மனிதனாகப் பிறந்தவன் இயற்கைக்கு கட்டுப்பட்டும் செயற்கையோடு இணைந்தும் வாழ்ந்தால் பூமியில் நிலையாக வாழ முடியும் என்று கூறிய ரிஷிகளின் வாக்குகளை கேட்டு வாழ்ந்திருக்கிறோம்.
இயற்கைக்கு கட்டுப்படா விட்டால் அழிவைச் சந்தித்து விடுவோம் என்ற பயத்தில் பூமிப் பூஜை முதல் வேள்வி வரை செய்து வாழ வேண்டும் என்ற துடிப்பில் வாழ்ந்து வந்த சமூகம் தான் நம் தமிழ்ச் சமூகம்.
அதிலும் நகரமயமாகியும் கிராமத்து மண்ணும் வாசனையும் சுற்றமும் உறவுகளும் சூழ்ந்திருந்தால் அதுதான் நிலையான இன்பம் என்று வாழத்துடிக்கும் குடும்பங்களில் ஒன்றுதான் நிலோஷன் ரசிதா என்ற இந்த இளம் குடும்பம்.
இயற்கைக்கு கட்டுப்பட்டு செயற்கையோடு ஒன்றி வாழ முற்பட்ட போது மூன்று உயிர்களையும் அங்கங்களையும் இழந்தும் வாழ வேண்டும் என்ற துடிப்போடு தமது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்துள்ளது.
தொடர் இன்னல்களுக்கு மத்தியிலும் எதிர்ப்புக்களை எல்லாம் எதிர் நீச்சலாக்கி வாழத்துடிக்கும் இந்த குடும்பம் தான் முள்ளியவளையைச் சேர்ந்த நிலோஷன் ரசிதா.
ஆறு ஆண் சகோதரர்களுக்கு ஆசைத் தங்கையாய் பள்ளிப் பருவத்தில் சிறகடித்துப் பறந்த நான் 2006 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 27 ஆம் திகதி குடும்பத்தோடு மதியச் சாப்பாட்டுக்காக அமரும் போது திடீரென விழுந்த ஷெல்லில் என் இரு கைகளும் கண்முன்னே பறப்பதை மட்டும் கண்டேன்.
வைத்தியசாலையில் எழுந்து பார்த்த போது உடல் முழுவதும் வலி தெரிந்தது. எழ முற்பட்டு கைகளை தேடினேன். இரு கைகளையும் காணவில்லை. திரும்பிப் பார்த்தேன்.
என் சுற்றம் மட்டும் கண்ணீர் வடித்தபடி கண்முன் நின்றது. அவர்களைப் பார்க்கும்போதுதான் தெரியும் எனக்கு ஒரு கண் பார்வை இழந்துவிட்டது என்று.
ஒவ்வொரு நாளும் மெல்ல மெல்ல நகர ஆரம்பித்தது. பெற்றோரினதும் உடன் பிறப்புக்களினதும் அரவணைப் பாலும் எனது மனத்துணிவாலும் மெல்ல மெல்ல தேறி வந்தேன்.
உடல் நிலை தேறிய பின் மன நிலையையும் தேற்றி சாதாரண வாழ்வு வாழ முற்படும் போது மீண்டும் யுத்தம் உக்கிரமடைந்தது. இரவு பகல் பாராது தொடர்ந்த யுத்தத்தால் நாங்களும் இடம்பெயரும் நிலை உருவானது.
புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம், உடையார்கட்டு, முள்ளி வாய்க்கால், வட்டுவாகல் என எங்கள் இடம்பெயர்வு தொடர்ந்தது.
எனக்கு இரு கைகளும் இல்லாதிருந்ததினால் என்னால் விரைவாக நடக்க முடியாது. குண்டுகளெல்லாம் பொலு பொலு என்று விழ என்னைப் பார்த்து கை வாறாக அண்ணாமார் தூக்கிக் கொண்டு வரும் போது விழுந்த ஷெல்லில் மூன்றாவது அண்ணாவும் ஐந்தாவது அண்ணாவும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்கள்.
அவர்கள் இருவரும் இறந்திட்டார்கள் என்று தெரியும். ஆனால் அவர்களை அந்த இடத்திலேயே விட்டிட்டு நானும் அப்பாவும் தம்பியும் தங்கச்சியும் மெல்ல மெல்ல நகர்ந்து கட்டுப்பாட்டு பகுதிக்குள் போய் விட்டோம்.
எங்கட மூத்த அண்ணா 2001 ஆம் ஆண்டு யாழ்ப்பா ணத்தில் இருந்து படிக்கும் போது எழுதுமட்டுவாள் பிரச்சினையின் போது இறந்திட்டார். அவரின் இறப்பை அடுத்தே அம்மாவும் 2002 இல் இறந்திட்டா.
அம்மா இறந்த பின் அப்பாதான் எங்கள் எல்லோரையும் பார்த்து நல்ல ஒரு நிலைக்கு கொண்டு வர வேண்டும் என விரும்பி ஒவ்வொருவரையும் தனிப்பட்ட கவனிப்பில் வளர்த்தார்.
ஆனால் அவருக்கு ஒவ்வொருவராலும் இழப்புத்தான் கிடைத்ததே தவிர எதிர்பார்ப்பு கிடைக்கவில்லை. கடைசியாக மாத்தளனுக்கு வந்து சேர்ந்த போது அப்பா பலத்த காயம் அடைஞ்சு உடல் முழுவதும் பீஸோடை இன்று வரை வாழ்ந்து வருகிறார்.
அண்மையில் மூளைக்கு அருகில் பீஸ் ஒன்று இருக்கு அதனை சத்திர சிகிச்சை செய்து எடுக்க வேண்டும் என்று எங்களுக்கு ஆலோசனைப்படுத்தினார்கள் வைத்தியர்கள். ஆனால் அப்பா எங்கட நிலையை கருத்தில் கொண்டு ஒப்பரேஷனுக்கு மாட்டன் என்றிட்டு வந்திட்டார்.
அண்ணாவை உயிரோட இருக்கும் போது தங்கச்சியை கையில்லாமல் பார்க்க முடியாது என்று வவுனியாவிற்கு என்னை கூட்டிட்டுப் போய் இரண்டு பொய்க் கை போட்டார்கள்.
ஆனால் அதனால் எந்த பிரயோசனமும் இல்லை. தேவையில்லாமல் இரண்டு பாரமான பொருட்களை நான் தூக்கி வைத்திருக்கிறேனோ என்ற மனோ நிலையே என் மனதில் வெகு நாளாக இருந்தது.
இதற்கு அப்பால் இரண்டு செயற்கை கைகளாலும் ஏதும் செய்ய முடியாது என்ற நிலையில் இரண்டையும் கழற்றி விட்டேன்.
ஆனால் இரு கைகளும் இல்லாமல் நான் வீட்டில் சகல வேலைகளும் செய்வேன். இவற்றுக்கப்பால் computer வகுப்பிற்கு போய் ms office படிச்சு photo shop உம் படித்து விட்டேன். மேற்படிப்பு படிக்க விருப்பம் ஆனால் அதற்கான பொருளாதாரம் எம்மிடம் இல்லை.
இருந்தாலும் என் மனோதிடத்தை நம்பியும் என் ஆற்றலை புரிந்து கொண்டும் என்னை ஒரு ஆண்மகன் திருமணம் செய்துள்ளார். எனக்கு மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறார்.
எங்கட குடும்பத்தில் 2001 ஆண்டு மூத்த அண்ணாவுடன் தொடர்ந்த இழப்பு 2009 புதுமாத்தளன் வரை தொடர்ந்து மூன்று உயிர்களையும் எனது இரு கைகளையும் ஒரு கண்ணையும் இழந்ததுடன் அப்பா உடல் முழுக்க பீசுகளை சுமந்தவராக இன்று நாங்கள் வாழ்ந்து வருகிறோம்.
ஆனால் இவ்வாறான எங்களுக்கு கேயார் நிறுவனம் வழங்கிய 38 கோழிக்குஞ்சுகளும் கச்சேரி வழங்கிய 30 கோழிக்குஞ்சுகளுமே கிடைத்தன. வேறு எந்த ஒரு உதவியும் எமக்கு கிடைக்கவில்லை. அதுவும் காலப்போக்கில் வன்னியில வந்த வெள்ளத்தில செத்துப் போச்சு.
மீள்குடியேறிய புதிதில் அப்பாவிற்கு இந்திய வீட்டுத்திட்டத்தில் வீடு கொடுத்தார்கள். ஒன்று விட்ட அண்ணா வின் உதவியுடன் வீட்டைக் கட்டி முடித்து விட்டோம். ஆனால் எனக்கான வீடு பதிந்து 4 வருடம் ஆகி விட்டது. இதுவரை தரவில்லை.
கிராம சேவையாளரை (ஜி.எஸ்.) போய் கேட்டால் பதிவு இருக்கு தருகிறோம் என்கிறார். ஆனால் இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை.
ஆனால் பாதிக்கப்படாத புலம் பெயர்ந்து வேறு இடங்களில் (வலிகாமம், தென்மராட்சி, வடமராட்சியில்) இருப்போர் எங்கட பிரதேசத்தில் வந்து பதிஞ்சு வீட்டுத்திட்டம் எடுத்து வீட்டைக் கட்டி வாடகைக்கு கொடுத்து விட்டு நகரத்தை நோக்கி சென்று விட்டார்கள்.
ஆனால், நாங்கள் போரால் பாதிக்கப்பட்டு உறவுகளை அவயவங்களை இழந்தும் எந்த ஒரு அரச உதவியும் கிடைக்கப் பெறாதவர்களாக இருக்கிறோம்.
கடந்த சில நாட்களுக்கு முன்னும் போய் விதானையாரை கேட்டால் நீங்கள் இப்ப தானே புதுக்குடும்பம் கொஞ்சம் பொறுங்கோ என்று சொல்லி வாசலில் வைத்தே திருப்பி அனுப்பி விடுவார்.
நான் திருமணம் முடிந்து 4 வருடமாகிறது. போராட்டம் நிறைவு பெற்று ஆறு வருடமாகி விட்டது. அரசாங்கம் மாறி ஒரு மாதமாகிறது. இனியுமா நாங்கள் புதுக்குடும்பம்?
இப்ப எனக்கு வயது 27. மகனுக்கு 3 வயது. முன்பள்ளி போறார். கணவர் காலையில் எழும்பி எனக்கு தேவையான உதவிகளையும் செய்து மகனையும் பாடசாலைக்கு விட்டிட்டு தான் வேலைக்கு போறவர். தினக்கூலிக்குக்குத்தான் போறவர். எல்லா நாளும் வேலை கிடைக்கும் என்று இல்லை. கிடைக்கும் போது வர்ற சம்பளத்தில்தான் எங்களது வாழ்வு நகருது.
தங்கச்சி நல்லா படிப்பா. ஆனால் குடும்ப சூழ்நிலையால தையலை பழகி காமன்சில வேலை செய்யிறா. அதே போல் தம்பியும் படிப்பை இடையில் நிறுத்தி கராச்சில வேலை செய்யிறார்.
முல்லைத்தீவில் விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாங்கள் நல்ல வருமானத்தோடு நிறைவான வாழ்வு வாழ்ந்தனாங்கள். ஆனால் போராட்டம் என்று வந்ததும் உறவுகள், உடமைகள், அவயவங்களென ஒன்றன்பின் ஒன்றாக இழந்து இன்று சாப்பாட்டிற்கே பிறரை எதிர்பார்க்கும் நிலையில் இருக்கிறோம்.
யாராவது எங்கள் நிலையை உணர்ந்து எமக்கு உதவி செய்ய விரும்பினால் என் கணவருக்கு நிரந்தர தொழில் ஒன்று வேண்டும். அதற்கு உங்களால் முடிந்த உதவியை செய்தால் நானும் என் குடும்பமும் நன்றாக இருப்போம்.
என் கணவருக்கு கடை போட விரும்பம். ஆனால் எங்கட வீட்டிற்கு அருகில் முழத்திற்கு முழம் கடை இருக்கு. இதனால் ஏலாது. ஆனால் ஓட்டோ ஓட விருப்பம். அதற்கு வாடகைக்கு ஆட்டோ எடுக்க எவ்வளவோ முயற்சித்தம்.
ஆனால் அதற்கு முற்பணம் வழங்க எம்மிடம் பணம் இல்லை. இதற்கப்பால் நான் வேலைக்குப் போனால் நிரந்தமான ஒரு வருமானம் கிடைக்கும் என முயற்சித்தால் சுயவிருப்பக் கோவை பார்த்து நேர்முகத்திற்கு கூப்பிடுவார்கள்.
அங்கு போனதும் என்னை பார்த்ததும் நீங்கள் போங்கோ கோல் பண்ணிறம் என நாகரிகமாக கூறி திருப்பி விடுவார்கள்.
நாங்கள் வன்னி மாவட்டத்தில் நிறைவான வளத்தோடு இருந்தாலும் இயற்கையாலும் போராலும் ஏன் அரச அதிகாரிகளாலும் பாதிக்கப்பட்டு விட்டோம். அரசு தரும் திட்டம் அதிகாரிகளால் புறக்கணிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் கஷ்டப்படு கிறோம். சுகபோகத்தில் வாழ்பவர்களுக்கே எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணமும் போய்ச் சேருது.
இதுவரை எமது இடத்திற்கு எந்த ஒரு அதிகாரிகளும் பதிவு என்ற பெயரில் வரவில்லை. காரணம் பாதிக்கப்பட்டோரின் எந்த ஒரு பதிவும் நடப்பதாக இதுவரை எங்கட விதானையார் யாருக்கும் சொன்னதும் இல்லை. யாரும் பதிந்ததும் இல்லை.
பாதிக்கப்பட்ட நாங்கள் இன்று வரை வலியை சுமந்தவர்களாக வாழ்ந்து கொண்டே இருக்கிறம். நாங்கள் இளமையை தொலைத்து விட்டோம். சந்தோஷம் என்றால் என்ன என்றே தெரியாது. ஆனால் எங்கட பிள்ளைகளென்றாலும் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.
எனது கணவனின் சுயதொழிலுக்கும் மகனின் எதிர்காலத்திற்கும் யாரும் உதவி செய்வீர்களென்றால் நாங்களும் சாதாரண மனிதரைப் போல் சமூக நீரோட்டத்திற்குள் இணைக்கப்பட்டு விடுவோம்.
அங்கவீனம் வாழத்தடை இல்லை என வாழத்துடிக்கும் இந்த இளம் குடும்பத்தை உயர்த்தி விட நாமும் கைகொடுப்போம்.