தானே: 58 வயதுக்காரர் ஒருவர், 20 வயது இளம்பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார். அவரை பற்றி ருசிகர தகவல்கள் கிடைத்துள்ளன.

58 வயது சதிஷ் ஆப்டே மராட்டிய மாநிலம் தானேயில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருபவர் சதிஷ் ஆப்டே. இவரது 85 வயது தாயார் உடல்நலக்குறைவு காரணமாக படுத்த படுக்கையாக இருக்கிறார்.

சாதாரண குடும்பத்தை சேர்ந்த சதிஷ் ஆப்டே தனது இளமை பருவத்தில் 3 பெண்களை காதலித்து உள்ளார். ஆனால் அவர்கள் அவரை ஏமாற்றிவிட்டு வேறு நபர்களை திருமணம் செய்துகொண்டனர். இதனால் பெண்கள் மீது அவருக்கு வெறுப்பு உண்டானது.

திருமணமே செய்து கொள்ளக்கூடாது என்று தீர்மானித்தார். அதன்பின்னர் பெண்களுடன் பேசுவதையும் தவிர்த்து வந்தார்.

இளம்பெண்ணுடன் காதல்

நாலச்சோப்ராவில் சதிஷ் ஆப்டேவின் குடும்ப நண்பர் குமார் காபாடியா வசித்து வந்தார். இவரது இளைய மகள் லிசா(வயது20). 10–ம் வகுப்பு வரை படித்துள்ள லிசா பெண்கள் அழகு நிலையம் ஒன்றில் அழகு கலை நிபுணராக பணிபுரிந்து வருகிறார். நண்பர் குமார் காபாடியாவை சந்திக்க அவரது வீட்டுக்கு சதிஷ் ஆப்டே அடிக்கடி செல்வது வழக்கம். அப்போது லிசாவுடன் அவர் அன்புடன் பழகி வந்தார்.

நாளடைவில் சதிஷ் ஆப்டேக்கு லிசா மீது ஈர்ப்பு உண்டானது. அவரையும் அறியாமல் லிசாவை காதலிக்க தொடங்கினார். லிசாவுக்கும், சதிஷ் ஆப்டே மீது காதல் உண்டானது. வயது வித்தியாசம் காரணமாக இந்த காதலை ஊர், உலகம் ஏற்றுக்கொள்ளாது என்று இருவரும் தங்களது காதலை வெளியே சொல்ல முடியாமல் தவித்து வந்தனர்.

இந்தநிலையில் லிசாவுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து அவரது தந்தை குமார் காபாடியா மாப்பிள்ளை தேடினார். ஆனால் லிசா, சதிஷ் ஆப்டேவை கரம் பிடிப்பதில் உறுதியாக இருந்தார்.

மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் தந்தை தீவிரம் காட்டியதால் சதிஷ் ஆப்டே மீதான காதலை தந்தையிடம் லிசா கூறினார். இதைக்கேட்டு குமார் காபாடியா கடும் அதிர்ச்சி அடைந்தார். லிசாவை கடுமையாக எச்சரித்தார்.

திருமணம்

ஆனால் அவர் மணந்தால் சதிஷ் ஆப்டேவை தான் மணப்பேன் என்று உறுதியாக கூறிவிட்டார். இதனால் செய்வதறியாது திகைத்த குமார் காபாடியா இறுதியில் மகளின் முடிவுக்கு சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து அவர் சதிஷ் ஆப்டேவை அழைத்து பேசினார். அப்போது லிசா மீது தான் கொண்ட காதல் உண்மையானது. அவளை கண்கலங்காமல் காப்பாற்றுவேன் என்று உறுதி அளித்தார்.

இதை தொடர்ந்து நேற்று புத்தாண்டு தினத்தில் இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று சதிஷ் ஆப்டேயின் வீட்டில் வைத்து இருவருக்கும் திருமணம் நடந்தது. இதில் இருவரது குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் 30 பேர் மட்டும் கலந்துகொண்டனர்.

கடவுள் கொடுத்த பொக்கிஷம்

திருமணத்திற்கு பின் சதிஷ் ஆப்டே மிகுந்த பூரிப்புடன் காணப்பட்டார். 20 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டது பற்றி சதிஷ் ஆப்டே  கூறியதாவது:–

‘காதல் என்பது புனிதமானது. காதலுக்கு கண் இல்லை என்று கூறுவார்கள். ஆனால் காதலுக்கு வயதும் கிடையாது. 10 வயதிலும் காதல் வரலாம். அதே போல 100 வயதிலும் காதல் வரலாம். அது தான் என்னுடைய வாழ்க்கையிலும் நடந்துள்ளது. எங்களது காதல் புனிதமானது.

3 முறை தோற்று தற்போது நான் காதலில் வெற்றி பெற்று விட்டேன். இந்த கலி உலகத்தில் லிசா எனக்கு கடவுள் கொடுத்த பொக்கிஷம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Share.
Leave A Reply

Exit mobile version