பெங்களூரு: பிடதி நித்தியானந்தா ஆசிரமத்தில் இளம் பெண் சிஷ்யை மர்மமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த பெண், திடீரென, மயங்கி சாயும்போது பதிவான சிசிடிவி காட்சிகளை போலீசார் பரிசீலனை செய்து வருகின்றனர்.திருச்சி மாவட்டம், திண்டுக்கல் சாலை நாவலூர் குட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்த அர்ஜுனன் என்பவரது மகள் சங்கீதா (24). பி.சி.ஏ. படித்துள்ள சங்கீதா, நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடக மாநிலம், பெங்களூரு அடுத்த, பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் துறவி பயிற்சிக்கு சேர்ந்தார்.

03-1420263913-police-investigation-600

சாவில் மர்மம்
இந்நிலையில் கடந்த 29ம்தேதி சங்கீதா திடீரென இறந்துவிட்டதாக ஆசிரமம் சார்பில், அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சங்கீதாவின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாயார், ராம்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனிடையே சங்கீதாவின் பிரேத பரிசோதனை வந்த பிறகுதான் சாவின் மர்மம் விலகும் என்று போலீசார் கூறியுள்ளனர். மேலும், ஆசிரமத்திலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்கின்றனர்.
சிசிடிவி கேமராவில் காட்சிகள்
அந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகள் இதுதான்: சங்கீதா உற்சாகத்தோடு நடந்து வந்து ஆசிரமத்தின் வரவேற்பரையில் போடப்பட்டுள்ள இருக்கையில் அமருகிறார். உட்கார்ந்த சில நொடிகளிலேயே, நாற்காலியில் இருந்தபடியே, அவரது தலை மட்டும் இடதுபுறமாக சரிந்து விழுகிறது. இதை பார்த்த பெண் சிஷ்யைகள் சிலர், ஓடி வந்து, தட்டிப்பார்க்கின்றனர். அப்படியும் சங்கீதாவிடமிருந்து பேச்சு வரவில்லை. மயக்கமுற்றவரை போல காணப்படுகிறார்.
மருத்துவமனைக்கு ஷிப்ட்
இதைத் தொடர்ந்து, ஆண் சிஷ்யர்கள், மருத்துவமனையில் பயன்படுத்துவதை போன்ற படுக்கையுடன் கூடிய தள்ளு வண்டியை கொண்டு வருகின்றனர். சங்கீதாவை பெண் சிஷ்யைகள், அந்த படுக்கையில் தூக்கி கிடத்துகிறார்கள். அதையடுத்து மருத்துவமனைக்கு சங்கீதா கொண்டு செல்லப்படுகிறார். இவைதான் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.
சிகிச்சை பலனின்றி சாவு
முதலில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படும் சங்கீதா பிறகு அங்கிருந்து மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். ஆனால் போகும் வழியிலேயே சங்கீதா இறந்து விடுகிறார். ஆனால் திடீரென தலை சரிந்து சங்கீதா வீழ காரணம் என்ன என்பது குறித்துதான் மர்மம் நிலவுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version