எதிர்வரும் எட்டாம் திகதி நடைபெறவுள்ள ஏழாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் அனைத் தும் நாளை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளதாகத் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான மஹிந்த ராஜபக் ஷவுக்கும் எதிரணியின் பொது வேட்பாளரான புதிய ஜனநாயக முன்னணியின் மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையில் கடுமையான போட்டி நிலவுமென அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
நாளை நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரப் பணிகள் அனைத்தும் நிறைவடையவுள்ளமையினால் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகிய இரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடைய பிரசார நடவடிக்கைகள் உக்கிரமடைந்துள்ளன.
இறுதி பிரசார தினமான நாளை ஜனாதிபதி வேட்பாளரான மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 5 பிரதான கூட்டங்கள் மற்றும் மக்கள் பேரணிகள் நடைபெறவுள்ளதுடன் இறுதி மக்கள் பேரணி கெஸ்பேவவில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான இறுதிக் கூட்டங்கள் திஸ்ஸ மஹராம, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மத்துகம மற்றும் கெஸ்பேவை ஆகிய பிரதேசங்களிலேயே நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, எதிரணியின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் வகையில் 6 பிரசார கூட்டங்களும் பேரணிகளும் நாளை நடைபெறவுள்ளதுடன் இறுதிக் கூட்டம் கொழும்பு மருதானையில் நடைபெறவுள்ளது.
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இறுதிக் கூட்டங்களும் பேரணிகளும் நிவித்திகல, தெவிநுவர, காலி, களுத்துறை, கொலன்னாவ மற்றும் மருதானை ஆகிய பிரதேசங்களிலேயே நடைபெறவுள்ளன.
இரு பிரதான வேட்பாளர்களும் கலந்துகொள்ளும் இறுதிக் கூட்டங்கள் மற்றும் பேரணிகள் நடைபெறும் பிரதேசங்களில் ஏற்படலாமென கருதப்படும் வன்முறைகள் மற்றும் குழப்பங்களை கட்டுப்படுத்துவதற்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள இரு பிரதான வேட்பாளர்களதும் இறுதிக் கூட்டங்களில் பல அரசியல்வாதிகள் கட்சித்தாவவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கம்பஹா, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்கள் சிலர் எதிரணியின் பொது வேட்பாளருடன் அதேவேளை, எதிர்க்கட்சியை சேர்ந்த சிலர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடனும் இணைந்து கொள்வாரென எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுவரையில் ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் உள்ளிட்ட 27 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் தரப்பிலிருந்து எதிரணியில் இணைந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலானது இதுவரை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை விட கடுமையான போட்டித் தன்மை மிக்கதாக காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
எதிரணியின் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கும் வகையில் பல்வேறு அமைப்புக்களும் கட்சிகளும் ஒன்று திரண்டுள்ள அதேவேளை, அரசாங்கத்திலுள்ள முக்கிய அமைச்சர்கள் பலரும் எதிரணியின் பக்கம் தாவியுள்ளனர்.
அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளர் உள்ளிட்ட சிலர் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆதரவளிக்கும் வகையில் கட்சித் தாவியுள்ளனர். ஆகையினாலேயே இந்த ஜனாதிபதித் தேர்தல் கடும் போட்டிமிக்கதாக கருதப்படுகின்றது.