ஜனாதிபதித் தேர்தலையடுத்து, அதிகாரம் சுமுகமான முறையில் கைமாற்றப்பட்டதற்கு வெளிநாடுகளில் இருந்து வாழ்த்துச் செய்திகள் வரத் தொடங்கிய நிலையில் தான், அதிகார கைமாற்றம் முற்றிலும் சுமுகமான நிலையில் இடம்பெற்றிருக்கவில்லை என்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியதும், அதில் தோல்வி காணும் நிலை ஏற்படும் என்பதை உணர்ந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அதிகாரத்தை தக்கவைப்பதற்கு இராணுவத்தின் துணையை நாடியதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க, பொலிஸ் மா அதிபர் இலங்ககோன், சட்டமா அதிபர் யுவஞ்சன் விஜேதிலக ஆகிய மூவரும் எடுத்த துணிச்சலான முடிவு தான், ஜனநாயக பாரம்பரியங்களில் இருந்து இலங்கை விலகிச் செல்லாமைக்குக் காரணம் என்று புகழ்ந்துரைக்கப்படுகிறது.
2010ஆம் ஆண்டு, தேர்தலில் சரத் பொன்சேகா தோல்வியைத் தழுவிய போது, இராணுவத்தைக் கொண்டு ஆட்சியைப் பிடிக்கத் திட்டமிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இப்போது அதே குற்றச்சாட்டு மஹிந்த ராஜபக் ஷவின் மீதும் வந்திருக்கிறது.
மெதமுலானவில் வாக்களித்து விட்டு, கடந்த 8ஆம் திகதி மாலையில் கொழும்பு திரும்பிய மஹிந்த ராஜபக் ஷ, இரவு 9 மணியளவில் அலரி மாளிகைக்குச் சென்றிருந்தார்.
அதிலிருந்து, மறுநாள் காலை 6.30 மணியளவில், அலரி மாளிகையில் இருந்து அவர் வெளியேறும் வரையான கால இடைவெளிக்குள் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து பரபரப்பாகத் தகவல்கள் பலவும் வந்து கொண்டிருக்கின்றன.
அலரி மாளிகையில், அமைக்கப்பட்டிருந்த சிறப்புத் தேர்தல் அவதானிப்பு நிலையத்தில் இருந்து அமைச்சர்களுடன், முடிவுகளை அவதானிக்கத் தொடங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு தபால் வாக்குகளின் போக்கே நிலைமையின் இறுக்கத்தை உணர வைத்துவிட்டது.
ஆரம்பத்தில், வந்த அதிகாரபூர்வமற்ற தபால் வாக்கு முடிவுகள், வடக்கு, கிழக்கு, நுவரெலிய போன்ற இடங்களில் தாம் தோல்வி காணப்போவதையும், அது தனது வெற்றியைப் பாதிக்கும் என்பதையும் அவர் உணரக் காரணமாயிற்று.
அவற்றை ஆய்வு செய்துவிட்டு குழப்பமடைந்திருந்த அவர், நள்ளிரவில் சற்று ஓய்வெடுக்கத் தனது அறைக்குச் சென்றிருந்தார். தோல்விப் பயம் அவரை நெடுநேரம் தூங்கவோ ஓய்வெடுக்கவோ விடவில்லை.
சுமார் 2 மணியளவில் எழுந்து மீண்டும், தேர்தல் அவதானிப்பு அறைக்கு வந்தவருக்கு, மேலும் சில தொகுதிகளின் முடிவுகள் கையளிக்கப்பட்டன. அவை தனக்குச் சாதகமற்ற நிலை ஏற்பட்டு வருவதை அவருக்கு உணர்த்தியிருந்தன.
அதிகாரபூர்வமற்ற வகையில், மாவட்ட செயலகங்களில் இருந்து கிடைத்த தகவல்கள், மஹிந்த ராஜபக் ஷ தோல்வி கண்டு வருவதை உறுதிப்படுத்தின.
இந்தநிலையில் அவர், அவசரமாக பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக் ஷ, இராணுவத் தளபதி லெப்.ஜென ரல் தயா ரத்நாயக்க, பொலிஸ் மா அதி பர் இலங்ககோன், சட்டமா அதிபர் யுவஞ்சன் விஜேயதிலக ஆகியோரை அலரிமாளிகைக்கு அழைத்தார்.
அப்போது அங்கு ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்கவும் இருந்தார்.
அவர்கள் நிலைமையை ஆராயத் தொடங்கினர்.
இந்தக் கட்டத்தில் தான், அவசரகாலச் சட்ட விதிகளைப் பிரகடனப்படுத்தி, தேர் தல் முடிவுகளை அறிவிப்பதை நிறுத்தி வைக்கும் உத்தரவை தயார் செய்யுமாறு சட்டமா அதிபரிடம் ஜனாதிபதி கேட்டுக் கொண்டதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொழும்பு உள்ளிட்ட நாட் டின் அனைத்துப் பகுதிகளிலும் இராணுவத்தை பாதுகாப்பில் ஈடுபடுத்துமாறும், அவர் இராணுவத் தளபதிக்கு உத்தரவிட்டார்.
எனினும், ஜனாதிபதி மஹிந்தவின் உத்தரவுக்கு கீழ்ப்படிய முடியாது என்றும் இந்த மூவரும் மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.
சட்ட விரோதமான முறையில் இராணுவத்தினரை நிறுத்த உத்தரவிட முடியாது என்று இராணுவத் தளபதியும், அரசியல மைப்புக்கு முரணாக செயற்பட முடியாது என்று சட்டமா அதிபரும், இந்த திட்டங்களுக்கு உடன்பட முடியாதென பொலிஸ் மா அதிபரும், திட்டவட்டமாக கூறிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
இந்தப் பரபரப்பான சூழலின் ஒரு கட்டத்தில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவது சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
மஹிந்த ராஜபக் ஷவுக்குப் பாதகமான முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த கட்டத்தில் அதிகாலை 3 மணியளவில் திடீரென முடிவுகள் வெளிவருவது தடைப்பட்ட தால், நாடெங்கும் மக்களிடையே குழப் பம் ஏற்பட்டது.
பெரும்பாலானவர்கள் அன்று தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்வதற்காக வானொலியுடனோ, தொலைக்காட்சியுடனோ, இணையத்துடனோ இணைந்திருந்தனர்.
கிட்டத்தட்ட, ஒரு மணிநேரத்துக்கும் மேலாக இந்த தேக்கநிலை நீடித்தது.
மஹிந்த ராஜபக் ஷ வேறு வழியின்றி, பதவியிலிருந்து இறங்க முடிவு செய்த பின்னர் தான் அடுத்தடுத்து தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கின.
இதுகுறித்து விசாரணை நடத்தப் போவதாக புதிய அரசாங்கம் அறிவித்துள்ளது புதிய திருப்பம் தான்.
ஏற்கனவே இந்த சதித்திட்டம் குறித்து, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குற்றப்புலனாய்வுத் துறையிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
மஹிந்த ராஜபக் ஷ, கோத்தாபாய ராஜபக் ஷ, ஜீ.எல்.பீரிஸ், உதய கம்மன்பில ஆகியோரே இந்த திட்டத்துடன் தொடர்புடையவர்கள் என்று மங்கள சமரவீரவினால் முறையிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, முன்னர் சரத் பொன்சேகா சந்தித்த குற்றச்சாட்டுகளையும் விசாரணைகளையும் மஹிந்த ராஜபக் ஷவும், கோத்தாபய ராஜபக் ஷவும், சந்திக்கும் நிலை உருவாகியிருக்கிறது.
அதேவேளை, இராணுவத்தைப் பயன்படுத்தி, அதிகாரத்தை நிலை நிறுத்தும் முயற்சி தோல்வி கண்ட நிலையில் தான், சுமுகமான முறையில் அதிகாரத்தைக் கைமாற்றும் முடிவுக்கு மஹிந்த ராஜபக் ஷ வந்திருந்ததாகத் தெரிகிறது.
இராணுவத் தளபதி, பொலிஸ்மா அதி பர், சட்டமா அதிபர் ஆகியோர், அதிகாரத்தை தக்கவைக்கும் முயற்சிக்கு ஒத்துழைக்க மறுத்ததையடுத்து, வேறு வழி ஏதும் அவருக்கு இருக்கவில்லை.
குழப் பமான அந்தக் கட்டத்தில், மஹிந்த ராஜ பக் ஷ ஒரு தீர்க்கமான முடிவை எடுத் தால், தப்பிக் கொள்ளலாம் என்று எதிர்பார்த்தார்.
அதனால் தான் அவர் தேர்தல் முடிவுகளின் போக்கு தமக்குச் சாதகமாக வரப் போவதில்லை என்பதை முன்னுணர்ந்து, பதவியை விட்டு விலக முடிவு செய்தார்.
அது தனது சதித் திட்ட நடவடிக்கைகளின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் என்றும் அவர் கருதியிருந்தார் போலும்.
ஆனால், அவரது அந்த முடிவுக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார் கோத்தாபய ராஜபக் ஷ.
மஹிந்த ராஜபக் ஷவின் தோல்வியால், கோத்தாபய ராஜபக் ஷவே கடுமையாக அதிர்ச்சியடைந்தவராகக் காணப்பட்டார் என்றும், மிகவும் குழப்பமடைந்து போயிருந்தார் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
லலித் வீரதுங்க உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் பொறுத்திருக்கும்படி கூறிய போதிலும், மஹிந்த ராஜபக் ஷவினால், பொறுத்திருக்க முடியவில்லை.
அதிகாலை 4.30 மணியளவில் ரணில் விக்கிரமசிங்கவைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினார் அவர்.
அதையடுத்து தாம் அலரி மாளிகைக்கு வந்து பேசுவதாக ரணில் விக்கிரமசிங்க கூறிவிட்டு, தொடர்பை துண்டித்தார்.
ரணில் வருவதற்கிடையில் அவசர அவசரமாக சில கோப்புகளில் கையெழுத்திட்டார் மஹிந்த ராஜபக் ஷ.
அவற்றில் ஒன்றுதான், தனது இரண்டாவது மகன், யோஷித்த ராஜபக் ஷவை கடற்படையின் லெப்டினன்ட் தர அதிகாரிபதவியில் இருந்து விலகிக் கொள்வதற்கு அனுமதிக்கும் ஆணை.
2006ஆம் ஆண்டு கடற்படையில் இணைந்து கொண்ட யோஷித்த ராஜபக்ச, குறுகிய காலத்திலேயே லெப். தர அதிகாரியாக்கப்பட்டார்.
அதுமட்டுமன்றி, கடற்படையின் றகர் குழுவின் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
அவர் தொடர்ந்து கடற்படையில் இருந்தால் முன்னைய சலுகைகள் கிடைக்காது என்பது மஹிந்தவுக்குத் தெரியும்.
அதனால், அவரை கடற்படையில் இருந்து விலக வைத்தார்.
மேலும், யோஷித்த ராஜபக் ஷ கடற்படையில் ஒரு தளபதிக்குரிய வசதிகளோடு தான் இருந்தவர்.
கடற்படையின் விதிமுறைகளுக்கு ஏற்ப அவர் நடந்து கொண்டதில்லை.
புதிய அரசாங்கம், இராணுவ விசாரணை ஒன்றை அவர் மீது நடத்த உத்தரவிட்டால், அது மோசமான விளைவுகளை தனது மகனுக்கு ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து யோசித ராஜபக் ஷவை கடற்படையில் இருந்து வெளியேற அனுமதிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார் மஹிந்த.
அதிகாலை 5.15 மணியளவில் ரணிலின் வாகனத்துக்காக அலரி மாளிகையின் கதவுகள் திறக்கப்பட்டன.
ஒன்றன்பின் ஒன்றாக மூன்றடுக்குப் பாதுகாப்பு தடைகளைத் தாண்டி உள்ளே சென்ற ரணிலுக்கு அதிர்ச்சி காத்திருந்த்து.
ஏனென்றால், உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அங்கு நின்று கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் அவர் அங்கு சென்றிருக்க வேண்டியதில்லை.
அவ்வாறு செல்வதும் ஒரு பிரதம நீதியரசருக்குரிய மாண்பு அல்ல.
அவரைக் கடந்து உள்ளே சென்ற ரணில், நிலையை விளங்கப்படுத்தி, அதிகாரத்தை சுமுகமான முறையில் கைமாற்றுவதே சிறந்தது என்று மஹிந்த ராஜபக் ஷவுக்கு எடுத்துக் விளக்கினார்.
முன்னரே அதற்குத் தயாராகியிருந்த மஹிந்த ராஜபக் ஷ, ரணிலிடம் இருந்து சில உத்தரவாதங்களை எதிர்பார்த்தார்.
அதனைப் பெற்றுக் கொள்வதே தனக்கும் தனது குடும்பத்துக்கும் பாதுகாப்பு என்று அவர் புரிந்து கொண்டிருந்தார்.
அதனால், ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து அதற்கான உத்தரவாதத்தைப் பெறுவதே அவரது குறியாக இருந்தது.
கோத்தாபய ராஜபக் ஷ, லலித் வீரதுங்க ஆகியோருடன் இணைந்து ரணிலுடன் பேரத்தில் இறங்கினார் மஹிந்த.
ராஜபக் ஷ சகோதரர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று சந்திரிகா குமாரதுங்க இராஜதந்திரிகள் பங்கேற்ற நிகழ்வு ஒன்றில் கூறியதைச் சுட்டிக்காட்டி, தமக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று மஹிந்த கோரியிருந்தார்.
அவ்வாறு எதுவும் நடக்காது என்று ரணில் உறுதியளித்தார்.
அடுத்து, மஹிந்த ராஜபக் ஷ அச்சம் கொண்டிருந்தது சரத் பொன்சேகாவினால்.
அவர் புதிய அரசாங்கத்தில் பாதுகாப்புத் துறையில் வல்லமை மிக்கவராக மாறுவார் என்பது மஹிந்தவுக்குத் தெரிந்திருந்தது.
தன்னால் பழிவாங்கப்பட்ட சரத் பொன்சேகா தன்னையும், தனது தம்பி கோத்தாபய ராஜபக்ச ஷவையும் பழிவாங்குவார் என்று அவர் அஞ்சினார்.
கோத்தாபாய ராஜபக் ஷவின் பாதுகாப்புக்கும், மஹிந்த ராஜபக் ஷவின் பாதுகாப்புக்கும், தாம் உத்தரவாதம் அளிப்பதாகவும், கொமாண்டோ படையினரின் பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அவர்களுக்கு ரணில் உத்தரவாதமளித்தார்.
அதுபோலவே, தனது பாதுகாப்பு அச்சுறுத்தல் கருதி, கொம்பனி வீதியிலுள்ள அரச விருந்தினர் மாளிகையான ஒக்லண்ட் ஹவுஸை தனது அதிகாரபூர்வ வசதிப்பிடமாக வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
அதற்கு ரணில் உடன்படவில்லை. மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டுப் பதிலளிப்பதாகக் கூறினார்.
பின்னர், அவர் மைத்திரிபாலவிடம் அதனை தொலைபேசியில் கேட்டபோது அவர் அதற்கு இணங்கவில்லை.
வேறொரு பொருத்தமான இடம் அவருக்கு அளிக்கப்படும் என்று கூறிவிட்டார்.
சுமுகமாக ஆட்சியை கைமாற்ற இணங்கினால், தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் என்று ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்ததையடுத்தே, அலரி மாளிகையில் இருந்து வெளியேற இணங்கினார் மகிந்த.
அப்போது ரணில் விக்கிரமசிங்கவை தொலைபேசியில் அழைத்து மைத்திரிபால சிறிசேன பேசினார்.
அப்போது தொலைபேசியை மகிந்தவிடம் கொடுத்தார் ரணில்.
அப்போது தான் மைத்திரிபாலவுக்கு வாழ்த்துக் கூறியிருந்தார் மஹிந்த.
அவராகத் தொலைபேசி எடுத்து மைத்திரிபாலவுக்கு வாழ்த்துக் கூறவில்லை.
மஹிந்தவின் அலரி மாளிகை வெளியேற்றத்தை அவரது ஊடகச்செயலர் விஜயானந்த ஹேரத் அவசர அவசரமாக ஊடகங்களுக்கு அறிவித்தார்.
அப்போது தேர்தல் முடிவுகள் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருந்தன.
தோல்வியை ஒப்புக்கொண்டு அலரிமாளிகையில் இருந்து மஹிந்த ராஜபக் ஷ வெளியேறியதும், தேர்தல் முடிவுகளின் மீதிருந்த ஆர்வமும், பரபரப்பும் அப்படியே பொசுங்கிப் போனது.
தேர்தல் முடிவுகள் வெளிவர முன்னரே, பதவியில் இருந்து விலகிச் சென்றதன் மூலம் மக்களின் மனதில் இடம்பிடிக்க முயன்றார் மஹிந்த ராஜபக் ஷ.
அவரது அந்த முயற்சிக்காக காரணம், அதிகாலையில் தான் மேற்கோண்ட சதித்திட்டத்தின் இரகசியத்தை மறைப்பதற்கேயாகும்.
இப்போது, மஹிந்த ராஜபக் ஷவும் அவரது சகாக்களும், அத்தகைய திட்டங்கள் ஏதும் இருக்கவில்லை என்றே கூறுகின்றனர்.
ஆனால், அமெரிக்க இராஜாங்கச் செயலர், ஐ.நா பொதுச்செயலர், மேலும் பல நாடுகளின் தலைவர்கள் தமது செய்தியில், அமைதியான முறையில் அதிகார கைமாற்றம் நிகழ்ந்ததை வரவேற்றுள்ளனர்.
இதுமறைமுகமாக உணர்த்துவது எதனையென்றால், அத்தகைய அதிகாரக் கைமாற்றலுக்குரிய சூழல் இலங்கையில் இருந்திருக்கவில்லை என்பதை தான்.
எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக் ஷ இப்போது அதிகாரத்தில் இருந்து இறக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக இராணுவச் சூழ்ச்சிக்குத் திட்டமிட்டதான விசாரணைக்குமுகம் கொடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
சரத் பொன்சேகாவுக்கு அவர் எதனைச் செய்தாரோ அதுவே இப்போது அவரைத் தாக்கத் தொடங்கியிருக்கிறது.
இதனை முன்வினைப் பயன் என்பதா, ஊழ்வினை என்பதா?
-என்.கண்ணன்-