ராமஜெயம் கொலை நடந்த பொழுது முன்னாள் அமைச்சரும் ராமஜெயத்தின் அண்ணனுமான நேரு சென்னையில் இருந்தார். கொலை செய்தவர்கள் நேருவின் தொலைபேசி எண்ணை கேட்டு போன் செய்ததாகவும் அப்போது சொல்லப்பட்டது.
இந்நிலையில் நேரு தனது தம்பி கொலைக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து ஆகவேண்டும் என பலமுறை காவல்துறை அதிகாரிகளை நேரிலும் போனிலும் கோரிக்கை வைத்துள்ளார்.
ஆனால் கடந்த மூன்றாண்டுகளில், காவல்துறையின் கவனம் நேருவையும் அவரது உறவினர்களையும் வட்டமடிப்பதைத் தவிர வேறு எங்கும் போகவில்லை.
காரணம் ராமஜெயம் கொலை செய்யப்படுவதற்கு முன்பு, ராமஜெயம் உடன் இருந்த யாரையும் நேரு உடன் வைத்துக்கொள்வதோ அல்லது நெருங்க விடுவதோ இல்லை.
ஆனால் தற்போது ராமஜெயத்தின் கூட்டாளிகளைத் தன்னோடு சேர்த்துக் கொண்டு அவர்களுக்கு பொறுப்புகளும் வழங்கியுள்ளார். இது போலீஸாரிடையே சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.
இப்படியிருக்கும் நிலையில், நேருவை சிபிசிஐடி போலீசார் நேரில் அழைத்து மணிக்கணக்கில் விசாரித்த சம்ப வங்கள் எல்லாம் நடந்துள்ளன.
ஆனால் இன்றுவரை கொலைக்கான காரணம் என்ன என்பதை மட்டும் போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான் கொடுமை. இதோ கண்டுபிடிச்சிட்டோம்… அதோ கண்டுபிடிச்சிட்டோம் என காலம் கடத்துகிறார்களோ ஒழிய, குற்றவாளிகளைக் கண்டுபிடித்தபாடில்லை என புலம்பி நிற்கிறது அவரின் குடும்பம்.
நிம்மதியிழந்த குடும்பம்
இப்போதும் கூட ராமஜெயத்தின் பெயரைக்கேட்டாலோ, அல்லது அவரைப்பற்றி பேசினாலோ நேரு உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அடுத்த சில நிமிடங்கள் வாயடைத்து பேசாமல் நிற்பார்கள். அந்தளவுக்கு ராமஜெயம் கொலை நேருவின் குடும்பத்தை சீர்குலைய வைத்துள்ளது.
இப்படியிருக்கும் போதுதான் நேரு, தனது தம்பி சாவுக்கு இவர்தான் காரணம் என தங்களுக்கு தெரிந்த அடுத்த நிமிடம் `நான் உள்ளே இருப்பேன்` என சபதம்கூட போட்டுள்ளாராம். இப்போதும் ராமஜெயம் குடும்பம், நேரு குடும்பம், அவரது தம்பி குடும்பங்கள் என கூட்டு குடும்பமாகவே உள்ளார்கள். ஒட்டுமொத்த குடும்பத்தின் நம்பிக்கையாக இருந்த ராமஜெயம் இப்போது இல்லை.
சிபிசிஐடி போலீசாரின் கால அவகாசமும் சிபிஐ விசாரணையும்
மூன்று வருடங்களாக முடிவுக்கு வராத இந்த கொலைவழக்கில், உண்மை வெளியே வரவேண்டுமானால் சிபிஐக்கு வழக்கை மாற்றிக்கொடுங்கள். அப்படி மாற்றினால்தான் உண்மை வெளியே வரும் என ராமஜெயத்தின் மனைவி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இதற்கு சி.பி.சி.ஐ.டி. சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், `ராமஜெயம் கொலை வழக்கில் 177 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. கால அவகாசம் தேவை நிச்சயம் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துவிடுவோம்` என கூறியுள்ளனர். பதில் மனுவை விசாரித்த நீதிபதி மார்ச்.10 வரை அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளார்.
போலீஸார் சந்தேகப்படுவதுபோல் ராமஜெயம் கொலைக் குற்றவாளி தன் உறவினராக இருந்தாலும், வேறு எவராக இருந்தாலும் உண்மை வெளியே தெரியணும் என்கிறார் ராமஜெயத்தின் மனைவி லதா. இதுவரை நடந்த போலீஸ் விசாரணை அனைத்தும் திக்குதெரியாத காட்டில் நிற்பதாகவே தெரிகின்றது. இந்நிலையில் கால அவகாசம் தந்துள்ளது நீதிமன்றம்.
விடைதெரியாத இந்த ராமஜெயம் கொலை வழக்கில் உண்மையைக் கண்டுபிடிக்க முடியாமல் குழம்பி நிற்கும் போலீஸார்…கடந்த ஸ்ரீரங்கம் சட்டமன்ற தேர்தலில் ராமஜெயம் விட்டசவால்…அந்தச் சவால்தான் ராமஜெயம் கொலைக்கு காரணமா…
ஜெயலலிதாவுக்கு சவால்விட்ட ராமஜெயம்!
இதோ… ஸ்ரீரங்கத்தில் இடைத்தேர்தல் களைகட்டத் தொடங்கிவிட்டது. அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் படை களமிறங்கியிருக்கிறது.
போட்டிக்கு பொதுவேட்பாளர் என்றெல்லாம் மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து சோர்ந்துபோன கருணாநிதி, 63 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு பட்டியலை அறிவித்தார்.
ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயிக்கணும் என அ.தி.மு.க.வினரும், அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு அச்சாரம் ஸ்ரீரங்கம் தேர்தல்தான் என நினைக்கும் தி.மு.க.வினரும் ஓடியாடிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தத் தேர்தலுக்கு திட்டம் தீட்டி வேலை செய்ய ராமஜெயம் இல்லாதது தி.மு.க.வினருக்கு மிகப்பெரிய மைனஸ்தான்.
கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் கரைவேட்டி கட்டாத கட்சிக்காரராய் திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் வலம் வந்தவர் ராமஜெயம். ”ஸ்ரீரங்கம் அ.தி.மு.க.வின் கோட்டை, அவர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதி என சொல்லவது தவறு. ஜெயலலிதா ஒன்றும் தோல்வியே அடையாதவர் இல்லை.
ஜெயலலிதாவை நேரில் சந்திக்க ஆசைப்பட்டால் ஸ்ரீரங்கம் ரங்கநாதர்கூட அவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டுதான் பார்க்க வேண்டும். ஆனால், தி.மு.க. வேட்பாளர் அப்படிப்பட்டவர் இல்லை. நீங்கள் கூப்பிட்டக் குரலுக்கு ஓடி வருவார். சாதாரணமானவர். உங்களுக்காக ஓடி உழைக்கக்கூடியவர்.
ஜெயலலிதாவுக்கு பயந்துகொண்டு பத்திரிகைகளுக்கு போஸ் கொடுக்க, நாலைந்து இடத்தில் நோட்டீஸ் கொடுத்துவிட்டு கலைந்துசெல்கின்ற நிலை அங்கே இருக்கு. நாங்கள் அப்படியில்லை. கிராமம் கிராமமாக மக்களைத் தேடி செல்கின்றோம். மக்கள் எங்களை ஆதரிக்கிறார்கள் அதுதான் எங்களின் பலம்.
தி.மு.க. என்கிற கட்சியே இல்லாத அளவுக்கு அந்தக் கட்சியைத் தோற்கடிப்பேன் என தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதா சொல்லுறாங்க. அப்படிப்பட்ட ஜெயலலிதாவைத் தோற்கடிப்பதுதான் எனது லட்சியம். ஜெயலலிதாவை வீழ்த்த ஸ்ரீரங்கத்தில் நான் மேற்கொள்ளும் வேலை, வரலாற்று சிறப்பு மிக்க வேலை.
நமது வியூகம், 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டும். எந்த வழக்கு, அடக்குமுறை வந்தாலும் நான் துணையிருக்கிறேன். ராணுவ சிப்பாய்களைப்போல வேலை செய்யுங்கள்” என தி.மு.க.வினருக்கு கட்டளையிட்டார் ராமஜெயம்.
இந்த சவாலில் ராமஜெயம் தோற்றுபோனாலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளரான ஜெயலலிதா, 41,848 ஓட்டுகள்தான் முன்னிலை பெற்றார். ஜெயலலிதாவின் வாக்குகள் வித்தியாசம் 50 ஆயிரத்தைக்கூட தாண்டாதற்கு ராமஜெயம் தடைக்கல்லாக இருந்தார். கடுமையாக உழைத்தார். சவால் விட்டார்.
”இந்த சவால்கள்தான் ஆட்சியாளர்களுக்கு ராமஜெயத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்தியது. மக்கள் நெருக்கம் மிக்க தில்லை நகர் பகுதியில் இருந்து ராமஜெயம் கடத்தப்பட்டதும், நகரின் முக்கிய வீதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் இயங்காமல் இருந்தது.
விசாரணை என்கிற பெயரில் காவல்துறை அதிகாரிகள் நேருவின் குடும்பத்தினரையே வட்டமிட்டனர்” என்று சொல்லும் ராமஜெயத்தின் ஆதவாளர்கள், ”இந்த கொலைக்கான எந்தத் துருப்பையும் கண்டுபிடிக்காமல் இருக்க, இந்தச் சவால் காரணமாக இருக்கலாம். இதன் பின்னணியில் சில காவல்துறை அதிகாரிகள் மூளையாக செயல்பட்டிருக்கலாம்” என்கிறார்கள்.
சி.பி.ஐ. கைகளுக்கு விசாரணை சென்றால்தான் இந்த மரணத்தின் மர்மங்கள் விலகும் என்பது அவர்களின் கருத்து.
ராமஜெயத்தை கொன்றவர்கள் விமானத்தில் வந்தார்களா… ராமஜெயம் கொலையில் வேறு என்னென்ன மர்மங்கள் உள்ளன? என்பதை நாளைப் பார்க்கலாம்
தொடரும்…