காங்கேசன்  துறையிலிருந்து உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாணம் ஊடாக கொழும்புக்கு செல்லும் யாழ்தேவி ரயில் சேவையை ஆரம்பித்து வைக்கும் இன்றைய (வெள்ளிக்கிழமை 02) நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவில்லை.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜெயந்த, போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம ஆகியோர் இந்த ரயில் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து, காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணம் வரை பயணித்தனர்.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோரும் இவர்களுடன் ரயிலில் பயணம் செய்தனர்.

1990ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதியுடன் காங்கேசன்துறையிலிருந்து கொழும்புக்கு இறுதியாக ரயில் சேவை இடம்பெற்று பின்னர் நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தால் ரயில் சேவை அஸ்தமித்திருந்தது.

மீண்டும் 24 வருடங்களில் பின்னர் ரயில் சேவை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை (02) யாழ். நகருக்கு விஐயம் செய்வதை முன்னிட்டு யாழ். நகரில் இருந்து துரையப்பா விளையாட்டு மைதானத்துக்கு செல்லும் வீதிகள் மூடப்பட்டு பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

சத்திரச் சந்தியில் நிறுவப்பட்டுள்ள வீதிச் சமிஞ்சை விளக்குகள் அணைக்கப்பட்டு இச்சந்தியினூடாக பண்ணை, துரையப்பா மைதானத்துக்கு செல்லும் வீதி போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் யாழ். பிரதான வீதி மறிக்கப்பட்டு, உள்நுழையும் வாகனங்கள் மாற்றுப் பாதையினூடாக செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, காங்கேசன்துறை ரயில் சேவை ஆரம்பிப்பு, ரில்கோ விருந்தினர் விடுதியில் தொழில்வல்லுநர்களுடன் சந்திப்பு மற்றும் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஆகியவற்றில் கலந்துகொள்வதாக இருந்த போதும், ரயில் சேவை ஆரம்பிக்கும் நிகழ்வில் அவர் கலந்துகொள்ளவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

kks_train_01

Share.
Leave A Reply

Exit mobile version