அடுத்த மாதம் நடக்­கப்­போ­வது ஜனா­தி­பதித் தேர்­த­லாக இருந்­தாலும், அதன் போக்கு என்­னவோ, கட்சிகளை உடைப்­ப­தற்­கான, போரா­கவே நடந்து கொண்­டி­ருக்­கி­றது.

வரப்­போகும் தேர்தல், ஆளும்­கட்­சிக்கும் எதி­ர­ணிக்கும் இடையில் மிகக் கடு­மை­யான போட்­டி­யாக அமைந்துள்ள சூழலில், கட்­சி­களை உடைத்தும், ஆட்­களை இழுத்தும் வெற்­றியைப் பெற்­று­விட வேண்டும் என்ற வெறி இரு­த­ரப்­பி­ன­ரி­டமும் காணப்­ப­டு­கி­றது.

இதன் விளை­வாக, இப்­போது வாக்­கா­ளர்­க­ளிடம் வாக்குக் கோரு­வதில் ஆர்வம் காட்­டு­வதை விட, மறு­த­ரப்பை உடைப்­பதில் தான் கூடுதல் கவனம் செலுத்­தப்­ப­டு­கி­றது.

யார் எப்­போது எந்தப் பக்கம் இருப்­பார்கள் என்றே அனு­மா­னிக்க முடி­யா­த­ள­வுக்கு, இலங்கை அர­சி­யலில் இப்­போது கட்சித் தாவல்கள் நடந்து கொண்­டி­ருக்­கின்­றன. இதற்கு முன்னர் இது­போன்­ற­தொரு அர­சியல் சூழல் எப்­போதும் நில­வி­ய­தில்லை.

ஆளும் கூட்­ட­ணியில் இருந்து, ஜாதிக ஹெல உறு­மய வில­கி­ய­தை­ய­டுத்து தொடங்­கிய இந்த கட்சித் தாவல்கள், ஜனா­தி­பதித் தேர்­த­லுக்குப் பின்­னரும் முடி­வுக்கு வரு­வ­தற்­கான அறி­கு­றிகள் தென்ப­ட­வில்லை.

Maithripala-Sirisenaஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பொதுச்­செ­ய­ல­ரா­கவும் சுகா­தார அமைச்­ச­ரா­கவும் பதவி வகித்த மைத்திரிபால சிறி­சே­ன வை, தமது பக்கம் இழுத்து பொது­வேட்­பா­ள­ராக அவரை முன்­னி­றுத்­தி­யது எதிரணியின் பெரும் வெற்­றி­யா­கவே கரு­தப்­ப­டு­கி­றது.

இது அர­ச­த­ரப்­புக்குப் பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யது. அதனால் தான், சுதந்­திரக் கட்­சியின் வர­லாற்றில் இடம்­பெற்ற மாபெரும் காட்டிக் கொடுப்பு என்று அமைச்சர் நிமால் சிறி­பால டி சில்வா, வர்­ணித்­தி­ருந்தார்.

அதற்குப் பழி­வாங்கும் வகையில், ஐ.தே.க.வின் பொதுச்­செ­ய­லா­ள­ராக இருந்த திஸ்ஸ அத்­த­நா­யக்­க­வுக்கு அர­ச­த­ரப்பு வலை வீசி­யது.

முதலில், அர­ச­த­ரப்­புக்குத் தாவப் போவ­தாகச் செய்­திகள் வெளி­யான போதும் அவர் அதனை மறுத்திருந்தார். எனினும், கடந்­த­வாரம் அவரை அர­ச­த­ரப்பு ஒரு­வ­ழி­யாகத் தம் பக்கம் இழுத்துக் கொண்­டது.

கத்­திக்குக் கத்தி, இரத்­தத்­துக்கு இரத்தம் என்று பழி தீர்ப்­பது போலவே சுதந்­திரக் கட்சிப் பொதுச்செயலாளருக்குப் பதி­லாக, ஐ.தே.க.வின் பொதுச்­செ­ய­லா­ளரை இழுத்துக் கொண்­டது ஆளும்­கட்சி.

இது­கு­றித்துக் கருத்து வெளி­யிட்ட ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ, ஐ.தே.க.வில் இருந்து ஆட்­களை இழுப்பது ஒன்றும் தமக்குப் பெரிய வேலை­யல்ல என்று பகி­ரங்­க­மா­கவே கூறி­யி­ருந்தார்.

திஸ்ஸ அத்­த­நா­யக்­க­வுடன் ஒரு கோப்பி அருந்தி அவரைத் தம்­பக்கம் இழுத்துக் கொண்­ட­தா­கவும், அதுபோல தான் நினைத்தால் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவைக் கூட ஒரு தேநீரைக் கொடுத்து இழுத்து விடுவேன் என்றும் அனு­ரா­த­புர கூட்­டத் தில் தெரி­வித்தார் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ.

ஒன்றை இழந்தால் இன்­னொன்றைப் பெற்றுக் கொள்ளும் அசாத்­தி­ய­மான திற மை ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு இருப்­ப­தாக, அமைச்சர் கெஹ­லிய ரம்­புக்­வெல புகழ்ந்­தி­ருந்தார்.

இதி­லி­ருந்து ஒன்றை விளங்கிக் கொள்ள முடிந்­தது. ஆளும்­கட்­சிக்கு வாக்கு­களைப் பெற­மு­டியும் என்பதற்காக திஸ்ஸ அத்­த­நா­யக்­கவை ஆளும்­கட்சி தம்­பக்கம் இழுக்­க­வில்லை.

அர­சாங்­கத்தை விட்டுச் செல்­ப­வர்கள் இருந்­தாலும், அர­சாங்­கத்தில் இணைந்து கொள்­வோரும் இருக்கின்றனர், தமது செல்வாக்கு ஒன்றும் உடைந்து போக­வில்லை என்று காட்­டவே, அவரைத் தம்­பக்கம் இழுத்­தி­ருக்­கி­றது அர­சாங்கம்.

இந்த கட்சித் தாவல்­க­ளுக்குப் பத­வி கள், பல்­வேறு சலு­கைகள் பேரம் பேசப்­ப­டு­வ­தாக செய்­திகள் வெளியாகின்­றன.

இந்தப் பேரம் பேச­லுக்­கா­கவே, அர­சி­யலில் இருப்­போரும் உள்­ளனர்.

திஸ்ஸ அத்­த­நா­யக்­கவின் தாவலும், மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பாய்ச்­சலும், ஒப்­பீடு செய்யக் கூடி­ய­வை­யல்ல என்று அமைச்­சர்­களே கூறி­யி­ருக்­கின்றனர்.

மைத்­தி­ரி­பால சிறி­சேன, பணத்­துக்­காக எதி­ர­ணியின் பக்கம் தாவினார் என்றோ, பத­விக்­காக சென்றார் என்றோ கரு­து­வ­தற்­கில்லை. அதற்­கான சூழலும் இப்­போது இல்லை. அவர் ஜனா­தி­பதி பத­வியை அடைந்தாலும் கூட, 100 நாட்­க­ளுக்குள் அதனை இல்­லாமல் செய்­து­விடப் போவ­தாக வாக்­கு­றுதி அளித்­துள்ளார்.

பிர­தமர் பத­வியை அவ­ருக்கு வழங்க ஜனா­தி­பதி திட்­ட­மிட்­டி­ருந்தார் என்று அமைச்­சர்கள் கூறி­யுள்­ளனர். அது அவ­ருக்கும் தெரிந்­தி­ருக்கும். எனவே பத­விக்­காக எதி­ர­ணியின் பக்கம் அவர் சாய்ந்தார் என்­று­கூற முடி­யாது.

ஆனால், திஸ்ஸ அத்­த­நா­யக்­க­வுக்கு தாம் ஒன்­றுமே கொடுக்­க­வில்லை என்று ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ கூறி­யுள் ளார். என்­றாலும், அர­ச­த­ரப்­புக்குத் தாவிய ஒரு சில நாட்­க­ளி­லேயே சுகா­தார அமைச்சராகப் பத­வியை ஏற்றுக் கொண்டார்.

தான் எதற்­கா­கவும் விலை போக­மாட் டேன் என்று சில நாட்­க­ளுக்கு முன்­ன­ தா­கவே அறிக்கை வெளியிட்டவர் அவர்.

பணத்தைப் பெற்­றாரா இல்­லையா என்­ப­தை­விட, பத­வியைப் பெற்­றதன் மூலம், தாம் கட்சி தாவி­யதன் பின்­ன­ணியில் பத­விக்­கான பேரம் இருந்­துள்­ளது என்­பதை நிரூ­பித்துக் கொண்­டுள்ளார்.

தாம் இறந்த கிளி ஒன்றை இழந்து அழ­கிய பச்சைக் கிளி ஒன்றைப் பெற்­றி­ருப்­ப­தாக, ஹிரு­ணிகா பிரேமச்சந்­திர எதி­ர­ணிக்குத் தாவிய பின்னர், ஐ.தே.க. தலைவர் ரணில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அவர் இறந்த கிளி என்று குறிப்­பிட்­டது திஸ்ஸ அத்­த­நா­யக்­கவைத்தான்.

மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கட்சித் தாவல் போலவே, ஹிரு­ணி­காவின் கட்சித் தாவலும், அரசாங்கத்தைப் பாதித்­துள்ள ஒன்­றா­கவே கரு­தப்­ப­டு­கி­றது.

அதனால் தான் சூட்­டோடு சூடாக, ஜாதிக ஹெல உறு­ம­யவை உடைத்து உதய கம்­மன்­பி­லவைத் தம்­பக்கம் இழுத் துக் கொண்­டது அர­சாங்கம்.

 

அவர் ஏற்­க­னவே கோத்­தா­பய ராஜபக்ஷவுக்கு மிக நெருக்­க­மா­ன­வ­ரா­கவே இருந்தார். வேண்டா வெறுப்புடன் தான், அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யே­றினார்.

அவரைத் தம்­பக்கம் இழுத்துக் கொள்­வதில் அர­சாங்கம் அவ்­வ­ள­வாக சிர­மப்­ பட்­டி­ருக்­காது. அரசாங்கத்துக்குள் இருக் கும் பல கட்­சி­க­ளுக்கும் இப்­போது இதே சிக்­கலை எதிர்­கொண்­டுள்­ளன.

எதி­ர­ணிக்குப் பாய்ந்தால், தமது கட்சி உடைக்­கப்­பட்டு விடுமோ என்ற அச்சம் அவர்க­ளிடம் இருக்­கி­றது. குறிப்­பாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் இந்த விட­யத்தில் கடு­மை­யான அச்­சத்தில் இருக்­கி­றது. முஸ்லிம் காங்­கி­ர­ஸினால் தெளி­வான எந்த முடி­வையும் எடுக்க முடி­யா­துள்­ள­மைக்கு பிர­தான காரணம், கட்சி உடையும் ஆபத்தில் இருப்­பது தான்.

கடந்த காலங்­களில், இது­போன்ற சூழல்­களில் – எதி­ர­ணி­யுடன் இணைய முற்­பட்ட போதும், அர­ச­த­ரப்­புடன் ஒத்­து­ழைக்க மறுத்த போதும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உடைக்­கப்­பட்­டது.

பிரிந்து போன­வர்கள் அர­சாங்­கத்­துடன் இணைந்­தனர் அல்லது புதிய கட்­சியை மைத்து அரசின் நிழலில் தங்கிக் கொண்டனர். இப்­போது கூட முஸ்லிம் காங்­கிரஸ் கொள்கை ரீதி­யாக முடி­வெ­டுப்­பதா அல்­லது. கட்சியைக் காப்­பாற்ற முடி ­வெ­டுப்பதா என்று தெரி­யாமல் குழம்­பி­யி­ருக்­கி­றது.

ஏற்­க­னவே ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆத­ர­வ­ளிக்கும் விவ­கா­ரத்தில், லங்கா சம­ச­மாஜக் கட்சியின் மத்­திய குழு­வுக்­குள்ளும் பிளவு ஏற்­பட்டு விட்­டது.

அதன் ஒரு பகுதி மத்­திய குழு உறுப்­பி­னர்கள், எதி­ரணி வேட்­பா­ள­ருக்கு ஆத­ர­வ­ளிக்க, அமைச்சர் திஸ்ஸ விதா­ரண தரப்பு ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுடன் நிற்­கி­றது.

இந்த கட்சி தாவல்­களில் இன்­னொரு முக்­கி­ய­மான விட­யமும் நடந்­தே­றி­யி­ருக்­கி­றது.

மலை­யக அர­சியல் களத்தில், அர­ச­த­ரப்பில் இருந்து முக்­கி­ய­மான மூன்று பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அரசில் இருந்து விலகிக் கொண்­டுள்­ளனர்.

பெருமாள் இரா­ஜ­துரை, ப.திகாம்­பரம், வே.இரா­தா­கி­ருஸ்ணன் என மூன்று பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும், ஆளும்­கட்­சியின் பக்­கத்தில் இருந்து எதி­ர­ணிக்குத் தாவி­யி­ருக்­கின்­றனர்.

இவர்கள் தாம் எதிர்­பார்த்­தவை அர­ச­த­ரப்­பிடம் இருந்து கிடைக்­காத ஏமாற்­றத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

எவ்­வா­றா­யினும், அவர்­களின் எதிர்­பார்ப்­புகள் எதி­ர­ணி­யுடன் இணைந்து கொண்­டதால் மட்டும் நிறைவேறி­விடப் போவ­தில்லை.

மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்றி பெற்றால் தான் அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

இப்போது எதிரணிக்குத் தாவியுள்ளவர்கள், அரசதரப்புக்குப் பாயவுள்ளவர்கள் என்று ஒவ்வொரு நாளும் செய்திகள் வெளியாகின்றன.

அதுபோலவே, அவ்வப்போது கட்சித் தாவல்களும் நடக்கின்றன.

மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம், எதிரணியை உடைத்து, எவ்வாறு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றதோ, இப்போது அதிலிருந்து பிரிந்து சென்றவர்களால் அந்த நிலையையும் இழந்து நிற்கிறது.

மொத்தத்தில் இந்த தேர்தல், கட்சிகளை உடைப்பதற்கான, பலவீனப்படுத்துவதற்கான ஒரு போராகவே நடந்து கொண்டிருக்கிறது.

வரும் நாட்களில் இந்த கட்சி தாவும் போர் ஆள்பிடி அரசியல் என்பன இன்னும் தீவிரமடையும்.

ஜனாதிபதித் தேர்தல் முடிந்தாலும், கூட அதில் வெற்றி பெறுபவரைப் பொறுத்து, கட்சித் தாவல் இன்னும் அதிகமாகுமே தவிர, குறைவதற்கு வாய்ப்பில்லை.

சுபத்ரா

Share.
Leave A Reply

Exit mobile version