சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தினால் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கும் எண்ணம் தமக்கு இல்லை என்று சிறிலங்காவின் புதிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையதாகவும், நாட்டில் மீண்டும் தீவிரவாதத்தை மீண்டெழச் செய்வதற்கு முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டி, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், உலகத் தமிழர் பேரவை, பிரித்தானியத் தமிழர் பேரவை, உள்ளிட்ட 15 புலம் பெயர் தமிழ் அமைப்புகளை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தடை செய்திருந்தது.
இந்தநிலையில், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவை என்று குற்றம்சாட்டி தடை செய்யப்பட்ட புலம் பெயர் அமைப்புகளின் மீதான தடை தொடரும் என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
தடையை நீக்குவது குறித்து புதிய அரசாங்கம் எந்த கலந்துரையாடலை நடத்தவோ, ஆலோசிக்கவோ இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐதேக அரசுடன் மீண்டும் ஒட்டிக்கொள்ள முயன்ற ரம்புக்வெல – வெட்டிவிட்டார் ரணில்
01-02-2014
மகிந்த அரசாங்கத்தில் அமைச்சரவைப் பேச்சாளராக இருந்த கெஹலிய ரம்புக்வெல, எந்த நேரமும் ஊடகங்களில் பரபரப்பான மனிதராகவே இருந்து வந்தார்.
ஆனால், மகிந்த ராஜபக்சவின் வீழ்ச்சிக்குப் பின்னர், கெஹலிய ரம்புக்வெல தேடுவாரின்றி இருக்கிறார்.
இந்தநிலையில், கடந்தமாதம் 24ம் நாள், பிரதமர் செயலகத்தில் இருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், தொலைபேசியில் பேசிய அவர், மீண்டும் தான் ஐதேகவில் இணைந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.
ஆனால், அவரை ஏற்றுக் கொள்ள விரும்பாத ரணில் விக்கிரமசிங்க, கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர், ரம்புக்வெல திரும்பி வருவதை விரும்பவில்லை என்று நேரடியாகவே அவரிடம் கூறியுள்ளார்.
இதனால் ஐதேக அரசாங்கத்துடன் ஒட்டிக் கொள்ளும் ரம்புக்வெலவின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.