இலங்கையில் கூடிய விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படலாம் என்ற ஊகங்கள் அரசாங்கத்துக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஊடகங்களில் வெளியாகிவருகின்றன.
அந்தத் தேர்தலில் தனது மூன்றாவது தவணைக்காக மகிந்த ராஜபக்ஷ போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு மகிந்த ராஜபக்ஷவுக்கு சட்டப்படி தகுதியில்லை என்று நாட்டின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என். சில்வா சர்ச்சை ஒன்றைக் கிளப்பியுள்ளார்.
ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் இரண்டு தவணைகளுக்கு மேல் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது என்பதே இலங்கை அரசியலமைப்பின் ஏற்பாடாக இருந்தது.
எனினும், இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்துக்கட்டுவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த மகிந்த ராஜபக்ஷ, 2010-ம் ஆண்டில் மீண்டும் வெற்றிபெற்ற பின்னர், ஜனாதிபதி ஒருவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் ஆட்சியில் இருக்கலாம் என்பதற்கு வசதியாக புதிய சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிவிட்டார்.
ஆனால், அந்த புதிய திருத்தம் மகிந்த ராஜபக்ஷவுக்கு பொருந்தாது என்று, முதல் தவணையின்போது அவரை ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துவைத்த முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என். சில்வா கூறுகின்றார்.
‘அரசியலமைப்பின் பிரிவு 31 (2) இன்படி, மக்களால் 2 தடவைகள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு நபரும், அதன்பின்னர் அதே பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட தகுதி அற்றவர் என்று கூறப்பட்டுள்ளது…,அப்படியென்றால் அந்த நபர் தேர்ந்தெடுக்கப்பட்ட தினத்தன்றே அந்த தகுதியீனமும் உருவாகிவிடுகின்றது’ என்றார் முன்னாள் தலைமை நீதியரசர்.
2010-இல் தகுதியை இழந்துவிட்டார்’
மகிந்த ராஜபக்ஷ இரண்டாவது தவணைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 2010-ம் ஆண்டு ஜனவரி 27-ம் திகதியன்றே, அவர் இன்னொரு தடவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தகுதியற்றவர் நிலையை அடைந்துவிட்டதாகவும் சரத் என். சில்வா வாதிட்டார்.
’18-ம் அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம், மூன்றாவது தடவையும் தன்னால் ஜனாதிபதியாக வரமுடியும் என்று மகிந்த ராஜபக்ஷ எதிர்பார்க்கிறார். ஆனால் இந்தத் திருத்தத்தின் மூலம், அவருக்கு ஏற்பட்ட அந்த தகுதியீனம் மாறப்போவதில்லை’ என்றார் முன்னாள் நீதியரசர்.
குறித்த அரசியலமைப்புத் திருத்தம் மகிந்த ராஜபக்ஷவுக்குப் பின்னர் பதவியேற்கவரும் ஜனாதிபதிகளுக்கேப் பொருந்தும் என்றும் என்றும் அவர் வாதிட்டார்.
மகிந்த ராஜபக்ஷவின் 6 ஆண்டுகால பதவிக்காலம் முடியும் 2016-ம் ஆண்டு நவம்பர் 19-ம் திகதிக்கு மூன்று 3 மாதங்களுக்கு முன்னரே புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் சரத் சில்வா விளக்கமளித்தார்.
1999-முதல் 2009 வரையான 10 ஆண்டு பதவிக் காலத்தில் சரத் என் சில்வா, அரசியல் ரீதியில் திருப்புமுனையாக அமைந்த பல்வேறு தீர்ப்புகளையும் அரசியலமைப்பு பொருள் விளக்கங்களையும் வழங்கியுள்ளார்.
வடக்கு கிழக்கு பிராந்தியங்கள் மீண்டும் தனித்தனி மாகாணங்களாக பிரிக்கப்பட்டமை, சந்திரிகாவின் இரண்டாவது தவணை ஆட்சி ஒரு ஆண்டு முன்கூட்டியே முடிவடைந்தமை, மகிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட ஹெல்பிக் ஹம்பாந்தோட்டை விவகாரம் தொடர்பான பொலிஸ் விசாரணைக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டமை உள்ளிட்ட தீர்ப்புகளுக்கு சரத் என் சில்வாவே காரணமாக இருந்துள்ளார்.
சந்திரிகா அரசு விடுதலைப் புலிகளுடன் செய்துகொண்ட பீ-டொம் என்கின்ற சர்வதேச சுனாமி உதவிகளை பங்கிடும் நடைமுறை செல்லாது என்று அறிவிக்கப்பட்டமை, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் ஆளுங்கட்சிக்கு தாவியபோது அவர்கள் நாடாளுமன்ற பதவியை இழக்கமாட்டார்கள் என்று விளக்கம அளிக்கப்பட்டமை போன்ற தீர்ப்புகளும் சரத் சில்வாவினாலேயே அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஜீ.எல். பீரிஸ் மறுப்பு
இதேவேளை, முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என். சில்வா வெளியிட்டுள்ள கருத்துக்களை வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நிராகரித்துள்ளார்.
ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதியாக பதவி வகிப்பதில் இருந்த தடை, அரசியலமைப்பின் 18-ம் திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்டுவிட்டதாகவும் சட்டத்துறை பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் உள்ளூர் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.