கடந்த 12-ந் தேதி முதல் ‘கருணையே நோக்கம்’ என்பதை வலியுறுத்தி ஆசிய நாடுகளில் ஆறு நாள் சுற்றுப்பயணத்தை போப் பிரான்சிஸ் தொடங்கினார்.
முதல் கட்டமாக இலங்கைக்கு சென்ற அவர் மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் அங்கிருந்து கடந்த 16-ந் தேதி பிலிப்பைன்ஸ் சென்றார். அங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் நேற்று இறுதி நிகழ்ச்சியாக ரிசால் பூங்காவில் நடைபெற்ற திறந்த வெளி பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துகொண்டார்.
இந்த பிரார்த்தனை கூட்டத்திற்கு சுமார் ஆறு மில்லியன் மக்கள் அலைகடல் என திரண்டு வந்திருந்தனர். அப்போது போப்பை சந்தித்த ஆதரவற்ற சிறுமி ஒருவர், உலகையே கூனிக்குறுக வைக்கும் கேள்வி ஒன்றை கேட்டார்.
கிளிசெல்லெ ஐரிஸ் பலோமர் என்ற அச்சிறுமி, போப்பை சந்தித்து ஆசி பெற்ற போது, ‘பல குழந்தைகளை பெற்றோர்கள் கைவிட்டு விடுகின்றனர். இதனால் பாதிக்கப்படும் அவர்கள் போதை பொருளுக்கு அடிமையாவது, விபச்சாரத்தில் ஈடுபடுவது போன்ற கேடான நிகழ்வுகளை சந்திக்க நேர்கிறது.
ஒரு பாவமும் அறியாத சிறு குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட துன்பங்கள் நிகழ கடவுள் ஏன் அனுமதிக்கிறார். அப்படி பாதிக்கப்பட்ட எங்களை போன்றவர்களுக்கு ஏன் சில மனிதர்கள் மட்டுமே உதவுகின்றனர்’ என்ற கேள்வியை எழுப்பியவாறு கண்ணீர் விட்டு கதறி அழுதாள்.
அந்த சிறுமியை கருணையுடன் ஆசிர்வதித்த போப், அவளை கட்டியணைத்து ஆறுதல் கூறினார். உடனே கூடியிருந்த மக்களை பார்த்து பேசிய அவர், பதில் கூற முடியாத கேள்வியை இச்சிறுமி கேட்டுள்ளார். வார்த்தைகளால் விவரிக்க முடியாததால் கண்ணீரின் மூலம் அப்பெண் குழந்தைகளுக்கு நேரும் கொடுமையை விவரித்துள்ளார்.
ஏன் குழந்தைகள் இவ்வாறு அவதிப்பட வேண்டும். இது போன்ற கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். உணவில்லாமல் தவிக்கும் குழந்தையை பார்க்கும் போதும், சாலையில் ஒரு குழந்தை போதை வஸ்துவை உபயோகிக்கும் போதும், வீடில்லாமல் ஒரு குழந்தை தவிக்கும்போதும், பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தையை காணும் போதும், குழந்தைகளை அடிமையாக நடத்தும் சமூகத்தை காணும்போதும் எப்படி நாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினார்.
குழந்தைகளை நாம் வரவேற்கவேண்டிய பரிசாக பார்க்கவேண்டும். அவர்களை நேசத்துடன் பாதுகாக்கவேண்டும் என்று கூறிய போப், சிறு குழந்தைகள் மற்றும் இளம் வயதினரை நாம் நன்கு கவனித்து, அவர்கள் நம்பிக்கை தளராமலும், சாலையில் வசிக்கும் நிலை வராமலும் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று கூறினார்.
போப்பிடம் கேள்வி கேட்ட சிறுமி பலோமர் பெற்றோர்களால் கைவிடப்பட்டு அனாதையாக குடிசை ஒன்றில் இருந்தபோது தேவாலயத்தை சேர்ந்த சிலரால் கண்டெடுத்து வளர்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ope Francis receives a gift during a meeting with the youth at Pontifical and Royal University of Santo Tomas in Manila,