மொனராகலை மாவட்டத்தின் – படல் கும்புர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அலுபொத்த, பங்களாதோட்டம் பிரதேசத்தில் தனது ஆறு வயது தங்கையை 13 வயது பாடசாலை சிறுமியான அக்கா கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவமானது நேற்று முன் தினம் மாலை இடம்பெற்றுள்ளதாகவும் சந்தேகத்தின் பேரில் அக்காவை படல்கும்புர பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் பெற்றோரிடமும் வாக்கு மூலங்களை அவர்கள் பதிவு செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண கேசரிக்கு தெரிவித்தார்.
சம்பவத்தில் 6 வயதான சாதிலா பானு என்ற சிறுமியே உயிரிழந்துள்ளதாகவும் படல்கும்புர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
தனது பெற்றோர்கள் தன்னை விட தனது தங்கைக்கு அதிக அன்பு காட்டுவது தொடர்பில் மனதில் இருந்த ஆத்திரத்தில் இந்த கத்திக் குத்து நடத்தப்பட்டுள்ளதாக படல்கும்புர பொலிஸார் நடத்தியுள்ள ஆர்ம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
நேற்று முன் தினம் குறித்த சிறுமியரின் தந்தை ‘ பூந்தி ‘ எனப்படும் இனிப்புப் பொருள் பார்சல் ஒன்றை வீட்டுக்கு வாங்கி வந்துள்ளதுடன் அதில் சிறியதொரு பகுதியை அக்காவுக்கும் ஏனைய பெரும்பாலான பகுதியை தங்கைக்கும் பிரித்துக்கொடுத்துள்ளார்.
இந்த சம்பவத்தில் அக்காவுக்கும் தங்கைக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்தே இந்த கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றிருக்க வேண்டும் எனவும் சிறுமியரின் தந்தை ஊடகங்களிடமும் பொலிஸாரிடமும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இந்த சிறுமியரின் தாய் வெளி நாடொன்றில் வேலை செய்து வந்துள்ள நிலையில் அண்மையிலேயே நாட்டுக்கு திரும்பியிருந்ததாகவும் மீண்டும் வெளி நாடு செல்ல தயாராக இருந்ததாகவும் தெரியவருகின்றது.
இந்த நிலையில் நீண்டகாலமாக மனதில் இருந்து வந்த ஆத்திரம் ஒன்றின் வெளிப்பாடாக கூட இந்த சம்பவம் இருக்கலாம் என குறிப்பிடும் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கத்திக்குத்துக்கு இலக்காகி சிறிது நேரத்தில் அந்த சிறுமி படல்கும்புர வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளதாகவும் சிறுமியின் உடலில் சுமார் 9 குத்துக் காயங்கள் காணப்பட்டதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கேசரிக்கு குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் கைது செய்யப்பட்ட 13 வயதான அக்கா நேற்று மாலை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட இருந்த நிலையில் மஜிஸ்திரேட் விசாரணைகள் மொனராகலை நீதிவான் நீதிமன்றினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
படல் கும்புர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு மென்பான போத்தல்களை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் குடை சாய்ந்தது: குரணையில் சம்பவம்
22-08-2014
இச்சம்பவம் நீர்கொழும்பு – சிலாபம் பிரதான வீதியில் குரணை பிரதேசத்தில் இடம்பெற்றது. கனரக வாகனத்தின் ஒரு பக்க டயர் (சில்லு) கழன்றதன் காரணமாக சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் வாகனம் குடை சாய்ந்துள்ளதாக தெரிய வருகிறது.
விபத்து காரணமாக கனரக வாகனத்தில் இருந்த மென்பான போத்தல்கள் வீதியில் சிதறி விழுந்து காணப்பட்டன. விபத்து காரணமாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை. நீர்கொழும்பு பொலிஸார் விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்ணில் மிளகாய்த்தூள் தூவி கொள்ளையர்கள் கைவரிசை: முல்லைத்தீவில் பெண்ணிடமிருந்து பணம் அபகரிப்பு
மீளக்குடியமர்ந்தவர்களுக்கான நிரந்தர வீட்டுத்திட்டத்திற்கான பணத்தை முல்லைத்தீவு வங்கியொன்றிலிருந்து பெற்றுக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது மிளகாய்த்தூளைத் தூவிய மர்ம நபர்கள் அப்பெண்ணிடமிருந்து பணத்தையும் பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.
முல்லைத்தீவு குமாரபுரம் பகுதியில் நேற்று நண்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த குமார் இலட்சுமிதேவி (வயது 35) என்ற பெண்ணிடமிருந்தே பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குமாரபுரத்தில் வசித்து வருகின்ற பெண்ணொருவர் இடம்பெயர்ந்தவர்களுக்கான வீட்டுத்திட்ட கொடுப்பனவை முல்லைத்தீவு நகரிலுள்ள வங்கியொன்றில் பெற்றுக் கொண்டு துவிச்சக்கர வண்டியில் திரும்பியுள்ளார்.
இதன்பொழுது குறித்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்ற இரு மர்ம நபர்கள் குறித்த பெண்ணின் கண்களில் மிளகாய்த்தூளைத் தூவிவிட்டு அவரிடமிருந்து பணத்தை பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர். முல்லைத்தீவுப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.