முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித ராஜபக்ஸதான் ரக்பி விளையாட்டு வீரர் முஹமட் வாஷிம் தஜுடீனை படுகொலை செய்தார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார் யோஷித ராஜபக்ஸவின் முன்னாள் காதலியான யசரா அபேநாயக்க.
யசரா அபேநாயக்கவுக்கும், முஹமட் வாஷிம் தஜுடீனுக்கும் இடையில் கள்ள தொடர்பு காணப்படுகின்றது என்கிற சந்தேகத்திலேயே இப்படுகொலை நடத்தப்பட்டு உள்ளது என்றும் கூறி உள்ளார்.
தஜுடீன் ஹவ்லொக் விளையாட்டு கழக வீரர். தேசிய ரக்பி அணியின் உப தலைவராக இருந்தார்.
இந்நிலையிலேயே கடல் படையில் உள்ள நெருக்கமான அதிகாரிகள், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் ஆகியோரின் உதவியுடன் கொழும்பு -05 இல் 2009 ஆம் ஆண்டு தஜுடீனை யோஷித ராஜபக்ஸ படுகொலை செய்தார்,
பின்பு தஜுடீனின் காருக்குள்ளேயே சடலம் எரியூட்டப்பட்டது, ஆனால் இவரை கொல்லப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிச் சன்னம் பார்க் வீதியில் இன்னோர் இடத்தில் இருந்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது,
தஜுடீன் துப்பாக்கியால் சுடப்பட்ட பின்புதான் சடலம் காருக்குள் கொண்டு வரப்பட்டு எரிக்கப்பட்டது என்பது நிரூபணம் ஆகின்றது என்று யசரா தெரிவித்தார்.
இப்படுகொலையை பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்க மூலமாக யோஷித மறைத்தார், படுகொலையை தொடர்ந்து நேரில் சென்ற பிரதிப் பொலிஸ் மா அதிபரால் யோஷித ராஜபக்ஸவின் உத்தரவுக்கு அமைய கிருலப்பனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸாரின் புலனாய்வு அறிக்கை கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது என்றும் யசரா சொன்னார்.
மிக பெரிய கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்த லொஹான் ரத்வத்தையின் புதல்வியை திருமணம் செய்கின்றமைக்காக யோஷித காதலிக்கின்றார், இதன் மூலம் கண்டி தலதா மாளிகையின் பஸ்நாயக்க நிலமேயாக திட்டமிட்டு உள்ளார் என்றும் யசரா சொன்னார்.