ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதி தேர்தலை நடத்துவதாக கடந்த மாதம் அறிவித்த மறுநாளே, ஒரு முக்கிய தலைவரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தை விட்டு வெளியேறி, தான் எதிர்க்கட்சிகளின் “பொது வேட்பாளராக” போட்டியிடுவதாக அறிவித்தார்.

இந்த அறிவித்தல், எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (யூஎன்பி) மற்றும் இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீலசுக) பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கூட்டாக, குறைந்தபட்சம் வாஷிங்டனுக்குத் தெரிந்து அதன் ஒப்புதலுடன் முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நகர்வானது, அதன்  ஊழல் மற்றும் சர்வாதிகார ஆட்சி முறைகளால் ஆழமாக இழிவுற்றுள்ள இராஜபக்ஷ அரசாங்கத்தினை நீக்கும் ஒரு முயற்சி ஆகும்.


“சர்வாதிகாரத்திற்கு எதிரான ஜனநாயகத்திற்கான போராட்டம்” என்ற பதாகையின் கீழ், சிறிசேன பிரச்சாரத்தை முன்னெடுக்கும் அதேவேளை, உண்மையான நோக்கமானது பெய்ஜிங்கில் இருந்து நாட்டை தூர ஒதுக்கி, சீனாவை கீழறுப்பதைதயும் இராணுவ ரீதியில் சுற்றிவளைப்பதையும் இலக்காகக் கொண்ட வாஷிங்டனின்  “ஆசியாவில் முன்னிலை” கொள்கையுடன் நெருக்கமாக இணைக்கத் தயாராக இருக்கும் ஒரு ஜனாதிபதியை அதிகாரத்தில் இருத்துவதே ஆகும்.

திரைக்குப் பின்னால் இந்த  சதியின் முக்கிய நபராக இருந்தவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய புள்ளியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்க ஆவார் -அவரது தந்தை கட்சியை நிறுவியதோடு பெற்றோர்கள் இருவரும் பிரதமர்களாக இருந்துள்ளனர்.

இராஜபக்ஷவுடன் பெரும் பகைமைகொண்ட குமாரதுங்க, யூஎன்பீ தலைவர் ரணில் விக்கிரமசிங்க உடன் உறவுகளை வளர்த்துக்கொண்டு, குறைந்தது இந்த ஆண்டு முற்பகுதியில் இருந்து, ஜனாதிபதிக்கு எதிரான முக்கிய அரசாங்க உறுப்பினர்கள் மத்தியில் விரிவாகிவந்த அதிருப்தியை தட்டியெழுப்ப முயற்சித்தார்.

குமாரதுங்கவின் ஆசியுடன் 2001ல் ஸ்ரீலசுக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சிறிசேன அவர்களில் ஒருவராவார்.

அதே நேரம், குமாரதுங்க யூஎன்பீ தலைவர் விக்கிரமசிங்கவின் உதவியுடன், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார்.

2005ல் பதவியை விட்டுச் சென்ற அவர், அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த போதிலும், அடுத்த ஆண்டு முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் மற்றும் அவருடைய மனைவியும் முன்னாள் வெளிவிவகார செயலாளருமான ஹிலாரி கிளின்டனாலும் நிறுவப்பட்ட கிளின்டன் மன்றத்தில் சேர்ந்துகொண்டார்.

குமாரதுங்க, கிளின்டன் பூகோள முன்னெடுப்புகள் அமைப்பின் வறுமை ஒழிப்பு குழுவின் (CGI) ஆலோசனைக் குழுவில் பணியாற்றுகிறார்.

இது “மூன்றாம் உலக நாடுகளில் அரசியல், சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் உலகின் மிகப் பெரிய சர்வதேச நிறுவனங்களில் ஒன்றாகும்.”

சிஜிஐயில் (CGI) குமாரதுங்கவின் ஈடுபாடு ஒரு தற்காலிக அடையாளமாகும். அவர் கிளின்டன் மன்றத்தின் நிதி திரட்டும் பிரச்சாரங்களின் பாகமாக பல நாடுகளுக்கும் விஜயம் செய்துள்ளதுடன் அதன் ஆண்டு கூட்டங்களை நடத்தும் குழுவிலும் செயல்பட்டார்.

குமாரதுங்கவுக்காக அமெரிக்க ஆளும் வட்டாரங்களின் குறிப்பாக ஒபாமா நிர்வாகத்தினுள் கதவுகளை திறந்துவிடக்கூடிய கிளின்டன்களுடன் இலங்கை அரசியல் பற்றி தனி கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருப்பார் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

சிஜிஐ போன்ற நிறுவனங்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சார்பில் அரசியல் சூழ்ச்சிகளைச் செய்வதில் பேர்போனவை. குமாரதுங்க பற்றிய விக்கிப்பீடியா பதிவு, சிஜிஐ (CGI) பற்றி விவரிக்கையில், “கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் அரசியல் தலைவர்களுக்கு அனுபவம் நிறைந்த ஒரு தொகை ஆலோசகர்களை முன்கூட்டியே இரகசியமாக வழங்கும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு, என்று கூறியுள்ளது.

ஒபாமாவின் முதல் ஜனாதிபதி பதவிக் காலத்தில், இராஜாங்கச் செயலாளராக இருந்த ஹிலாரி கிளின்டன் “ஆசியாவில் முன்னிலை” கொள்கைக்கு தலைமை தாங்கியதோடு மையமாக சீனாவின் செல்வாக்கை கீழறுப்பதற்காக பிராந்தியம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர பொறியமைப்புகளில் முக்கிய ஈடுபாடு கொண்டிருந்தார்.

2009 தொடக்கத்தில், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவம் தோற்கடித்த பின்னர், சீனாவுடனான இராஜபக்ஷவின் உறவு பற்றி ஒபாமா நிர்வாகம் தெளிவாக தனது கவலைகளை வெளிப்படுத்தியது.

செனட் வெளிவிவகார குழு அறிக்கை ஒன்று, “இலங்கையை கைநழுவிச்செல்ல” அமெரிக்கா இடம் கொடுக்க முடியாது என்று அறிவித்தது.

உச்சக் கட்டம் வரை புலிகளுக்கு எதிரான இராஜபக்ஷவின் யுத்தத்தை ஆதரித்த அமெரிக்கா, பத்தாயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டது உட்பட, இராணுவத்தின் அட்டூழியங்களை கண்டும் காணாதது போல் இருந்துவிட்டது.

எனினும், யுத்தத்தின் இறுதி மாதங்களில், ஒபாமா நிர்வாகமானது இலங்கையில் “மனித உரிமை மீறல்கள்” பற்றி ஒரு பொய்யான பிரச்சாரத்தை தொடங்கியது.

வாஷிங்டனுடைய உண்மையான கவலை, இராஜபக்ஷ அரசாங்கம் யுத்தத்தின் போது இலங்கையில் கணிசமான இராணுவ மற்றும் நிதி உதவிகளை வழங்கிய சீனா உடன் மிகவும் நெருக்கமாகிவிட்டமையே ஆகும்.

கொழும்புக்கு ஒரு எச்சரிக்கையை விடுக்க, வெளிவிவகாரச் செயலர் என்ற வகையில் ஹிலாரி கிளிண்டன், 2011ல் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) அமெரிக்க-அனுசரணையிலான தீர்மானத்தை உந்திவிட்டதோடு ….

2012ல் இலங்கை மீது நடவடிக்கை எடுக்கக்கோரும் தீர்மானத்துக்கும் நடவடிக்கை எடுத்தார். முதல் முறையாக இந்த ஆண்டு, ஒரு சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் மற்றொரு தீர்மானத்தை அமெரிக்கா முன்கொணர்ந்ததோடு இராஜபக்ஷ சீனாவுடன் உறவுகளை முறித்துக் கொள்ளவில்லை என்றால், அவர் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வார் என மறைமுக அச்சுறுத்தலையும் விடுத்தது.

குமாரதுங்க வாஷிங்டனின் மனித உரிமைகள் பிரச்சாரத்துக்கு ஆதரவு கொடுத்ததுடன் பெய்ஜிங் உடனான இராஜபக்ஷ அரசாங்கத்தின் உறவுகளையும் விமர்சித்தார்.

இந்தியா, 2011ல் எதிராக வாக்களித்த பின்னர், 2012ல் யுஎன்எச்ஆர்சி தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த போது, அவர், “இடைப்பட்ட காலத்தில் எங்களுக்கு எதிராக வாக்களிக்குமளவுக்கு இந்தியாவுக்கு ஏதாவது நடந்திருக்க வேண்டும், இந்தியா சாதாரணமாக இந்த முடிவை எடுத்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை,” என பிரகடனம் செய்தார்.

இராஜபக்ஷவின் வெளியுறவுக் கொள்கையால் தான் “குழம்பிப் போனதாகத்” தெரிவித்த குமாரதுங்க, இராஜபக்ஷ சீனா, ஈரான் மற்றும் மியான்மரில் நண்பர்களைக் கண்டுபிடித்துள்ளதாகவும் “மேற்கு நாடுகளுடன் மோதலான கொள்கைகளை,” கையாள்வதாகவும் விமர்சித்தார்.

இந்த ஆண்டு அமெரிக்கா அதன் தீர்மானத்தை தாக்கல் செய்த பின்னர், மார்ச் 11 அன்று கொழும்பில் பத்திரிகையாளர்களிடம் பேசிய குமாரதுங்க, “சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனநாயக விதிமுறைகளை அரசாங்கம் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே, சர்வதேச தலையீடுகளில் இருந்து நாட்டைப் பாதுகாக்க முடியும்,” என தெரிவித்தார்.

அவர், “ஜனநாயக மதிப்புகளால் அடிக்கோடிட்டு காட்டப்படும் நல்ல ஆட்சியே, சர்வதேச அழுத்தத்தில் இருந்து இலங்கையை மற்றும் அதன் மக்களை காப்பாற்ற சிறந்த வழி,” என்றார்.

முந்தைய நாள், தெற்காசிய மன்றத்தின் தலைவர் என்னும் முறையில், விக்கிரமசிங்க மற்றும் பல உயர்மட்ட யூஎன்பீ தலைவர்களுடன் குமாரதுங்க கலந்துரையாடினார்.

அதிகாரபூர்வமாக இந்த கூட்டம் “நாட்டின் அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய குழுக்களுக்கும் இடையே மதநல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை ஊக்குவிப்பது” சம்பந்தப்பட்டதாக இருந்த அதேவேளை, உத்தியோகபூர்வமற்ற முறையில் அதில் கலந்துரையாடப்பட்ட முக்கிய பிரச்சினை, சந்தேகத்திற்கு இடமின்றி இராஜபக்ஷ அரசாங்கம் பற்றியதாகவும் அதை என்ன செய்வது என்பது பற்றியதாகவும் இருந்திருக்க வேண்டும்.

இராஜபக்ஷ, தான் மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை மேற்கொண்ட பின்னரும், இரு ஆண்டுகளுக்கு முன்னதாகவே, ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்தவுள்ளதை செப்டம்பரில் சமிக்ஞை செய்த பின்னருமே இந்த சூழ்ச்சிகள் அக்கறையுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்திற்கு சார்பான ஒரு பத்திரிகையான சிலோன் டுடே, குமாரதுங்க செப்டம்பரில் யூஎன்பீ தலைவர்களை சந்தித்து விக்கிரமசிங்கவும்  யூஎன்பீயும் ஒரு பொது வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக அக்டோபர் 5 செய்தி வெளியிட்டிருந்தது.

அதே செய்தித்தாளின் படி, குமாரதுங்க அக்டோபர் முற்பகுதியில் லண்டனில் விக்கிரமசிங்கவை சந்தித்தபோது, “ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதில் கவனம் செலுத்துமாறு” கேட்டுக்கொண்டுள்ளார்.


மங்கள சமரவீர,
அதற்கு பின்னர் வந்த அபிவிருத்திகள், குமாரதுங்க விக்கிரமசிங்கவை சம்மதிக்க வைத்ததை காட்டின. டெய்லி மிரர் படி மங்கள சமரவீர, ரவி கருணநாயக்க, கரு ஜெயசூரிய ஆகிய மூன்று யூஎன்பீ சிரேஷ்ட தலைவர்கள், நவம்பர் 4 அன்று கொழும்பில் “செல்வாக்கு மிக்க” தூதர்களை சந்தித்தனர்.

உலக சோசலிச வலைத் தளம், இந்த செல்வாக்குமிக்க இராஜதந்திரிகள் அமெரிக்க மற்றும் இங்கிலாந்து தூதர்களை விட வேறு யாரும் அல்ல என்ற நம்பகமான தகவலைக் கொண்டுள்ளது. அவர்கள் யூஎன்பீ பிரதிநிதிகள் குழுவுடன் “ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் வெற்றிக்கான மூலோபாயம்” பற்றி கலந்துரையாடினர்.

ஒரு போட்டி யூஎன்பீ (UNP) தன்னை, ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவை நிறுத்த விரும்பியபோது, மங்கள சமரவீர யூஎன்பீயை விட்டு வெளியேறி அரசாங்கத்தில் சேர அச்சுறுத்தினார்.


தனக்கு எதிரான சதி பற்றி எதுவும் தெரிந்திராத இராஜபக்ஷ, சமரவீரவை தனிப்பட்ட முறையில் சந்தித்து அரசாங்கத்தில் சேர்ந்துகொள்ளுமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார். சமரவீர வெளியுறவு அமைச்சர் பதவியை கோரியதாகவும் இராஜபக்ஷ ஒப்புக்கொண்டதாகவும் சண்டே டைம்ஸ் தெரிவித்தது.

குமாரதுங்க சமரவீரவின் திட்டத்தைப் பற்றி கேள்விப்பட்ட பின்னர், அவர் “கவலைக்குரிய காரியத்தைச் செய்யவேண்டாம், எனக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள், நான் விஷயங்களை சரி செய்கின்றேன்,” என கேட்டுக்கொண்டார்.

சண்டே டைம்ஸ் பத்திரிகையின் படி, நவம்பர் 19, “விக்கிரமசிங்கவும் அவரது நெருங்கிய நம்பிக்கைக்குரிய மலிக் சமரவிக்ரமவும், டொரிங்டன் சதுக்கத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி குமாரதுங்கவின் இல்லத்தில் தொடர் ஆலோசனைகளில் மூழ்கினர் …

“ஒரு புதிய பரந்த எதிர்கட்சி முன்னணியை அமைப்பதற்கான உடன்பாடு, [நவம்பர் 20] இரவு வியாழக் கிழமை, குமாரதுங்க உடன் விக்கிரமசிங்க சந்தித்தபோது காணப்பட்டது.

அங்கு அவர், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்படுவார் என சிறிசேனவால் உறுதிப்படுத்தப்பட்டு கையெழுத்திடப்பட்ட ஒரு ஆவணத்தை யூன்பியின் தேசியத் தலைவரிடம் ஒப்படைத்தார். ”

அடுத்த நாள், தான் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரர் என சிறிசேன அறிவித்த ஒரு செய்தியாளர் மாநாட்டிற்கு குமாரதுங்க தலைமை தாங்கினார்.

அவர் தெளிவாக கிளின்டன் மன்றத்தின் ஆசீர்வாதத்துடன் மற்றும் ஒபாமா நிர்வாகத்துக்கு தெரிய, இல்லையெனில் அதன் நேரடி தலையீட்டுடன் செயற்பட்டு வந்தார்.

ஒபாமா நிர்வாகமானது ஸ்ரீலசுகவில் ஒரு பிளவும் மற்றும் யூஎன்பீயினதும் ஏனைய கட்சிகளதும் ஆதரவும் இராஜபக்ஷவை அதிகாரத்தில் இருந்து அகற்ற போதுமானது என்று எதிர்பார்க்கின்றது.

இலங்கை தொழிலாள வர்க்கம் தனது சொந்த அரசியல் படிப்பினைகளைப் பெற வேண்டும். சிறிசேனவின் அறிவிப்புக்கு வழிவகுத்த கீழ்தரமான சூழ்ச்சிகள், எதிர்க் கட்சிகளுக்கு மட்டுமன்றி அரசாங்கத்துக்குமான இயங்குமுறை தரங்களாக உள்ளன.

சிறிசேனவின் போலி “ஜனநாயக” பிரச்சாரங்களை அல்லது “சர்வதேச சூழ்ச்சிகளின்” எதிரியாக காட்டிக்கொள்ளும் இராஜபக்ஷவின் வெற்று தோரணைகளை எவரும் நம்பக் கூடாது.

இரு வேட்பாளர்களும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனக் கோரிக்கைகளை அமுல்படுத்த அர்ப்பணித்துக்கொண்டுள்ளதுடன் சீனா மீதான அமெரிக்க போரில் இலங்கை இழுபட்டுச் செல்வதை எந்த வேட்பாளராலும் தடுக்க முடியாது.

சோசலிச சர்வதேசிய வேலைத் திட்டத்தின் அடிப்படையில் சிக்கன நடவடிக்கைகளுக்கும் மற்றும் போருக்கும் எதிராக சுயாதீனமாக அணிதிரள்வதன் மூலம் மட்டுமே தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களால் தமது சொந்த வர்க்க நலன்களை காக்க முடியும். இந்த முன்னோக்குக்காக, ஆளும் வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளையும் நிராகரித்து, சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே போராடுகின்றது.

மூலம். உலக சோசலிச வலைத் தளம்

Share.
Leave A Reply

Exit mobile version