யாழ்ப்பாணம் தீவுப்பகுதியில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்டிருக்கும் வறட்சி கார ணமாக குடிநீரின்றி தவிக்கும் மக்கள் அங்கிருந்து யாழ்.நகர் நோக்கி இடம்பெயர ஆரம்பித்துள்ளனர்.
ஊர்காவற்றுறை, புங்குடுதீவு, வேலணை, அல்லைப்பிட்டி, மண்டைதீவு ஆகிய தீவுப்பகுதிகளிலிருந்தே மக்கள் தற்காலிகமாக இடம் பெயர ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பாக ஊர்காவற் றுறையில் நன்னீர் இன்மையினால் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இந்த மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்கு எவரும் எவ்வித ஆக்கபூர்வமான
நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் இப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி யாழ். மாவட்டத்தின் தீவுப் பகுதி மக்களையும் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டத்தை சேர்ந்த மக்களையும் மிகவும் கடுமையாக பாதித்துள்ளது.
இந்நிலையில் அந்த மக்களின் குடிநீர்த் தேவையை மட்டும் பூர்த்தி செய்வதற்கான தற்காலிக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேவேளை, இதர நீர்த் தேரவகளுக்காக ஏனைய நீர்த்தேவையைப் பூர்த்தி செய்வதற்கு இம்மக்கள் நீண்டதூரம் அலைந்து திரிய வேண்டியுள்ளனர்.
குறிப்பாக யாழ். மாவட்டத்தின் தீவுகளான ஊர்காவற்றுறை, நெடுந்தீவு, புங்குடுதீவு, நயினாதீவு, வேலணை, எழுவைதீவு, அனலைதீவு போன்ற தீவுகளில் நன்னீரின்மையால் மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
இங்கு வசிக்கின்ற மக்களுக்கு குடிநீரை கூட வழங்குவதற்கான விசேட ஏற்பாடுகள் எவையுமே இன்னமும் செய்துகொடுக்கப்படவில்லை. தீவுப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் குளிப்பதற்கும் உடைகளை கழுவுவதற்கும் யாழ். நகரை நோக்கி செல்லவேண்டிய நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலைமை கடந்த மூன்று வாரங்களாக ஏற்பட்டுள்ள பொழுதிலும் இன்னமும் மக்களின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை.
ஊர்காவற்றுறையைப் பொறுத்தவரையில் மக்கள் குடிப்பதற்கு நீரின்றி அவதிப்படுகின்றனர். இந்த மக்களுக்கு நீர் வழங்குவதற்காக பயன்படுத்தப்பட்ட நன்னீர் கிணறுகளும் வற்றியுள்ளதால் நீர்விநியோகம் பாதிப்படைந்துள்ளது.
இதேவேளை விவசாயிகளின் தொழில் நடவடிக்கைகளும் முற்றாகப் பாதிப்படைந்துள்ளது. ஆனால் பாதிப்புக்களை அளவீடு செய்து அந்த மக்களின்நீர்த்தேவையைப் பூர்த்தி செய்வதற்கான முயற்சிகளை யாழ். மாவட்ட செயலகம் இன்னமும் மேற்கொள்ளாமையினால் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் தீவுப்பகுதிகளுக்கு விஜயம் செய்கின்ற அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்ற பொழுதிலும் இன்னமும் மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் கூட கிடைக்கவில்லை.
தீவுகளில் குடிநீர்ப் பிரச்சினை அதிகமாக இருப்பதால் இந்த மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு விசேட திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என புத்திஜீவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, இங்கு வாழும் மக்கள் குளிப்பதற்கும், உடைகளைக் கழுவுவதற்கும் உவர்நீர் கூடக் கிடைக்காமையால் ஒரு மனிதன் பெற்றுக்கொள்ள வேண்டிய எந்தவொரு அடிப்படை வசதியுமின்றி மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
இந்த குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து தமது சொந்தச் செலவில் நீரைக் கொண்டு செல்வதுடன் தனியார் நீர் வியாபாரிகளிடம் ஒரு லீற்றர் நீரை சுமார் 2 ரூபா பணம் கொடுத்து நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பெற்று வருகின்றனர்.
இதேவேளை, தீவுப்பகுதிகளில் உள்ள குளங்களும் ஏனைய நீர்ப் படுக்கைகளும் முற்றாக வற்றியுள்ளதால் இவற்றிலிருந்து மக்கியும் புழுதியும் காற்றில் பறக்கின்றது. இந்த புழுதி இங்கே வாழுகின்றவர்களின் உடம்பில் ஒட்டி சருமநோய்களை ஏற்படுத்துகின்றது.
இதேவேளை, இந்த மக்களுக்கான குடிநீர் விநியோகத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வந்த நன்னீர் வில்லையிலிருந்து பெறப்பட்ட நிலக்கீழ் நீர் வற்றியுள்ளதால் இக்கிணற்றிலிருந்தும் நீரைப் பெற்றுக்கொள்ள துர்ப்பாக்கிய நிலை தற்பொழுது தோன்றியுள்ளது.
வேலணை, சாட்டி, அல்லைப்பிட்டி ஊர்காவற்துறை போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்களும் குடிநீரைப் பெற்றுக்கொள்ள முடியாமல் பாதிப்படைந்துள்ளனர். அத்துடன் சிலர் இடம் பெயர்ந்து யாழ்ப்பாணம் நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தீவுப்பகுதிகளுக்கு அங்குசெயற்பட்டு வருகின்ற பிரதேச சபைகளால் நீர்விநியோகத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் குடாநாட்டில் செயற்படுகின்ற சகல பிரதேச சபைகளும் உதவவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் ஏனைய பிரதேச சபைகளின் பூரணமான ஒத்துழைப்பின்மையால் நீர்ப்பிரச்சினை தொடர்வதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதுடன் பல மாணவிகள் பாடசாலைக்கு செல்வதில்லை எனவும் பொதுவாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் வரலாறு காணாத வரட்சி தற்பொழுது ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் பாரதிபுரம், கிருஸ்ணபுரம், மலையாளபுரம், அறிவியல்நகர், செல்வாநகர், ஸ்கந்தபுரம், முட்கொம்பன், உருத்திரபுரம், வேராவில், வலைப்பாடு, கிராஞ்சி, முழங்காவில், உமையாள்புரம், பரந்தன் போன்ற பகுதிகளில் குடிநீர்ப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்கள் குடிநீரைத் தேடி நீண்டதூரம் அலைந்து திரிகின்றனர். இதேபோல் நீர்விநியோகத்திற்கான வாய்க்கால் நீரும் வற்றியுள்ளதால் பொதுமக்கள் குளிக்க முடியாமல் அவஸ்தைப்படுகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் வறட்சியினால் 21 ஆயிர்ததுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 75 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
வட மாகாணத்தில் வறட்சியின் காரணமாக இரண்டரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் சுமார் ஐந்து லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 17 லட்சம் பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
இந்த மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்வதற்கும் விசேட வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, மாகாண அரசுகளினால் இதுவரை சீரானதும் நிரந்தரமானதுமான செயற்றிட்டங்கள் எவையும் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் மக்கள் ஆதங்கம் வெளியிட்டு வருகின்றனர்.
இது இவ்வாறிருக்க முல்லைத்தீவு மாவட்டத்தில் பல பிரதேசங்களில் கிணறுகள், குளங்கள், ஆறுகள் போன்றவற்றில் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதால் இங்கும் வரலாறு காணாத வரட்சி ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், கரிப்பட்ட முறிப்பு, மணவாளப்பட்டமுறிப்பு, மாங்குளம், ஒலுமடு, துணுக்காய், பாண்டியன்குளம், மல்லாவி போன்ற பகுதிகளில் விவசாய நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளன. ஒருசில பகுதிகளில் குடிநீரைத்தேடி மக்கள் நீண்டதூரம் அலையவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் வரட்சியால் பாதிக்கப்பட்ட சகலருக்கும் வரட்சி நிவாரணங்களை வழங்கவேண்டும் என்பதும் தீவுப்பகுதி மக்களின் குடிதண்ணீர் உள்ளிட்ட நீர்த்தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்யவேண்டும் என்பதும் இம்மக்களின் கோரிக்கையாகவுள்ளது.
யாழ். மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் தீவுப்பகுதி மக்களும் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் மிகவும் பாதிப்படைந்துள்ள நிலையில் தேசிய ரீதியில் வரட்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புள்ளிவிபர அறிக்கையில் எதுவுமே சுட்டிக்காட்டப்பட்டதாகத் தெரியவில்லை.
எனவே, வடக்கில் வரட்சியால் பாதிக்கப்பட்டுகின்றவர்களுக்கு குடிதண்ணீரையும் வரட்சி நிவாரணங்களையும் வழங்குவதற்கும் மத்திய அரசாங்கத்திடம் இருந்து இவற்றைப் பெற்றுக்கொடுப்பதற்கும் மாகாண முதலமைச்சரும் மாகாண விவசாய நீர்ப்பாசன அமைச்சரும் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே இந்த மக்களின் அவாவாக உள்ளது.
நமது புங்குடுதீவு விஜயத்தின் போது கண்டவை..
புங்குடுதீவு மடத்துவெளியில் உள்ள முருகன் கோயில் அருகாமையில் உள்ள கிணற்றில் தண்ணீருக்காய் வருசையில் காத்திருக்கும் மக்களும், மாக்களும்.
வெளிநாட்டில் உள்ளவர்கள்…. காசுகொடுத்து ஊரில் உள்ள கோயில்களை மட்டும் புதுப்பித்து அழகாக கட்டியுள்ளார்கள். கடவுளுக்கு அள்ளி அள்ளிக்கொடுக்கிறார்கள். அள்ளி அள்ளி செலவு செய்கிறார்கள். ஆனால் கடவுள்கள் யாருமே இதுவரை இவர்களுக்கு (தமிழர்களுக்கு) எதுவுமே செய்ததாக தெரியவில்லை.
இவர்களை பற்றி கடவுள்களுக்கு நல்லா தெரியும். இவர்கள் தங்களை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் என்பது கடவுளுக்கு தெரியாததா?
இதுதான் மடத்துவெளியில் உள்ள பள்ளிக்கூடம். இந்த பள்ளிக்கூடத்தை சுற்றியுள்ள பிரதேசங்களில் மக்கள் குடியிருப்புகளை காணவில்லை. (இருந்தவர்கள், இல்லாமல்போனவர்கள், கொஞ்சம் பேர் இருக்கிறார்கள்) மாடுகளை மட்டும்தான் காணக்கூடியதாக இருக்கிறது.
மக்கள் அற்ற பிரதேசமாக, வனாந்தரமாக காட்சியளிக்கும் நாம் வாழ்ந்த புங்கையூர். இங்கிருந்த மக்கள் எல்லோரும் வீடும் வேண்டாம், காணியும் வேண்டாம், அம்மாவும், அப்பாவும் வேண்டாம், காதலியும், கட்டிய மனைவியும் வேண்டாம் , வளர்த்த நாயும் வேண்டாம் என எல்லாவற்றையும் அனாதவராக விட்டு விட்டு வெளிநாட்டுக்கு போனால் காணும் என ஊரை விட்டே ஓடிவந்தவர்கள்.
இப்போ வெளிநாட்டிலிருந்து திரும்ப ஊருக்கு போய் பார்த்துவிட்டு… தங்கட காணிகள், வீடுகள் பறிபோய்விட்டதாம், அங்கு ஆமிக்காரன் குடிகொண்டிருக்கிறானாம் எனச்சொல்லிக் கொண்டு வெளிநாடுகளிலிருந்து தலையில் அடித்து அழுகிறார்கள்.
வெளிநாடுகளில் உள்ளவர்கள் தங்கள் ஊருக்கு போய் தங்கள் தங்கள் வீடுகளை, காணிகளை துப்பரவாக்கிக்கொண்டு வாழக்கூடிய வசதிகள் (மின்சாரம், தண்ணீர், போக்குவரத்து வசதி…) யாவும் இப்போ கிடை்திருக்கின்றது. போய் வாழலாம் .. ஆனால் போய் வாழமாட்டோம்.
எதாவது ஒரு காரணத்தை சொல்லிக்கொண்டு நாம் வெளிநாட்டில் வாழ்ந்து…. வெளிநாட்டிலேயே மண்டையை போடுவோம் என்பது தான் உண்மை.