சத்ரா: ஜார்க்கண்ட் மாநில சத்ரா மாவட்டத்தில் டார்ச் லைட் வெளிச்சத்தில் பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை நடந்த சம்பவம் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கருத்தடை அறுவைச் சிகிச்சை முகாமில் 13 பெண்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விஷம் கலந்த மருந்து கொடுக்கப்பட்டது என்றும், முறையான மருத்துவ சிகிச்சை கொடுக்கப்படாததே காரணம் என்றும், அதற்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. உடனடியாக அரசுத் தரப்பிலிருந்து இழப்பீட்டுத் தொகை வழங்கி அந்த பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.

சத்தீஸ்கர் மாநில கருத்தடை அறுவைச் சிகிச்சை மரணங்களுக்கு பிறகு , தற்போது எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் ஜார்க்கண்டில் கருத்தடை அறுவை சிகிச்சைகள் மருத்துவர்களால் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளுது.

கடந்த புதன்கிழமை, சத்ரா மாவட்ட அரசு சுகாதார மருத்துவ மையத்தில் 40 பெண்கள் கருத்தடை அறுவைச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

கூடம் போன்ற ஒரு அறையில் வரிசையாக அவர்கள் கிடத்தப்பட்டிருந்தனர். அப்போது மின்சாரம் தடைப்பட்டுள்ளது. ஆனாலும் அறுவைச் சிகிச்சை செய்ய தயாராகி உள்ளனர் மருத்துவர்கள். உடனே டார்ச் லைட்டுகள் வெளிச்சத்தில் அவசர அவசரமாக மருத்துவர்கள் பெண்களின் கருப்பைகளை அகற்றி அதிரடியாக சிகிச்சை நடத்தி உள்ளனர்.

இதனை உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் போட்டோ எடுத்து அம்பலப்படுத்தியுள்ளார். இந்த முறையிலேயே 40 பெண்களுக்கும் அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது.

சிகிச்சை முடிந்த பின்னர் ஆபரேஷன் தியேட்டரிலிருந்து வெளியே கொண்டுவரப்படும் அவர்கள் நடைபாதையில் சாய்வாக உட்கார வைக்கப்படுகின்றனர்.

சிகிச்சை ரண வலியில் துடிக்கும் அவர்களைக் கொண்டு போக ஸ்ட்ரெச்சர், படுக்க போர்வை, அவசர உதவிக்கு உதவியாளர்கள் என்று அந்த சுகாதார மையத்தில் எந்த வசதியுமே இல்லை வேதனையின் உச்சம். இது பற்றி, தன் மருமகளை சிகிச்சைக்காக அழைத்து வந்த சவித்ரா தேவி என்பவர், “இங்கு எந்த விதமான முன்னேற்பாடுகளும் கிடையாது.

எங்களை மிருகங்கள் போல் நடத்துகிறார்கள்” என்று கூறினார் கண்ணீரோடு. மருத்துவர்களை கடவுளுக்கு நிகரானவர்கள் என்று கூறும் மக்கள் மத்தியில், மிருகங்களுக்கு அறுவைச் சிகிச்சை நடத்துவது போல பெண்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை நடத்துவது அப்பாவிப் பெண்களின் உயிரைப் பறிக்கும் கொடூர செயல் என்று பதறுகிறார்கள் ஜார்க்கண்ட் மாநில பெண்கள்.

இதற்கிடையே டார்ச் லைட் வெளிச்சத்தில் கருத்தடை அறுவைச் சிகிச்சை முகாம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்றுள்ளதால் இங்கும் அக்கறையற்ற அரசு இருக்கிறது என்பதையே காட்டுகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

ஆனால் டார்ச் லைட் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை நடந்ததை மறுத்துள்ள மூத்த அரசு மருத்துவர், மோசமான ஏற்பாடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

மாநில அரசு, மருத்துவ அதிகாரிகளுக்கு அறுவை சிகிச்சைக்கென ஊக்கத்தொகை வழங்குகிறது. அரசு அதிகாரிகள் ஒவ்வொரு வருடமும் எத்தனை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று இலக்கினையும் நிர்ணயிக்கிறார்கள்.

சத்ரா மாவட்டத்தில் உள்ள சுகாதார மையத்திற்கு இந்த மாத இலக்கு 3000 அறுவை சிகிச்சைகள். அதில் மிக விரைவாக 25 சதவீதத்தை இப்போதே முடித்து விட்டார்கள். இன்னும் 75 சதவீதத்தை முடிக்கவேண்டிய மருத்துவர்களை எண்ணி, சத்ரா மாவட்ட பெண்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version