அமெரிக்க போர் விமானங்கள் நேற்று முதல் ஈராக்கில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது தொடர்ந்து விமானத் தாக்குதலை நடத்தி வருகின்றன. வடக்கு ஈராக்கில் இந்தத் தாக்குதல் நடந்து வருகிறது. யசிதி பூர்வீகக் குடிமக்களைக் காக்கும் வகையில் தீவிர விமானத் தாக்குதலை அமெரிக்கா நடத்தி வருகிறது. 2வது நாளாக இந்தத் தாக்குதல் நேற்றும் தொடர்ந்தது.

சிஞ்சார் மலைப் பகுதியில் புகலிடம் அடைந்துள்ள யசிதி பூர்வீகக் குடிமக்களை தீவிரவாதிகள் மிகக் கொடூரமாகத் தாக்கி வருகின்றனர். குழந்தைகளைக் கொடூரமாக கொன்று குவித்துள்ளனர். இதையடுத்து அமெரிக்கா, தனது விமானப்படை மூலம் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த அதிபர் ஒபாமா அனுமதி கொடுத்தார். இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை தாக்குதல் தொடங்கியது.

சிறுபான்மையினரான யசிதி இனத்தவரை ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப் போவதாகவும் தீவிரவாதிகள் மிரட்டியுள்ளனர். இதனால் பதட்டம் தொடர்கிறது. தற்போது அமெரிக்க விமானத் தாக்குதலில் எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது உறுதியாகத் தெரியவில்லை.

இதற்கிடையே, அமெரிக்கா மற்றும் ஈராக் அதிகாரிகள் விமானங்கள் மூலம் யசிதி இனத்தவருக்கு உணவுப் பொருட்களைப் போட்டு வருகின்றனர்.

சிஞ்சார் மலையில் ஆயிரக்கணக்கான யசிதி இனத்தவர் அடைக்கலம் புகுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது அமெரிக்கா சிறிய அளவிலான விமானப்படைத் தாக்குதலை மட்டுமே நடத்தி வருகிறது. அதேசமயம், ஈராக்கில் ராணுவ வீர்ரகளை அனுப்பி தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல் நடத்தாது என்று அந்த நாடு தெளிவுபடுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version