இலங்கை அரசு, அமெரிக்காவிடமிருந்து நவீன ராணுவ தொழில்நுட்ப உதவியாக Night Vision கருவிகளை கேட்டபோது, எந்த ரக கருவிகளை கேட்டார்கள்?

நாம் ஏற்கனவே கூறியதுபோல G-1 கருவிகளை அமெரிக்கா இப்போது தயாரிப்பதில்லை. இன்று மார்க்கெட்டில் இருப்பவை G-2 அல்லது G-3 ரக கருவிகள்தான். G-3 விலை அதிகம். இந்த இரண்டையும் சேர்த்து, சுமார் 35 மாடல் கருவிகளை அமெரிக்கா தயாரிக்கிறது.

ஒவ்வொரு மாடலும் ஒவ்வொரு செயல்பாடு உடையது; வேறு வேறு புவியியல் பகுதிகளில் உபயோகிக்கப்படக் கூடியது; ஒவ்வொரு விதமான போர்முறைக்கு பயன்படக்கூடியது. அதில் சரியான மாடலை சரியான இடத்துக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் – அலாஸ்காவில் உபயோகிக்க உருவாக்கப்பட்ட மாடலை ஆபிரிக்காவில் உபயோகிக்க முயன்றால் டெக்னாலஜி சறுக்கிவிடும்.

அமெரிக்கா, வெளிநாட்டு ராணுவங்களுக்கு கொடுக்கும் மாடல்களில் இலங்கையில் உபயோகிக்கும் விதத்தில் தரை தாக்குதல் Night Vision Devices மாடல்கள் 6 இருந்தன. இவற்றைவிட, ஏவியேஷன் செக்டரில் உபயோகிக்கக்கூடிய மாடல் ஒன்று இருந்தது.

இதோ, அந்த விபரங்கள்-

21) INDIVIDUAL WEAPON NIGHT SIGHT 7 (AN/PVS-4)

AN/PVS-4 என்பது சிறிய, கைக்கடக்கமான, பேட்டரி சக்தியில் இயங்கக்கூடிய, Portable Electro-Optical Instrument. கையில் எடுத்துச் செல்லும் அளவில் சிறியது. தனிப்பட்ட ஆயுதங்களில் பொருத்தப்பட்டு இரவு நேரத்தில் குறிபார்த்துச் சுடுவதற்கு பயன்படுத்தப்படும் மாடல் இது. G-2 தொழில்நுட்பம்.

இந்த மாடல் மேலைநாட்டு ராணுவங்களில் பயன்படுத்தப்படுவது அநேகமாக M-14 மற்றும் M-16 ரைபிள்களில், M-60 எந்திரத் துப்பாக்கிகளில், M-249 ஸ்குவாட் ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகளில், M72A1 ராக்கெட் லோஞ்சர்களில் அல்லது M203 கிரானைட் லோஞ்சர்களில்.

இது ஒரு போர்ட்டபிள் மாடலாக இருப்பதால் இரவுநேர தரைத் தாக்குதலின்போது, கையில் எடுத்துச்செல்லும் இரவு நேர வேவு பார்த்தலுக்கும் (Handheld Made of Night Surveillance) பயன்படுத்தலாம். அத்துடன் நாங்கள் குறிப்பிட்ட ஆயுதங்களில் பொருத்துவது என்றால் இதற்காக தயாரிக்கப்பட்ட பிராக்கெட்டுகள், அல்லது கிளிப்புகள் இருக்கின்றன என்பதால் ஆயுதங்களில் எந்தவித மாற்றமும் செய்யாமல் சுலபமாக பொருத்தலாம் – அகற்றலாம்.

அமெரிக்க ராணுவ பயிற்சிக் கையேடுகளில் பரிந்துரைக்கப்பட்டுவது – 1 இன்பான்டரி படைப்பிரிவுக்கு குறைந்தபட்சம் 2 AN/PVS-4 கருவிகளாவது இருக்கவேண்டும் – இரவு நேர தாக்குதல்களுக்கு செல்லும்போது.

2) AN/PVS-5 Night Vision Goggles

இந்த மாடல் ஆயுதங்களில் பொருத்தும் வகையல்ல – தனிநபர் உபயோகத்துக்காக தயாரிக்கப்படுபவை. தரைப் போரின்போது தலையில் அணியும் வழமையான ஹெல்மெட்டிலோ (Standard Battle Helmet) அல்லது விமானப்படையினர் உபயோகிக்கும் Aviation Helmet-இலோ பொதுவாக அணிவார்கள்.

ஹெல்மெட் அணியாவிட்டால், இதிலுள்ள தலைப்பட்டி (headband) மூலம் நெற்றியில் அணியலாம்.

முன் பகுதியில் சிறியதாக ஒரு ஆப்டிகல் ஸ்பாட் வியூ லைட் (சிறிய டார்ச் லைட் போல) உண்டு – தரை தாக்குதல் இலக்குகளை தேடிச் செல்லும்போது வரைபடங்களை பார்ப்பதற்கோ, அல்லது விமானிகள், விமானத்தின் மீட்டர் வாசிப்புக்களையே பார்ப்பதற்கு இந்த சிறிய லைட் உபயோகப்படும்.

1980-களின் ஆரம்பத்தில் தயாரிக்கப்பட்ட AN/PVS-5 மாடலை அமெரிக்க ராணுவத்தில் அதிகமாக உபயோகிப்பவர்கள் படைப்பிரிவுத் தலைவர்கள், ராணுவ வாகனத் தொடர்களில் வாகனம் செலுத்துபவர்கள் அல்லது விமானிகள்.

AN/PVS-5 ரகத்திலேயே மூன்று வேறு வேறு மாடல்கள் அமெரிக்க ராணுவத்தினரிடம் பாவனையில் உள்ளன. G-2 தொழில்நுட்பம்.

அநேகமாக, நகர்ந்து தாக்கவேண்டிய  அவசியமுடைய  தாக்குதல்களில் பயன்படக்கூடிய சிறிய கைக்கடக்கமான மாடல். திறந்தவெளி தாக்குதல்களைவிட குளோஸ் ரேஞ்சில் தாக்கப்படவேண்டிய இலக்குகளை தாக்க செல்லும்போது நன்றாகப் பயன்படக்கூடியவை.

இந்த மாடல் எங்கே உபயோகிக்கப்படுகிறது, அல்லது, யார் உபயோகிக்கிறார்கள் என்பது பற்றி சற்றே அதிகமாக ஆராய்ந்து பார்த்தால், ஒரு விஷயம் தெரியவரும்.

அது என்னவென்றால், AN/PVS-5 ரக உபகரணங்களை, அமெரிக்க தரைப்படை, விமானப்படையை விட கடற்படையிலேயே அதிகமாக விநியோகித்திருக்கிறார்கள்.

அதற்கு காரணமும் உண்டு. FMF எனப்படும் US Fleet Marine Force-ல் சிறு படகுத் தாக்குதல்கள். ரோந்துகள் ஆகியவற்றில் இந்தக் கருவியை அதிகம் உபயோகிக்கிறார்கள் – கிட்டத்தட்ட அதே மாதிரியான உபயோகம் இலங்கையில் கடல் பகுதிகளில், முக்கியமாக கரைகளிலிருந்து 2 கி.மீ.க்கு இடைப்பட்ட பகுதிகளில் நன்றாக பயன்படக்கூடியது.

முள்ளிவாய்க்கால் பகுதியில், விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தை முடித்து வைத்ததில், அமெரிக்க தயாரிப்பு AN/PVS-5 ரக உபகரணங்களுக்கு அதிக பங்கு உண்டு!

விடுதலைப் புலிகளை ஒவ்வொரு இடமாக பின்வாங்க வைத்து, முள்ளிவாய்க்கால் என்ற சிறு பகுதிக்குள் கொண்டுவந்து முடக்கியது இலங்கை ராணுவம். மூன்று திசையிலும் ராணுவம் முற்றுகையிட்டு இருந்தது. நான்காவது திசையில் கடல். அதில் கடற்படை ரோந்துப் படகுகள்.

இது மிகவும் சிறிய பகுதி. பகல் நேரத்தில், இரு தரப்பும், எதிர்த் தரப்பை வெறும் கண்களால் பார்க்கும் அளவுக்கு சிறிய பகுதி. இதற்குள் ஏராளமான எண்ணிக்கையில் மக்கள் இருந்ததால், பகல் நேரங்களில் மக்கள் மத்தியில் புலிகள் மறைந்து இருந்தார்கள் (அதுதான், புலிகள் மக்களை அங்கிருந்து அகல விடவில்லை).

இரவு நேரங்களில், தரை மார்க்கமாக ராணுவ முற்றுகையை ஊடுருவிச் செல்ல புலிகள் முயன்றுகொண்டு இருந்தார்கள். அப்போது விடுதலைப் புலிகளின் அசைவுகளை இலங்கை ராணுவத்துக்கு காட்டிக் கொடுத்தவை AN/PVS-5 ரக உபகரணங்கள்தான். அதேபோல, இரவு நேரங்களில் கடல் மார்க்கமாக வெளியேற முயன்ற கடல்புலிகளின் படகுகளை ஸ்பாட் பண்ண உபயோகிக்கப்பட்டதும், இதே கருவிகள்தான்.

கடைசி நேர முயற்சியாக பிரபாகரனும், அவரது மெய்பாதுகாவலர்களும் இரவில் நந்திக்கடல் ஓரமாக வெளியேற முயன்றபோது, அங்கு அனுப்பி வைக்கப்பட்ட இலங்கை ராணுவ படையணிக்கு இவர்களது நடமாட்டங்களை கண்டுகொள்ள உபயோகமாக இருந்ததும், இதே அமெரிக்க தயாரிப்பு கருவிதான்.

(தொடரும்)
-ரிஷி-

தமிழுக்கு இது புதிது: Military Technology – இருளில் பார்க்கக்கூடிய ராணுவ சாதனங்கள் அல்லது NVG-1

Share.
Leave A Reply

Exit mobile version