அரசாங்கத்தை விட்டு விலகிச் சென்ற ரவூப் ஹக்கீமையோ, ரிசாத் பதியுதீனையோ, மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்குத் தான் விடமாட்டேன் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சர் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
“2005ம் ஆண்டு அதிபர் தேர்தலில் ரவூப் ஹக்கீம், மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக பணியாற்றினார்.
தேர்தலில், மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றதும், அவருடன் இணைந்து அமைச்சுப் பதவியையும், எல்லா சலுகைகளையும் பெற்றுக் கொண்டார்.
மீண்டும் 2010ம் ஆண்டு, சரத் பொன்சேகாவை ஆதரித்தார்.
அந்த தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்ற பின்னர், அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு எல்லா சலுகைகளையும் பெற்றுக் கொண்டார்.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் முஸ்லிம் பிரதிநிதிகள் பெறாத சலுகைகளையெல்லாம் இவர்கள் பெற்றனர்.
இவர்களின் செயற்பாடுகள் இஸ்மாமிய மதத்தையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இதனைத் தான் இஸ்லாம் போதிக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இனிமேல், வெளியேற போனவர்களை மீண்டும் எடுக்கமாட்டோம். இதனை நான் உறுதிப்படுத்துகிறேன்.
வெளியே போனவர்கள் மீண்டும் வருவதற்கு நான் விட மாட்டேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.