திருச்சி: பெங்களூர் அருகே பிடதியில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் மர்மமான முறையில் மரணமடைந்த திருச்சி பெண் சங்கீதாவின் உடலைப் போலீஸார் மீண்டும் தோண்டியெடுத்தனர். அந்த உடலில் மறு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.

திருச்ச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு பகுதியை சேர்ந்த அர்ச்சுனனின் மகள் சங்கீதா (24). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்தியானந்தா ஆசிரமத்தில் சேர்ந்தார்.

அங்கு தங்கி இருந்த சங்கீதாவுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவர் இறந்து விட்டதாக, ஆசிரமத்திலிருந்து நவலூர் குட்டப்பட்டில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

post 1

இதையடுத்து சங்கீதாவின் பெற்றோர் பெங்களூரு விரைந்து சென்றனர். அங்கு பிரேத பரிசோதனை முடிந்த பின் மகளின் உடலை பெற்று திருச்சிக்கு கொண்டு வந்து அடக்கம் செய்தனர்.

இந்த நிலையில் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக ராம்ஜிநகர் போலீஸ் நிலையத்தில் சங்கீதாவின் தாய் ஜான்சிராணி புகார் செய்தார்.

ஆனால் போலீசார் புகாரை வாங்க மறுத்தனர். மேலும் சம்பவம் நடந்த இடம் பெங்களூரு என்பதால் அங்கு சென்று புகார் அளிக்க கூறினர்.

இதைதொடர்ந்து கர்நாடக மாநிலம் ராமநகர் டவுனில் உள்ள போலீஸ் எஸ்.பி. அலுவலகத்திற்கு கடந்த 3 ம் தேதி ஜான்சிராணி சென்றார்.

அங்கு போலீஸ் எஸ்.பி. சந்திரகுப்தாவை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில் நித்தியானந்தா ஆசிரமத்தில் தங்கியிருந்த தனது மகள் சங்கீதா டிசம்பர் மாதம் 28 ம் தேதி இறந்ததாகவும், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும், மறு பிரேத பரிசோதனை செய்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் நேற்று திருச்சி வந்தனர்.

மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து சங்கீதாவின் உடலை தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை செய்வது குறித்த தகவல் தெரிவித்தனர்.

அதன்பின் நவலூர் குட்டப்பட்டு சென்று சங்கீதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கர்நாடக மாநில போலீசார் விசாரணை நடத்தினர்.

அதன் பின்னர் சங்கீதாவின் உடலை தோண்டி எடுத்து மறுபிரேத பரிசோதனை செய்ய ஸ்ரீரங்கம் ஆர்டிஓ மனோகரனிடம் அனுமதி கேட்டனர்.

அவர் அனுமதி தர மறுத்ததை அடுத்து, திருச்சி கலெக்டர் பழனிச்சாமியிடம் அனுமதி கோரினர். மறு பிரேதப் பரிசோதனைக்கு கலெக்டர் அனுமதி கொடுத்தார்.

இதையடுத்து நேற்று சங்கீதாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த பணி நடந்தது. ஸ்ரீரங்கம் தாசில்தார் காதர்மைதீன், வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அதிகாரி செந்தில்குமார் மற்றும் டாக்டர்கள் சரவணன், ரவிக்குமார் ஆகியோர் இடுகாட்டிற்கு வந்தனர்.

சங்கீதாவின் பெற்றோரும் காரில் அழைத்து வரப்பட்டனர். வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் பிடதி போலீசார் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

அழுகிய நிலையில் இருந்த உடலை டாக்டர்கள் இடுகாட்டின் வலதுபுறத்தில் இருந்த ஆஸ்பெட்டாஸ் சீட் கொட்டகையில் வைத்து மறுபிரேதுப் பரிசோதனை செய்தனர்.

உடலில் இருந்து இதயம், சீறுநீரகம் உள்ளிட்ட பாகங்களை ஆய்வுக்காக எடுத்தனர். பின்னர் அவற்றை பாதுகாப்பான முறையில் சீலிட்டு, பெங்களூரு ஆய்வகத்திற்கு எடுத்து செல்ல பிடதி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மறு பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் உடல் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. இடுகாட்டுக்கு வரும் போது தாய் ஜான்சிராணியும், தந்தை அர்ஜூனனும் கதறிஅழுதபடி வந்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version