சவுதி அரேபியா சென்றுள்ள அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிச்செல் தலையை மறைக்கும் துணியை அணியாததால் சர்ச்சை வெடித்துள்ளது. ரியாத்தில் இறங்கியபோது அவரிடம் அதிகாரிகள் நடந்து கொண்ட விதம் அவரை சங்கடத்திற்குள்ளாக்கியது.
3 நாட்கள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட பின்னர் அமெரிக்க அதிபர் ஒபாமா, மனைவி மிச்செல்லுடன், சவுதி அரேபிய மன்னர் அப்துல்லாவின் இறுதி சடங்கில் பங்கேற்க சவுதி அரேபியாவுக்கு சென்றார்.
அங்கு ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா, சவுதி அரபியாவில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விதிகளை தவிர்த்துக் கொண்டார். மிச்செல் தலையை மறைக்கும் துணி அணியாததால் சர்ச்சை ஏற்படுத்தியது.
சவுதி அரேபியாவில் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் இருந்து மிச்செல் ஒபாமா இறங்கியதும், எப்போதும் அணியும் மேற்கத்திய ஆடையில் இல்லாமல், நீண்ட பேன்ட் மற்றும் பளீர்நிறத்திலான ஆடையுடன் மேல்அங்கி போன்றவையையும் அணிந்திருந்தார்.
அவர்கள் ஒபாமாவை கை குலுக்கி வரவேற்றனர். மிச்செல்லையும் சிலர் கை குலுக்கி வரவேற்றனர். ஆனால் பலர் அவரை கை குலுக்கி வரவேற்பதை தவிர்த்தனர்.
ஆனால் மிச்செல் புகைப்படத்தை மங்கலாக்கி அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பவில்லை என்று சவுதி அரேபியா விளக்கம் அளித்துள்ளது.
சவுதி அரேபியா சென்ற ஒபாமா, அவரது மனைவி மிச்செல் புதிய மன்னர் சல்மானை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இந்த காட்சியை அந்நாட்டு அரசு தொலைக்காட்சி ‘சவுதி டிவி’ வெளியிட்டது. வீடியோ பதிவில் மிச்செல் உருவத்தை மட்டும் மங்கலாக்கி ஒளிபரப்பு செய்யப்பட்டது என குற்றச்சாட்டு எழுந்தது.
சவுதி அரேபியாவின் கட்டுப்பாட்டை மீறிய வகையில் மிச்செல் உடை அணிந்திருந்ததால் அவருடைய உருவம் வீடியோவில் மங்கலாக்கப்பட்டுள்ளது என்ற கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவின.
கட்டுப்பாட்டை தவிர்த்த மிச்செலுக்கு பலர் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அமெரிக்காவில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்திடம் அமெரிக்க வெள்ளை மாளிகை விளக்கம் கேட்டது.
சவுதி தூதரகம் அமெரிக்காவின் முதன்மை பெண்ணின் புகைப்படம் மங்கலாக்கப்பட்டது என்பது தவறானது. உண்மையை ஆய்வு செய்யுங்கள். பேஸ்புக்கை இல்லை என்று தெரிவித்துள்ளது. சவுதி டி.வி.யும் அவரது படத்தை மங்கலாக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.