்த கருத்துக்கு சம்பந்தர் பதிலடி

இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாமல் இருப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளதை கூட்டமைப்பு மறுத்துள்ளது.

அரசியல் தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளை அரசே முறித்துக் கொண்டது என்றும், கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பிபிசி தமிழோசையிடம் கூறினார் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர்.

“இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் கூட்டமைப்பினரே இழுத்தடிக்கின்றனர், தனது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு, அதனை தனது பலவீனம் என்று எவரும் கருதினால், பாரதூரமான விளைவுகள் ஏற்படும்” என்று ஜனாதிபதி அண்மையில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோது தெரிவித்தக் கருத்துக்கள், அரச சார்பு ஊடகம் ஒன்றில் வெளியாயின. இதையடுத்தே சம்பந்தர் இக்கருத்துக்களை பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அரசு இதயசுத்தியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வந்து, நாட்டுக்கு எந்தவிதமான குந்தகமும் ஏற்படாமல், ஒன்றுபட்ட இலங்கைக்குள், நியாயமான, நிரந்தரமான, நடைமுறைபடுத்தக் கூடியத் தீர்வுகளை அது முன்வைத்தால் தமது தரப்பு அதை ஏற்றுக் கொள்ளும் எனவும் சம்பந்தர் கூறுகிறார்.

நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் நோக்கம் குறித்து தாங்கள் நன்கு அறிந்துள்ளதாகவும், அது தொடர்பில், அரச தரப்பில் வெளியாகியுள்ள கருத்துக்களும் தங்களுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version