இரவு நேரம் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டி உடல் முழுவதும் ரத்தம் சொட்டச் சொட்ட நிற்கும் சிறுமி, ‘எங்கள் விமானம் விபத்துக்குள்ளாகிவிட்டது’ என்று கூறினால் எப்படியிருக்கும்?… அப்படித்தான் தூக்கி வாரிப் போட்டது வில்கின்சுக்கு.

அமெரிக்காவின் கெண்டக்கி மாநிலத்தின் பக் பெர்ரி சாலை அருகே வசித்து வருபவர் வில்கின்ஸ். நேற்று இரவு இவரது வீட்டின் கதவை தட்டிய 7 வயது சிறுமி, அவர்கள் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளாகி பெற்றோர் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

இந்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். காவல் துறையினர் அந்த சிறுமியை அழைத்துக் கொண்டு விபத்து நடந்த இடத்திற்குச் சென்றனர்.

அப்போது, அந்தப் பெண்ணின் தந்தை மார்ட்டி(49), தாய் கிம்பர்லி, அக்கா பைபர்(9) மற்றும் அவரது உறவினர் பெண் சியாரா(14) ஆகிய நான்கு பேரும் விமானத்தின் இடிபாடுகளில் சிக்கி இறந்து கிடந்தனர்.

விசாரணையில் அவர்கள் டென்னிசி மாநில தலைநகரமான நாஷ்வில்லி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. மார்டி நேற்று மாலை தன் குடும்பத்தினருடன் புளோரிடா மாகாணத்தின் கீவெஸ்ட்டிலிருந்து ஜெபர்சன் மாநிலத்தில் உள்ள மவுண்ட் வெர்னானுக்கு தனது சிறிய ரக KY 810 விமானத்தில் சென்று கொண்டிருந்தார்.

மார்ஷல் கவுண்டிக்கு அருகே சென்ற போது விமானம் தன் கட்டுப்பாட்டை இழப்பதை உணர்ந்த அவர் விமான கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள முயன்றார்.

ஆனால் அதற்குள் என்ஜின் கோளாறு காரணமாக 1800 அடி உயரத்தில் இருந்து விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அதிர்ஷ்டவசமாக மார்ட்டியின் ஏழு வயது சிறுமி மட்டும் காயங்களுடன் உயிர் தப்பினாள். இன்று அதிகாலை அவர்களது உடல்களை மீட்ட காவல்துறையினர், உயிர் பிழைத்த ஏழு வயது சிறுமியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

Plane-Crash_3153529b

Kimberly and Marty Gutzler, who died in the crash

Share.
Leave A Reply

Exit mobile version