வெள்ளவத்தை கடற்கரை வீதியில் இடம்பெற்ற மீன் லொறி கொள்ளையும் ஏழு மாதங்களின் பின் சிக்கிய சந்தேக நபர்களும்
வீரசிங்கலாகே சந்திரபால பெர்னாண்டோ ஒரு மீன் வியாபாரி. மொரட்டுவை மொரட்டு முல்லை பிரதேசத்தை சேர்ந்த சந்திரபால தனது தொழிலுக்கு தேவையான மீன் வகைகளை வழமையாக பேலியகொடை மீன் சந்தையிலிருந்து எடுத்து வந்து விற்பனை செய்பவர்.
தனது தொழிலுக்கு ஏற்றாற்போல் டிமோ பட்ட ரக லொறியொன்றினைக் கொண்டிருந்த சந்திரபால அந்த லொறியிலேயே மீன்களை கொள்வனவு செய்ய செல்வது வழமையாகும்.
அன்று கடந்த 2014 மே மாதம் 05 ஆம் திகதி திங்கட்கிழமை. தனது அன்றைய நாள் விற்பனைக்காக மீன் கொள்வனவு செய்ய பேலியகொடை மீன் சந்தைக்கு செல்லலானார் சந்திரபால.
மொரட்டுவையிலிருந்து இரத்மலானை, கல்கிஸ்ஸை, தெஹிவளை வரை காலி வீதியில் வரும் சந்திரபால தெஹிவளையில் இருந்து கோட்டை பகுதியை நோக்கி வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி ஊடாக பயணிக்கும் நோக்கில் கடற்கரை பகுதியூடான வீதியில் தனது லொறியை செலுத்தலானார்.
அப்போது நேரம் எப்படியும் அதிகாலை 4.30 ஐ எட்டியிருந்திருக்கும். தெஹிவளையை கடந்து வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குள் சந்திரபால தனது (டப்ளியூ.பீ. எல்.எப்.9380) என்ற லொறியை செலுத்திய போது டீபக் நிறுவனத்துக்கு முன்னால் வைத்து இரு பொலிஸார் அந்த டிமோ லொறியை நிறுத்து மாறு சமிக்ஞை செய்துள்ளனர்.
பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தாது, அவர்களுக்கு ஒத்துழைக்கும் நோக்கோடு சந்திரபாலவும் தனது லொறியை ஒரு ஓரமாக நிறுத்தவே உப பொலிஸ் பரிசோதகர் என அடையாளம் கண்டுகொள்ளும் விதமாக உடை அணிந்திருந்த ஒருவரும் கான்ஸ்டபிள் என அடையாளம் காணுமளவுக்கு சீருடையணிந்திருந்த ஒருவரும் லொறியருகே வந்துள்ளனர்.
இதனை விட பொலிஸார் நின்றிருந்த இடத்தில் வெள்ளை நிற சொகுசு கார் ஒன்றும் நிறுத்தப்பட்டிருந்துள்ளதுடன் அதன் அருகே சிவில் உடையில் நபர் ஒருவர் நின்றிருந்துள்ளார்.
பொலிஸார் வழமையாக கேட்பதைப் போன்று சாரதி அனுமதிப் பத்திரம், காப்புறுதி தொடர்பிலான ஆவணம் ஆகியவற்றை பரிசோதித்துள்ள சீருடையில் இருந்த அவ்விருவரும் சந்திரபாலவின் பயணம் குறித்து வினவியுள்ளனர்.
தான் ஒரு மீன் வியாபாரி என்பதையும் வழமையாக அந்த வீதியில் பேலியகொடைக்கு மீன் கொள்வனவுக்கு செல்வதையும் சந்திரபால இதன் போது அவர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
இதனை அடுத்து லொறியை சோதனை செய்ய வேண்டும் என பொலிஸ் சீருடையில் இருந்த அவ்விருவரும் சந்திரபாலவிடம் குறிப்பிட்டுள்ளனர்.
வழமையாக அவ்விடத்தில் பொலிஸாரை கண்டிராத சந்திரபால ஏதேனும் விஷேட நடவடிக்கையாக இருக்கும் என எண்னி பொலிஸாரின் கோரிக்கைக்கு இடமளித்துள்ளார்.
இதன் போது லொறியை சோதனை செய்த அவ்விரு பொலிஸ் சீருடைக் காரர்களின் கவனமும் மீன் கொள்வனவின் பொருட்டு சந்திரபால வைத்திருந்த நாலரை இலட்சம் ரூபா பணம் மீது சென்றது.
அந்த பையை கையிலெடுக்கும் போது சந்திரபால அதில் மீன் கொள்வனவுக்கான பணம் உள்ளதாக குறிப்பிடுகையிலேயே அந்த பையுடன் அந்த இரு பொலிஸ் சீருடைக் காரர்களும் துப்பாக்கியை நீட்டி சந்திரபாலவை அச்சுறுத்திவிட்டு வெள்ளைக் காரில் வேகமாக பறந்துள்ளனர்.
கூடவே நின்றிருந்த சிவில் உடைக் காரரும் அந்தக் காரில் மின்னலாய் மறைய ஒரு கணம் சந்திரபாலவால் நடந்ததை நம்பமுடியவில்லை.
ஆம், அது ஒரு வழிப்பறி. இல்லை அது ஒரு ஆயுத முனைக் கொள்ளை. உடனடியாக சுதாகரித்துக் கொள்ளும் சந்திரபால அங்கிருந்து வேகமாக வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தை அடைகின்றார்.
அங்கு கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரியிடம் நடந்ததை அப்படியே ஒன்று விடாது ஒப்புவிக்க பொலிஸார் உஷாராகினர்.
விடயம் வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் உதயகுமார வுட்லருக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து அவர் நிலைமையை அவதானித்துவிட்டு வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவுக்கு பொறுப்பான பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரஸன்ன டயஸ் நாகஹவத்தவிடம் சந்தேக நபரை கைது செய்யும் பொறுப்பை ஒப்படைத்தார்.
இந் நிலையில் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க, கொழும்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்துரட்ட, கொழும்பு தெற்குக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரேமலால் ரணகல மற்றும் கொழும்பு தெற்கு உதவி பொலிஸ் அத்தியட்சர் நிஸாந்த டீ சொய்ஸா ஆகியோரின் மேற்பார்வையின் கீழ்
வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் உதயகுமார வுட்லரின் ஆலோசனைக்கு அமைய குற்றவியல் பிரிவுக்கு பொறுப்பான பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் நாகஹவத்த தலைமையில் அந்த பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்களான ஜயதிலக (4972), திலகரட்ன (70963),லக்மால்(72737) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழு விசாரணைகளை ஆரம்பித்தது.
குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி நாகஹவத்த விசாரணைகளை பல்வேறு கோணங்களில் நடத்தினார். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயகுமார வுட்லரின் ஆலோசனைகளுக்கு அமைவாக விசாரணைகள் விரிவு படுத்தப்பட்டன.
பிரதேசத்தில் உள்ள சீ.சீ.ரிவீ.கமராக்களின் உதவியுடனும் அறிவியல் ரீதியிலான தடயங்களின் உதவியுடனும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதனை அடுத்து 48 மணி நேரத்துக்குள் இந்த கொள்ளையுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை பொலிஸாரால் கைது செய்ய முடிந்தது.
திஸாநாயக்க முதியன்ஸலாகே நலிந்த பண்டார என்பவரையே பொலிஸார் இவ்வாறு கைது செய்தனர். இவர் சிவில் உடையில் காரின் அருகே இருந்தவர் என்பதை உறுதி செய்துகொண்ட பொலிஸார் பொலிஸ் சீருடையில் இருந்தவர்கள் தொடர்பில் தொடர்ச்சியான விசாரணைகளை முன்னெடுத்தனர்.
எனினும் அவர்கள் தொடர்பில் எவ்வித சரியான தகவல்களையும் பொலிஸாரால் வெளிப்படுத்திக்கொள்ள இயலவில்லை.
எனினும் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளைக் கார் அந்த நபருக்கு சொந்தமானது என்பதை பொலிஸார் கண்டறிந்தனர்.
எனினும் அது தற்போது யாரிடமும் உள்ளது என்பதை கண்டறிய முடியவில்லை. இந் நிலையில் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
இந்நிலையில் தான் கடந்த மாதம் குருணாகல் நகரில் வைத்து, வாரியபொல பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளை ஒன்று தொடர்பில் இருவரை வாரியபொல பொலிஸார் கைது செய்தனர்.
வெள்ளை நிற காரில் பயணித்துக் கொண்டிருந்த போதே அவ்விருவரையும் அவர்கள் கைது செய்திருந்தனர். குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சரத் குமார, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சமரகோன் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் வாரியபொல பொலிஸார் அவர்களை விசாரணை செய்ததில் வெள்ளவத்தை கொள்ளையுடன் அவர்களுக்கு தொடர்பிருப்பதை வெளிப்படுத்திக் கொண்டனர்.
இதனை அடுத்து அவ்விருவரையும் வெள்ளவத்தை பொலிஸாரிடம் ஒப்படைப்பது என அவர்கள் முடிவெடுத்தனர்.
இதன் படி குருணாகலுக்கு சென்ற வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தின் விஷேட குழு அவர்களை கைது செய்து வெள்ளவத்தைக்கு அழைத்து வந்தது.
அந்த இருவரும் வேறு யாரும் அல்ல, மீன் வியாபாரி சந்திரபாலவிடம் நாலரை இலட்சம் ரூபாவை பறித்தவர்கள். பொலிஸ் வேடமிட்டு இருந்தவர்களே இந்த கொள்ளையையே செய்ததாக பொலிஸார் நம்பி வந்த நிலையில் பொலிஸாரின் சந்தேகம் பிழைத்தது.
ஆம், அவர்கள் வேடமணிந்த பொலிஸார் அல்ல. மாறாக உண்மையிலேயே பொலிஸார் என்பதை வாரியபொல பொலிஸாரும் வெள்ளவத்தை பொலிஸாரும் உறுதி செய்தனர்.
மின்னேரிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய அனுர உபதிஸ்ஸ என்ற உப பொலிஸ் பரிசோதகரும் ஹபராதுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த தரங்க என்ற பொலிஸ் உத்தியோகத்தருமே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள்.
வெள்ளவத்தை பொலிஸார் தொடர்ச்சியாக இந்த பொலிஸ் கொள்ளையர்களிடம் செய்த விசாரணைகளில் குறித்த மீன் வியாபாரியிடம் கொள்ளையிட்டமை தொடர்பிலான அனைத்து தகவல்களையும் வெளிப்படுத்திக் கொண்டனர்.
இதனை அடுத்து கொள்ளையுடன் தொடர்புடைய இரு பொலிஸார் உள்ளிட்ட இவர்கள் மூவரும் கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனைவிட கடந்த ஜனவரி 6 ஆம் திகதி இவர்கள் நீதிமன்றில் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் உப பொலிஸ் பரிசோதகர் மீன் வியாபாரியினால் அடையாளம் காட்டப்பட்டுள்ளார்.
பல மாதங்கள் நீடித்த இந்த கொள்ளை தொடர்பிலான மர்மம் கலந்த பொலிஸ் விசாரணைகள் வெள்ளவத்தை, வாரியபொல பொலிஸாரின் சிறப்பான நடவடிக்கை காரணமாக முடிவுக்கு வந்தது.
இன்று பொலிஸில் சேவை செய்துகொண்டே கொள்ளையில் ஈடுபட்ட அந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கடமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்கின்றன. வாரியபொல நீதிவன் நீதிமன்றிலும் இவ்விரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் எதிரான பிறிதொரு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வெள்ளவத்தை பிரதேசத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகள் பெரும்பாலும் விசாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ள நிலையில் நிலுவையில் இருந்த இந்த கொள்ளை சம்பவம் தொடர்பிலான சந்தேக நபர்களும் தற்போது சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளனர்.
தராதரம் பாராது பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலரும் அவர்கள் செய்த இவ்வாறான பொலிஸ் சேவைக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் இவ்வாறு வெள்ளவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையை நாம் பல்வேறு சமயங்களில் எழுதியிருக்கின்றோம்.
இந் நிலையில் 58 ஆயிரத்துக்கும் அதிகமான சனத்தொகையை கொண்ட வெள்ளவத்தையை குற்ற சூனிய பிரதேசமாக மாற்றுவதே தனது இலக்கு என குறிப்பிடும் வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் உதயகுமார வுட்லர் அதனை அடைய பொதுமக்கள் உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றார்.
வெள்ளவத்தை பிரதேசத்தில் குற்றங்களை முழுமையாக இல்லாதொழிக்க தமது நிலையத்தில் கடமையில் இருக்கும் 80 பொலிஸாரால் மட்டும் முடியாது என்பதை ஞாபகப்படுத்தும் அவர் அது தொடர்பில் வெள்ளவத்தை மக்கள் தம்முடன் கைகோர்த்து நின்று உதவ வேண்டும் என குறிப்பிடுகின்றார்.
கடந்த காலங்களில் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட பல இடங்களில் கொள்ளைகள் இடம்பெற்ற போதும் தற்போது வெள்ளவத்தை பிரதேச வங்கிகள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பாதுகாப்பு அலாரம் செயற்படுத்தப்படும் நிலையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதய குமார வுட்லரினால் பல்வேறு செயற்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்குதல், அவர்களுடன் தகவல்களை பரிமாறிக்கொள்ளல், ஒத்துழைத்தல் போன்ற வற்றினூடாக வெள்ளவத்தையையும் குற்றச் செயல்கள் இடம்பெறாத சொர்க்க புரியாக மாற்ற நாமும் ஒத்துழைப்பு நல்குவோம்.
– எம்.எப்.எம்.பஸீர் –