பெங்களூரு: ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் தம்மையும் சேர்க்கக் கோரிய பா.ஜ.க.வின் சுப்பிரமணியன் சுவாமியிடம் “நீங்கள் யார்? உங்களுக்கும் இந்த வழக்குக்கும் என்ன தொடர்பு” என தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடகா உயர்நீதிமன்றம் நியமித்த தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் இன்று நடைபெற்றது.

இன்றைய விசாரணையின் போது, மேல்முறையீட்டு தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்தார். அதற்கு நீதிபதி குமாரசாமி, நீங்கள் யார்? வழக்குக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? என கேள்வி எழுப்பினார்.

இதை சற்றும் எதிர்பாராத    சுப்பிரமணியன் சுவாமி, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, இந்த வழக்கில்   முதன்முதலில் புகார் தெரிவித்தது நானே. ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கும் முன்னர் உச்ச நீதிமன்றம் என் கருத்தையும் கேட்டது. எனவே என்னை இந்த வழக்கு விசாரணையில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி குமாரசாமி, வழக்கு விசாரணையில் உங்களுக்கு உள்ள இணைப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு நகல் எங்கே என கேட்டார். அதற்கு நகலை நான் எடுத்துவரவில்லை என்று சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நகலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பிறகு உங்களது மனுவை பரிசீலிக்கிறேன் என்றார். இதேபோல் இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தங்களையும் 3-வது தரப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் க. அன்பழகன் தரப்பில் வழக்கறிஞர் குமரேசன் வாதிட்டார்.

இதற்கு பதிலளித்த நீதிபதி, விசாரணை நீதிமன்றத்துடன் அன்பழகனின் வேலை முடிந்து விட்டது என்று விளக்கம் அளித்தார். இருப்பினும் க. அன்பழகன் தமது கோரிக்கை குறித்து தனி மனுவாகத் தாக்கல் செய்யலாம் என்றும் அது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் நீதிபதி குமாரசாமி கூறினார்.

பின்னர் பிற்பகலில் நடைபெற்ற விசாரணையின் போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பவானிசிங், 3வது தரப்பாக சேர்க்கக் கோரி க. அன்பழகன் தாக்கல் செய்த மனுவை ஏற்கக் கூடாது என்று வாதிட்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version