ரஹேன்பிட்டியில் சிறிய ரக விமானம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது என்ற செய்தி கடந்த செவ்வாயன்று மாலையாகும் போதுபலரின் காதுகளுக்கு எட்டி நாடளாவிய ரீதியில் காட்டுத் தீ போல் பரவியது.
கொழும்பு நகரின் பிரபலமான பிரதேசமான நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தின் களஞ்சியசாலையொன்றில் இருந்தே இந்த விமானம் மீட்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விமானத்துடன் தொடர்புபட்ட கட்டுக் கதைகளுக்கும் கற்பனைகளுக்கும் கூட தடை இருக்கவில்லை.
அப்படியானால் உண்மையில் நடந்தது என்ன? அந்த விமானம் யாருடையது? போன்ற கேள்விகள் உங்கள் உள்மனதை கேட்பது எமக்குத்தெரிகிறது.
ஆம், அது கடந்த 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நேரம் எப்படியும் மாலை 6 மணியை எட்டியிருக்கும். பொலிஸ் அவசரசேவைப் பிரிவான 119 இற்கு ஒரு அழைப்பு. சேர்… நான் நாரஹேன்பிட்டி பகுதியிலிருந்து பேசுகிறேன்.
இங்குள்ள பொருளாதார மத்தியநிலையத்தில் விமானம் ஒன்று உள்ளது. சிலர் அதனை கொண்டு போக முயற்சிக்கின்றனர் என தகவலை அளித்தவுடன் துண்டிக்கப்பட்டது அந்த அழைப்பு.
இதனையடுத்து விடயம் உடனடியாக நாரஹேன்பிட்டி பொலிஸாருக்கு பரிமாற்றப்பட்டது. உடனடியாக செயற்பட்ட நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசேட குழுவொன்றுடன் குறிப்பிட்ட இடத்துக்கு விரைந்தார்.
அந்த பொருளாதார மத்திய நிலையத்தை அடைந்த பொலிஸாரினால் அவர்களின் கண்களை நம்ப முடியவில்லை. ஆம். விமானம் ஒன்று அங்கு முழுதாக இருந்தது.
சிறிய ரக விமானம் அது 4R – RAY என்ற நீலம், வெள்ளை, சாம்பல் நிறம் கலந்த அந்த விமானத்தில் இருவர் மட்டுமே பயணிக்கக் கூடியவாறு இரு ஆசனங்கள்.
இவையெல்லாவற்றையும் விட அந்த விமானத்தின் சிறகுகளை நால்வர் கழற்றிக்கொண்டிருந்ததை அவதானித்த போது பொலிஸார் மேலும் அதிர்ச்சியடைந்தனர்.
இதனைவிட அந்த களஞ்சியசாலையில் தனியார் விளையாட்டு ஊடகம் ஒன்றுக்கு சொந்தமான வெளிக்கள ஒளிபரப்புக்கு உதவும் கருவிகள், பொறி ஒன்றும் இருந்தன.
இவை அனைத்தையும் வைத்துப் பார்த்த பொலிஸார் ஏதோ ஒன்று நடைபெறுவதை ஊகித்துக் கொண்டு விமானத்தை பாகங்களாக பிரிக்கும் நடவடிக்கையை நிறுத்தச் செய்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.
பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக் கட்ட விசாரணைகளில் அந்த விமானம் பழுதடைந்த நிலையில் உள்ளதை தெரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.
இந்த நிலையில் இந்த விமானம் யாருடையது? ஏன் இந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளது? அதனை அவசரமாக கொண்டு செல்ல காரணம் என்ன?
ஏதேனும் சட்ட விரோத நடவடிக்கைக்கு இது பயன்படுத்தப்பட்டுள்ளதா உள்ளிட்ட கேள்விகளுக்கு பொலிஸார் உடனடியாக பதில் தேட வேண்டியிருந்தது.
இந்நிலையில்தான் பிரபல சிங்கள திரைப்பட இயக்குனர் சந்திரன் ரத்னம் நாரஹேன்பிட்டி பொலிஸாருக்கு ஒரு வாக்கு மூலம் ஒன்றை வழங்கி அந்த விமானத்துக்கு உரிமையாளராக தன்னை அடையாளப்படுத்துகிறார்.
குறித்த விமானத்தின் முதல் சொந்தக்காரர் தானே என பொலிஸாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் சந்திரன் ரத்னம் குறிப்பிட்டுள்ள நிலையில் அதனை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் இளைய மகனான யோஷித்தராஜபக்ஷவுக்கு தான் பரிசளித்ததாக குறிப்பிடவே விசாரணைகள் மற்றொரு கோணத்தை நோக்கி நகர்ந்தன.
நாரஹேன்பிட்டி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட இந்த விசாரணைகள் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்துரட்டவின் நேரடி கட்டுப்பாட்டில் இடம்பெறலானது.
நாரஹேன்பிட்டி பொலிஸாருக்கு இயக்குனர் சந்திரன் ரத்னம் வழங்கிய வாக்கு மூலம் பின்வருமாறு இருந்தது.
ஆம். இந்த விமானம் என்னுடையதுதான். நான் 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதமளவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் மகனான யோஷித்தவுக்கு அதனை வழங்கினேன்.
அதற்கு முன்னர் இரு முறை அதில் பயணம் செய்துள்ளேன். அது தற்போது பயணிக்க முடியாத நிலையில் பழுதடைந்துள்ளது.
செவ்வாயன்று குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற நபர் கேட்டுக் கொண்டதற்கிணங்கவே எனது நிறுவனத்தை சேர்ந்தவர்கள் நாரஹேன்பிட்டிக்கு சென்று அதனை இரத்மலானைக்கு கொண்டு போக முயற்சித்தனர். வேறு எந்த காரணமும் கிடையாது.
யோஷித்தவுக்கு வழங்கியதன் பின்னர் அந்த விமானம் தொடர்பில் நான் எதையும் அறிந்திருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இயக்குனர் சந்திரன் ரத்னத்தின் வாக்கு மூலத்தை ஒரேயடியாக நம்பிவிடாத பொலிஸார் அதனை ஆராய்ந்து வருகின்றனர்.
இதனிடையேதான் அந்த விமானம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது என்ற விடயம் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டன.
இந்த விமானமானது பேராசிரியரே விஜேவர்தனவே வடிவமைத்து தயாரித்ததாக பல்வேறு புகைப்பட ஆதாரங்களுடன் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் அந்த கூற்றுக்களை மேலும் வலுப்படுத்தும் விதமாக சிலாபம் – பங்கதெனிய தெமட்டபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த தொழில்நுட்பவியலாளரான ஹெம்லட் மார்டிஸ்ட் என்பவரின் கூற்றுக்கள் அமைந்திருந்தன.
அதாவது இந்த விமானத்தை பேராசிரியர் ரே விஜேவர்த்தன வடிவமைத்த போது தான் அதன் தொழில்நுட்பவியலாளராக கடமையாற்றியதாகவும் குறிப்பிடுகின்றார்.
அவர் அந்த விமானம் குறித்து வெளிப்படுத்திய தகவல்களையும் நாம் உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றோம்.
நான் அந்நாட்களில் பேராசிரியர் ரே. விஜேவர்த்தனவிடமே வேலை பார்த்தேன். அவர் புது விடயங்களை செயற்படுத்த விருப்பமுடையவர்.
நாங்கள் பலவற்றை உருவாக்கினோம். வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்த பாகங்களையும் உள்நாட்டில் பெற்றுக்கொண்ட பொருட்களையும் கொண்டே நாம் அந்த சிறிய விமானத்தை தயாரித்தோம்.
இருவருக்கும் மட்டுமே பயணிக்க முடியும். எனினும் ஒரு சந்தர்ப்பத்தில் குறித்த உயரத்தை விட சற்று மேல் நாம் இருவரும் பயணித்தோம். எனினும் அதிக உஷ்ணம் காரணமாக திரும்பினோம்.
ரே. விஜேவர்த்தனவுடன் இந்த விமானத்தில் சிலாபம்,- களுத்துறை ஆகிய பிரதேசங்களுக்கு சென்றுள்ளேன். அக்காலத்தில் ரே விஜேவர்த்தனவுக்கு சொந்தமான சிறிய ரக விமானமொன்று சிலாபம் – இரணவில பிரதேசத்தில் விழுந்து நொருங்கியது. அவர் இவற்றை பொழுது போக்கிற்காகவே உருவாக்கினார். வேறு காரணம் கிடையாது.
இந்த விபத்தின் பின்னர் அரசானது தனியார் விமானங்கள் பறக்க தடை விதித்தது. அதனை தொடர்ந்து இந்த விமானத்தினை விமான ஓட்டுனர் பயிற்சி நிலையம் ஒன்றுக்கு வழங்க ரே. விஜேவர்த்தன விருப்பம் கொண்டிருந்தார்.
நான் இதனை புராதன பொருளாக காக்க கோரிய போதும் அவர் வழங்கவில்லை என கூறும் ஹெம்லட் மார்டிஸ்ட் பல புகைப்படங்களையும் ஆதாரமாக சமர்ப்பிக்கின்றார்.
இந்நிலையில் இந்த சிறிய ரக விமானம் தொடர்பில் நாரஹேன்பிட்டி பொலிஸார் பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்துரட்டவின் மேற்பார்வையில் மேற்கொண்ட விசாரணை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் (சீ.சீ.டி) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
விசேடமாக இந்த விமானம் தொடர்பான விசாரணையில் பின்வரும் காரணங்களை நாம் வெளிப்படுத்திக் கொள்ள எதிர்பார்க்கின்றோம் என சில கேள்விகளை பட்டியல் இடுகின்றார் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண.
இந்த விமானத்தின் உண்மை முதல் உரிமையாளர் யார்? இந்த விமானத்தை ஒருவருக்கு வழங்கும் போது உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளனவா? நாரஹேன்பிட்டி பிரதேசத்துக்கு இந்த விமானம் ஏன் எடுத்து வரப்பட்டது? எப்படி கொண்டு வரப்பட்டது? மீண்டும் எடுத்துச் செல்ல முற்பட்டமைக்கான காரணம் என்ன?
ஆகிய விடயங்களுக்கு நாம் விசாரணைகளில் பதிலை எதிர்பார்க்கின்றோம். அதனால் விசாரணைகளுக்கு பாதிப்பேற்படா வண்ணம் விமானம் இன்னும் அந்த களஞ்சியசாலையிலேயே வைக்கப்பட்டுள்ளதுடன் அந்த இடம் சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என அஜித் ரோஹண குறிப்பிடுகின்றார்.
இந்நிலையில் திரைப்பட இயக்குனரான சந்திரன் ரத்னம் உள்ளிட்ட சிலரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ள பொலிஸார் யோஷி த்த ராஜபக் ஷவுக்கு இந்த விமானத்தினை சந்திரன் ரத்னம் வழங்கியபோது உரிய சிவில் விமான உரிமை சட்ட திட்டங்கள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதையும் ஆராய்கின்றனர்.
4R–-RAY விமானம் யாருக்கு சொந் தமானது? என்ற கேள்விக்கு மிக விரைவில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப் பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் சில்வா தலைமையிலான பொலி ஸார் விடையளிப்பர் என எதிர்பார்க்கலாம். அத்துடன் இதில் புதைந்துள்ள மர்மங் கள் அனைத்தும் மிக விரைவில் வெளிப்படுத்தப்படும். அதுவரை நாம் அவதானத் துடன்….