வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் அத்துமீறி உட்புகுந்த கடற்படை வீரரொருவர் அவ்வீட்டில் வசித்த இரு பிள்ளைகளின் தாயாரை பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்த முற்பட்டுள்ளார்.

ஆனால் அயலவர்களின் உதவியுடன் குறித்த கடற்படைவீரர் மடக்கிப் பிடிக்கப்பட்டு பளைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ. வகாப்தீன் கட்டளையிட்டுள்ளார்.

jaffna_sippai_4இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி விநாயகபுரம் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நேற்று அதிகாலை 1 மணியளவில் கடற்படைவீரர் ஒருவர் உட்புகுந்து அவ் வீட்டில் வசித்த  இரு பிள்ளைகளின் தாயாரின் வாயைப் பொத்தி பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்த முற்பட்டுள்ளார். குறித்த பெண்ணுக்கு மூன்று மற்றும் ஒரு வயதுடைய இரு குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இச் சம்பவம் இடம்பெற்றபொழுது இப்பெண்ணின் கணவர் வீட்டுக்கு வெளியே மணலில் படுத்துறங்கியுள்ளார். இதனை சாதகமாகப் பயன்படுத்திய கடற்படை வீரர் அப்பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்த முற்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த பெண் எழுப்பிய அவலக்குரலினால் அயலவர்கள் அங்கு விரைந்து சென்று கடற்படை வீரரை மடக்கிப் பிடித்து நையப்புடைத்து கட்டி வைத்துள்ளனர். இதன்பின்னர் இச் சம்பவம் தொடர்பாக பளைப் பொலிஸாருக்குப் பொது மக்கள் தெரியப்படுத்தியுள்ளனர்.
உடனடியாக அவ்விடத்திற்குச் சென்ற பொலிஸாரிடம் அதிகாலை 2.30 மணியளவில் கடற்படை வீரர் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இவரை பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.இதன் பின்னர் நேற்றுக் காலை சம்பவம் இடம்பெற்ற வீட்டில் வசித்தவர்களை பளைப் பொலிஸார் விசாரணைக்காக அழைத்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ. வகாப்தீன் கட்டளையிட்டுள்ளார். இதேவேளை கடற்படைவீரர் தங்களுடைய முகாமில் கடமையாற்றுகின்றார் எனவும் அவருக்கு மனநோய் எனவும் அப்பகுதிக்குப் பொறுப்பான கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இச் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு தமிழ்த் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான எஸ். சுகிர்தன், எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டு சம்பவ இடத்தினைப் பார்வையிட்டுள்ளனர்.

இத்தகைய சம்பவங்கள் இடம்பெறுவதை அதிகாரிகள் தடுத்து நிறுத்தவேண்டுமெனவும் குறித்த மாகாண சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version