2009-ம் ஆண்டு பிப்ரவரி மாத நடுப் பகுதியில், யுத்தம் முழுமையாக முடிவதற்கு கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு முன், வன்னியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது ஹை-ப்ரஃபைல் ஆயுதத்தை பயன்படுத்தும் முடிவை எடுத்தார். வான் புலிகளின் இரு விமானங்களை வைத்து, தற்கொலை தாக்குதல் ஒன்றை நடத்துவதுதான் அந்த முடிவு.

2009-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே, யுத்தத்தின் போக்கு முற்று முழுவதாக விடுதலைப் புலிகளுக்கு பாதகமாகவே போய்க்கொண்டு இருந்தது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னி பகுதியில் முக்கிய நகரங்கள் பலவற்றை இழந்தாகி விட்டது. யுத்தத்தை நடத்திய விடுதலைப் புலிகளின் தளபதிகள், மற்றும் யுத்தம் புரிந்த போராளிகளின் மோரல் மிக மோசமான அளவுக்கு போய் விட்டிருந்தது.

ஒரு நகரத்தை ராணுவம் தாக்க தொடங்குகிறது என்றால், அங்கே நின்று யுத்தம் புரிந்து ராணுவத்தை பின்வாங்க வைக்கலாம் என்ற நம்பிக்கை களத்தில் நின்ற விடுதலைப் புலிகளில் 10 சதவீதமானவர்களுக்கு கூட இருக்கவில்லை. “இந்த நகரத்தை கைவிட்டு பின்வாங்க உத்தரவு எப்போது வரும்?” என்ற கேள்வி, யுத்தம் தொடங்கிய நாளே எழுந்தால் எப்படியிருக்கும்?

அப்படித்தான் இருந்தது அங்கே நிலைமை!

இந்த மனநிலையை மாற்ற வேண்டும் என்றால், விடுதலைப் புலிகளுக்கு ‘பெரிய வெற்றி’ ஒன்று தேவைப்பட்டது.

‘பெரிய வெற்றி’ என்றால், 2001-ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதி நடந்த கொழும்பு விமான நிலைய தாக்குதலில் கிடைத்தது போன்றதொரு வெற்றி.

2001-ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதி நடந்த தாக்குதலை, விடுதலைப் புலிகளின் 14 கரும்புலிகள் (தற்கொலை தாக்குதல் நடத்தும் பிரிவு) நடத்தினார்கள். அதில், கொழும்பு விமான நிலையம், மற்றும் அதனுடன் இணைந்திருந்த இலங்கை விமானப்படையின் பிரதான விமானத் தளம் ஆகியவற்றில், 11 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் முழுமையாக அழிக்கப்பட்டன (1 Mi-17 attack helicopter, 1 Mi-24 attack helicopter, 3 K-8 jet trainers, 2 Kfir fighter jets, 1 MiG-27 fighter jet, 3 Airbuses). 14 விமானங்கள் சேதமடைந்தன (5 K-8 jet trainers, 5 Kfir fighter jets, 1 MiG-27 fighter jet, 2 Airbuses, 1 other military aircraft).

அந்த தாக்குதலின் பின் இலங்கை விமானப்படை தற்காலிகமாக இயங்க முடியாத நிலைக்கு சென்றது. அதையடுத்தே, 2002-ம் ஆண்டு சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு இலங்கை அரசு சம்மதித்தது.

2009-ம் ஆண்டு பிப்ரவரியில் அப்படியொரு திருப்பம்தான், பிரபாகரனுக்கு தேவைப்பட்டது.

வன்னியில், விடுதலைப் புலிகள் பின்வாங்கி, பின்வாங்கி தங்கியிருந்த சிறிய பகுதியில் இருந்து அப்படியொரு தாக்குதலை நடத்தி ராணுவத்தை திணற வைக்க முடியாது என்பது நன்றாகவே விடுதலைப் புலிகளுக்கு புரிந்திருந்தது. தாக்குதல் நடத்துவது என்றால், கொழும்புவில் நடத்த வேண்டும். 2001-ம் ஆண்டு ஏற்படுத்தியது போன்ற பெரிய சேதத்தை ஏற்படுத்த வேண்டும்.

அப்படியொரு நிலை ஏற்பட்டால்தான், இலங்கை அரசு யுத்த நிறுத்தத்துக்கு சம்மதிக்கும். யுத்த நிறுத்தம் ஏற்பட்டால்தான், புலிகளின் கைவசம் இருந்த சொற்ப இடங்களையாவது, தக்க வைத்துக் கொள்ளலாம். மூச்சுவிட சிறிது அவகாசமாவது கிடைக்கும்.

இதையடுத்தே, வான் புலிகளின் விமானங்களை வைத்து, தற்கொலை தாக்குதல் ஒன்றை கொழும்புவில் நடத்தி, பெரிய சேதத்தை ஏற்படுத்துவது என்ற முடிவு, பிரபாகரனால் எடுக்கப்பட்டது.

இந்த முடிவு, போர்க்களத்தில் நின்று யுத்தம் புரிந்துகொண்டிருந்த விடுதலைப் புலிகளின் அனைத்து முக்கிய தளபதிகளுக்கும் சொல்லப்படவில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்த பிரபாகரனின் தரையடி பங்கர் ஒன்றுக்கு அழைக்கப்பட்ட 4 தளபதிகளுக்கும், வான் புலிகள் பிரிவை சேர்ந்த சிலருக்கும் மட்டுமே பிரபாகரனால் சொல்லப்பட்டது.

இந்த 4 தளபதிகளில் ஒருவர், விடுதலைப் புலிகளின் கடல்புலிகள் பிரிவுக்கு தலைவராக இருந்த சூசை. அவருக்கு வான்புலிகள் பிரிவு பற்றி ஆரம்பத்தில் இருந்தே அவ்வளவாக நல்ல அபிப்பிராயம் கிடையாது. வான்புலிகளை வைத்து பெரிதாக எதையும் சாதிக்க முடியாது என்பதே அவரது தனிப்பட்ட நம்பிக்கையாக இருந்தது என, முன்பு கடல்புலிகள் பிரிவில் இருந்து, தற்போதும் உயிருடன் உள்ளவர்கள் சொல்கிறார்கள்.

இதனால், வான் புலிகளின் விமானங்களை வைத்து, தற்கொலை தாக்குதல் ஒன்றை கொழும்புவில் நடத்துவது பற்றிய பிரபாகரனின் திட்டத்தை அவர், பேசாமல் கேட்டுக் கொண்டார். அவ்வளவுதான்.

மற்ற மூன்று தளபதிகளும், இந்த திட்டத்துக்கு மாற்று திட்டம் ஒன்றை சொல்லும் நிலையில் இல்லை. அப்படியொரு மாற்றுத் திட்டமும் யாரிடமும் இல்லை.

பொதுவாகவே விடுதலைப் புலிகள் இயக்கத்தில் எந்த முடிவும் பிரபாகரனாலேயே எடுக்கப்படுவது வழக்கம். அதற்கு கடும் எதிர்ப்பு எந்த தளபதியிடமும் இருந்து வராது. கடந்த காலங்களில் கடுமையாக எதிர்த்து கருத்து சொன்ன ஓரிருவரும், பதவிக் குறைப்பு செய்யப்பட்டோ, இயக்கத்துக்குள் டம்மி ஆக்கப்பட்டோ இருந்தார்கள் என்பதால், மற்ற தளபதிகள், நமக்கு ஏன் வம்பு என தலையாட்டி விடுவது வழக்கம் என்பதை இப்போது ஒப்புக்கொள்கிறார்கள்.

அதுவும், தமிழ்ச்செல்வன் அரசியல்துறை பொறுப்பாளராக உயிருடன் இருந்த நாட்களில், பிரபாகரனால் நடத்தப்படும் எந்தவொரு ஆலோசனைக் கூட்டத்துக்கும் (உளவுத்துறை கூட்டங்கள் தவிர்ந்த) அவரும் அழைக்கப்படுவது வழக்கம்.

அந்தக் கூட்டங்களில் தனது முடிவை முதலில் கூறுவார். அடுத்த விநாடியே தமிழ்ச்செல்வன் அதை ‘ஆஹா.. ஓஹோ..’ என புகழத் தொடங்கிவிடுவார். அதன்பின் மற்றவர்கள் எதிர்த்து வாய் திறக்க முடியாது.

ltte-20140729-4பிரபாகரன், ஆன்டன் பாலசிங்கத்துடன், கே.பி.

வாய் திறந்தால் என்னாகும் என்பதை, 2002-ம் ஆண்டு இயக்கத்துக்குள் டம்மி ஆக்கப்பட்ட கே.பி.-யிடம் (குமரன் பத்மநாதன், அல்லது செல்வராசா பத்மநாதன்) கேட்டால் தெரியும்.

விடுதவைப் புலிகள் இயக்கத்துக்குள் ‘டம்மி’ ஆக்கப்படுவது என்பது மோசமான தண்டனை. கே.பி.யை பொறுத்தவரை, 2002-ம் ஆண்டுக்கு முன் புலிகள் இயக்கம் பெற்ற பல வெற்றிகளின் பின்னணியில் இருந்த முக்கிய காரணங்களில் ஒன்று, அவரால் திறமையாக அனுப்பி வைக்கப்பட்ட ஆயுதக் கப்பல்களில் இருந்த ஆயுதங்கள்.

2002-ம் ஆண்டு அவர் டம்மி ஆக்கப்பட்டபோது, (அவரது அதிஷ்டம், வெளிநாட்டில் இருந்ததால்) மாதா மாதம் சிறிய தொகை ஒன்றை கே.பி.க்கு பென்ஷனாக கொடுக்க மலேசியாவில் புலிகளின் நிதிக்கு பொறுப்பாக இருந்த ஒருவரிடம் உத்தரவிட்டார் பிரபாகரன். அவரும் இழுத்து, இழுத்து போக்கு காட்டியபடி அந்த சிறிய தொகையை கொடுப்பார்.

அப்படி நிதி கொடுத்தவர் இப்போது எங்கே?

இலங்கை அரசின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்த காரணத்தால் விடுவிக்கப்பட்டு, கொழும்பு புறநகர பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசிக்கிறார். கே.பி. தற்போது கிளிநொச்சியில் வசிக்கிறார், – தமிழ்ச்செல்வன் உயிருடன் இருந்தபோது வசித்த அதே வீட்டில்!
லாரன்ஸ் திலகர்

லாரன்ஸ் திலகர்

டம்மி ஆக்கப்பட்ட மற்றொருவர், விடுதலைப்புலிகளின் ஐரோப்பிய செயல்பாடுகளுக்கு பொறுப்பாக பாரிஸில் இருந்த லாரன்ஸ் திலகர்.

விடுதலைப் புலிகள் இலங்கை அரசுடன் நடத்திய ஆரம்பகால பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டவர் இவர். ஐ.நா.-வின் இணை அமைப்பு நடத்திய கூட்டத்தில்கூட புலிகளின் பிரதிநிதியாக கலந்து கொண்டவர்.

இவரை டம்மி ஆக்க முடிவு செய்யப்பட்டது. வன்னிக்கு அழைக்கப்பட்டார். வன்னியில் இவருக்கு எந்த பணியும் கொடுக்கப்படவில்லை. சில வாரங்கள் கடந்த நிலையில், “இவர் சும்மாதானே இருக்கிறார்” என கூறி ஒரு பணி கொடுக்கப்பட்டது. அந்த பணி என்ன தெரியுமா? விடுதலைப் புலிகளின் அலுவலக காம்பவுண்ட் ஒன்றுக்குள் பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் பணி! தோட்டக்காரர் வேலை.

2009-ல் யுத்தம் முடிந்தபின் இலங்கை ராணுவத்திடம் சரணடைய சென்றவர்களில் இவரும் ஒருவர்.

டம்மி ஆக்கப்பட்ட மற்றொருவர் யோகரட்ணம் யோகி. தமிழ்ச்செல்வனுக்கு முன்பு இருந்த அரசியல் பிரிவு தலைவர்.

பிரிட்டனில் படித்தவர். இவரும், விடுதலைப் புலிகள் இலங்கை அரசுடன் நடத்திய ஆரம்பகால பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டவர். இந்திய அமைதிப்படை ஒரு தடவை பிரபாகரனை சுற்றிவளைத்த நிலையில், சாதுரியமாக இந்திய ராணுவத்துக்கு போக்கு காட்டி பிரபாகரனை தப்ப வைத்தவர் இந்த யோகி.

பிரபாகரனுடன், யோகரட்னம் யோகி

விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் இறுதியாக வன்னி சென்றபோது, கிளிநொச்சி நகரில் காரில் சென்றுகொண்டிருந்தபோது, வீதியில் யோகியை பார்த்தார். வீதியில் என்ன செய்துகொண்டிருந்தார் யோகி?

மளிகைக்கடையில் பொருட்கள் வாங்கி, தமது பழைய சைக்கிளின் கேரியரில் வைத்து கட்டிக்கொண்டு வேகாத வெய்யிலில் சென்று கொண்டிருந்தார்.

வீதியில் காரை நிறுத்தி அவருடன் பேசிய ஆன்டன் பாலசிங்கம் வீடு சென்றபின், பிரபாகரனை தொடர்புகொண்டு, “அவர் முன்பு வகித்த பதவிக்காவது மதிப்பு கொடுக்க வேண்டும்” என்று கூறியபின், இன்று மாலையே புலிகள் இருவர் மோட்டார் பைக் ஒன்றை கொண்டுவந்து யோகியிடம் கொடுத்துவிட்டு சென்றார்கள்.

2009-ல் யுத்தம் முடிந்தபின் இலங்கை ராணுவத்திடம் சரணடைய சென்றவர்களில் இவரும் ஒருவர்.

புலிகள் அமைப்பின் ‘டம்மியாக்கல்’ எப்படியானது என்பது எப்படியானது என்பது இப்போது புரிகிறது அல்லவா? இதனால், 2009-ம் ஆண்டு பிப்ரவரி நடுப்பகுதியில் பிரபாகரன், வான் புலிகளின் இரு விமானங்களை வைத்து, தற்கொலை தாக்குதல் ஒன்றை நடத்துவது என்ற முடிவை கூறியபோது, 4 தளபதிகளும் எதிர் கருத்து எதையும் சொல்லவில்லை.

ஆனால், வான்புலிகள் தரப்பில் இருந்து அந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், அதிலுள்ள பெரிய மைனஸ் பாயின்ட் ஒன்றை பிரபாகரனிடம் சுட்டிக் காட்டினார்கள். (தொடரும்)

-ரிஷி- விறுவிறுப்பு-

ஈழப் போரின் இறுதி நாட்கள்-32: இறுதி யுத்தத்தில் வான் புலிகளுக்கு என்ன நடந்தது?-12

ஈழப் போரின் இறுதி நாட்கள்-31: இறுதி யுத்தத்தில் வான் புலிகளுக்கு என்ன நடந்தது?-11

 

முன்னைய தொடர்களை பார்வையிட இங்கே அழுத்தவும்

Share.
Leave A Reply

Exit mobile version