மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நேற்று தனது கடமையை பொறுப்பேற்ற பின்பு வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவுக்கு விஜயம் செய்து பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு நலன் விசாரித்தார்.
இதன் போது நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீ ரங்கா, முன்னாள் சிறைச்சாலை புனர்வாழ்வு அமைச்சின் ஆலோசகர் எஸ்.சதீஸ்குமார், வெலிக்கடை சிறைச்சாலையின் பொறுப்பாளர் எமில்.ஆர்.லியனகே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவிற்கும் விஜயம் செய்த பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் முதலில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 தமிழ் அரசியல் கைதிகளை நேரில் கண்டு அவர்களது துயரங்களை பகிர்ந்து கொண்டனர்.
கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றார்.
அரசியல் கைதிகள் தம்மை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பிரதியமைச்சரிடம் கோரியுள்ளனர்
அத்துடன் சிறைச்சாலையில் இந்து ஆலயம் ஒன்றையும் அமைத்துதர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தமக்குத் தேவையான பொருட்களை பெற்றுத்தருமாறும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
பயங்கரவாத சட்டத்தின் கீழ் சிங்கள பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டு இங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
இவர்களுடன் நீண்ட நேரமாக கலந்துரையாடிய பிரதிஅமைச்சர் குறித்த கைதிகளின் விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அதன் போது உறுதியளித்தார்.
அரசியல் கைதிகளை பார்வையிட்ட பின்னர் சிறைச்சாலைக்கு வெளியே ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த பிரதியமைச்சர்;
நான் கடமையை பொறுப்பேற்ற பின்பு கோயிலுக்கு செல்லாமல் வெலிக்கடை சிறைச்சாலைக்கு வருகை தந்தேன். இங்கு பெண் கைதிகள் பல வருடங்களாக வேதனையில் வாழ்ந்து வருகின்றனர்.
எனவே குறித்த கைதிகள் தமது குடும்பங்களுடன் வாழ்வதற்கான வழியினை அரசு செய்ய வேண்டும். முன்னைய அரசின் தவறினை போக்க வேண்டும் என்றார்.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோர் உண்மையான குற்றவாளிகள் இல்லை. எனினும் உண்மையான குற்றவாளிகள் வெளியே சுதந்திரமாக நடமாடுகின்றனர்.
ஆகவே குறித்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும். இது தொடர்பில் நான் நீதி அமைச்சருடன் கலந்துரையாடுவேன் என்று இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா கூறினார்.