அமெரிக்காவின் இந்த ஆபரேஷன் ரகசியமாக செய்யப்பட்டாலும், அதற்கு முன்னர் அமெரிக்க செனட் பாதுகாப்பு கவுன்சிலின் கொள்கை ரீதியிலான அனுமதியை வாஷிங்டன் பெறவேண்டியிருந்தது. அத்துடன் அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ ஆயுதக் கட்டுப்பாட்டு நடைமுறைகளுக்கு ஒத்துப்போக ஒரு சில அரசியல் ரீதியான நகர்வுகளை அமெரிக்க அரசு செய்யவேண்டி இருந்தது.

அப்படி வாஷிங்டனால் செய்யப்பட்ட அரசியல் நகர்வுகளில் இரண்டு நகர்வுகள் முக்கியமானவை.

முதலாவது ஆபரேஷன் பேலன்ஸ் ஸ்டைல் மூலமாக இவர்கள் பயிற்சி கொடுக்கவிருந்த இலங்கை அரசுக்கு எதிராக யுத்தம் புரிந்து கொண்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை, அமெரிக்க ஸ்டேட் டிபார்ட்மென்டின் பயங்கரவாத இயக்கங்கள் என்ற பட்டியலில் கொண்டுபோய் சேர்த்தது;

இரண்டாவது இலங்கையில் அதுவரை நடந்துவந்த மனித உரிமை மீறல்கள் எண்ணிக்கை, முன்பைவிட பெருமளவில் குறைந்து போயிருப்பதாக அமெரிக்க செனட் கமிட்டியில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த இரண்டுமே ஒரு தற்பாதுகாப்பு அடிப்படையில் அமெரிக்க அரசால் செய்யப்பட்ட அரசியல் வேலைகள். இந்த இரண்டையும் செய்யாமல், மூன்றாவது நேரடி மூவ் ஆக ஆபரேஷன் பேலன்ஸ் ஸ்டைலை அமெரிக்காவால் இலங்கையில் செயல்படுத்தியிருக்க முடியும். Based on National Security Measurements என்ற வகையில் அமெரிக்க செனட்டுக்கோ, அதன் பாதுகாப்பு கமிட்டிக்கோ இது சம்பந்தமான பைல்களை அனுப்பாமல், presidential advisory commission ஒன்றின் மூலமாக காரியத்தை காதும் காதும் வைத்ததுபோல கச்சிதமாக முடித்திருக்க முடியும் அமெரிக்காவால்.

அதற்கு அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தில் இடமிருக்கிறது.

இருந்தபோதிலும் இலங்கை விஷயத்தில் அப்படியான போல்ட் ஸ்டெப் ஒன்றை அமெரிக்கா ஏதோ காரணத்தால் எடுக்க விரும்பியிருக்கவில்லை.

அதற்குக் காரணம் ஆபரேஷன் பேலன்ஸ் ஸ்டைலை இவர்கள் எவ்வளவுதான் ரகசியமாக திட்டமிட்டாலும், ஏதோ ஒரு காலத்தில், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ரகசியம் வெளியாகிவிடும் என்பதை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சக திட்டமிடல் குழு எதிர்பார்த்திருக்கலாம் – அல்லது சி.ஐ.ஏ. அப்படியான அறிவுறுத்தல் ஒன்றைக் கொடுத்திருக்கலாம்.

எனவே நாங்கள் ஏற்கனவே கூறிய இரண்டு அரசியல் நடவடிக்கைகள் மூலம் அமெரிக்கா தனது செயலுக்கு தற்பாதுகாப்பு நிலை எடுத்துக்ககொண்ட பின்னர்தான், ஆபரேஷன் பேலன்ஸ் ஸ்டைலை நடத்த முதல் பேட்சில் 12 பேரை கொழும்புவுக்கு அனுப்பி வைத்தார்கள்.

அமெரிக்க ஸ்டேட் டிபார்ட்மென்ட் கொடுத்த அறிவுறுத்தல்களின்படி இலங்கை வெளியுறவு அமைச்சர், அமெரிக்க ராணுவத்தினர் யாரும் இலங்கை வந்துள்ள விஷயத்தையோ, அவர்கள் இலங்கையில் ராணுவத்துக்கு பயிற்சி கொடுக்கும் விஷயத்தை பற்றியோ வாயே திறக்கவில்லை.

அமெரிக்கா இந்த ஆபரேஷனுக்காக இலங்கை செல்வதற்கு முன், இலங்கைக்கு ராணுவ சாதனங்களை – ஆயுதங்கள் உட்பட – வழங்குவதற்கு அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு அதிகாரபூர்வ தடை இருந்தது. அதற்கு காரணம், மனித உரிமை குற்றச்சாட்டுகள் தொடர்பாக அதுவரை ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புகளிலும், அமெரிக்க செனட்டிலும் தாக்கல் செய்யப்பட்டு வந்த மனித உரிமை மீறல் அறிக்கைகள்.

இதனால், அதுவரை இலங்கை அரசுக்கு கிடைத்து வந்த ராணுவ சப்ளைகள் ‘உள்நாட்டு யுத்தம் நடைபெறும், சிறிய, ஏழை, ஆசிய நாடு’ என்ற சலுகையில் தகுதி பெற்று கிடைக்கக்கூடிய ஆயுத சப்ளைகள் அல்ல. அந்த சலுகையில், குறைந்த விலையில், அல்லது நீண்டகால கடன் அடிப்படையில் ஆயுதங்கள் கிடைக்கும்.

ஆனால், மனித உரிமை விவகாரம் காரணமாக அதுவரை இலங்கை அரசு ஆயுதம் வாங்கியது எதுவுமே சலுகை அடிப்படையில் அல்ல. அநேகமாக பட்டியலிடப்பட்ட முழு விலையில்! அந்த பட்டியலிடப்பட்ட முழு விலை, கிட்டத்தட்ட ஆயுத கறுப்புச் சந்தை விலை!

அதாவது, நீங்களோ நானோ சர்வதேச ஆயுத சந்தையில் ஆயுதம் வாங்வேண்டுமென்றால் என்ன விலைக்கு வாங்குவோமோ, கிட்டத்தட்ட அதே விலை அல்லது அதைவிட அதிக விலை கொடுத்துத்தான் இலங்கை அரசு அதுவரை ஆயுதங்களை வாங்கிக் கொண்டு இருந்தது. காரணம் மனித உரிமை மீறல் அறிக்கைகளால் ஏற்பட்டிருந்த ஆயுத விற்பனை தடைகள்.

இந்த விஷயத்தில் அந்த நாட்களில் ஒரேயொரு விதிவிலக்காக சீனா, ஓரளவுக்கு மலிவு விலை ஆயுதங்களையும் ராணுவ சாதனங்களையும் இலங்கைக்கு கொடுத்து வந்தது. அப்போதெல்லாம் இந்தியா எதையும் கொடுக்கவில்லை. சில விமானங்களை வாங்குவதற்கு ரஷ்யா, கடன் வசதி செய்து கொடுத்தது. ஆனால் விமானங்களின் விலை, பட்டியலிடப்பட்ட முழு விலை! அதில் சலுகை ஏதும் இல்லை.

இலங்கை போன்ற ஒரு பணம் கொழிக்காத நாடு ஒன்றுக்கு இப்படியான ராணுவ சப்ளை தடை இருந்தால், அதே நேரத்தில் உள்நாட்டு யுத்தத்தில் விடுதலைப் புலிகள் போன்ற ஒரு இயக்கத்துடன் எப்படி யுத்தம் புரிவது? அதனால்தான், இலங்கை ராணுவம் அடி-மேல்-அடி வாங்கிக் கொண்டிருந்தது.

அமெரிக்கா ஆபரேஷன் பாலன்ஸ் ஸ்டைல் மூலமாக இலங்கைக்குள் பிரவேசிக்கும் முன்னர், இந்த ஆயுத விநியோக தடைகளை கொஞ்சம் தளர்த்த வேண்டியிருந்தது என்பதிலிருந்தே மனித உரிமை மீறல்கள் பற்றிய அறிக்கைகளின் முக்கியத்துவம் புரியும். அமெரிக்க மனித உரிமை கண்காணிப்பாளர்களின் அறிக்கை ஒன்று ஆபரேஷன் பாலன்ஸ் ஸ்டைல் தொடங்குவதக்கு முன், அமெரிக்க செனட் பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் அந்த வருட புள்ளிவிபரங்கள், கடந்த கால புள்ளிவிபரங்கள், இரண்டுக்கும் இடையிலான விகிதாசாரம் என்று பல தரவுகள் தரப்பட்டிருந்தன. அந்த அறிக்கையின் இறுதியில் இருந்த வாக்கியம்: Conclusion: The Sri Lankan Government is Seriously addressing it’s unhappy history of Human Rights Violations

இந்த வாக்கியம்தான் அமெரிக்காவின் ஆபரேஷன் பாலன்ஸ் ஸ்டைல் இலங்கைவரை தடையில்லாமல் செல்ல பாதை போட்டுக்கொடுத்தது.

இதில் ஒவ்வொரு தமிழரும் அவசியம் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் என்ன தெரியுமா?

அமெரிக்க அரசு இலங்கை அரசுக்கு மாமனா? மச்சானா? அல்லது விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இலங்கை அரசுக்கு உதவ வேண்டும் என்று ஏதாவது வேண்டுதலா?

எதுவும் கிடையாது. அவர்கள் (அமெரிக்கர்கள்) முதலில் அப்ரோச் பண்ணியது விடுதலைப் புலிகளைத்தான்.

அமெரிக்க ஸ்டேட் டிபார்ட்மென்ட் மூலம் அந்த அப்ரோச் நடந்தது. அந்த நாட்களில் (1995 இறுதியில்) அமெரிக்க செகிரெடரி ஆ.ப் ஸ்டெட் ஆக இருந்தவர், வாரென் கிரிஸ்டோஃபார் (மேலே போட்டோ பார்க்கவும்). விடுதலைப் புலிகள் ஆதரவாளரான வாஷிங்டன் ப்ரொஃபெசர் ஒருவர் ஊடாக ஐரோப்பிய நாடு ஒன்றில் இருந்த புலிகளின் பிரதிநிதியை அப்ரோச் செய்தார்கள். அந்த விபரம் பிரபாகரனுக்கும் சொல்லப்பட்டது.

வாஷிங்டனில் ஸ்டேட் டிபார்ட்மென்ட்டின் ஆசிய விவகார தலைவர், மற்றும் சில உயரதிகாரிகளுடன் சந்திப்பு ஒன்றுக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுக்கப்பட்டது.

அந்த சந்திப்பில் கலந்துகொள்ள விடுதலைப் புலிகள் ஆதரவாளரான வாஷிங்டன் ப்ரொஃபெசர் அனுப்பி வைக்கப்படுவார் என விஷயம் தெரிந்தவர்கள் நினைத்திருக்க, பிரபாகரன் என்ன செய்தாரென்றால், ஐரோப்பிய நகரம் ஒன்றில் வசித்த ஒருவர் தலைமையில் 3 பேரை வாஷிங்டனுக்கு அனுப்பி வைத்தார்.

பிரபாகரன் அனுப்பி வைத்த நபர், அவரது மனைவி மதிவதனியின் நெருங்கிய உறவினர்.

அந்த சந்திப்புக்கு முன், ஸ்டேட் டிபார்ட்மென்ட் அதிகாரிகள், இந்த உறவினர் தொடர்பான ‘பேக்ரவுன்ட் செக்யூரிட்டி செக்’ ஒன்றை செய்து பார்த்தபோது, வாஷிங்டன் அதிகாரிகளுக்கு தலை சுழன்றது!

(தொடரும்)

Share.
Leave A Reply

Exit mobile version