கிழக்கு மாகாண சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சார்பில் முத­ல­மைச்சர் ஒருவர் நிய­மிக்­கப்­ப­ட­வுள்ளார். அவருடைய பெயர் அடுத்த 72 மணி நேரத்தில் அறி­விக்­கப்­படும்.

அது தொடர்­பான ஆலோ­ச­னைகள் முஸ்லிம் காங்­கி­ரஸின் அர­சியல் பீடத்தில் முன்­வைக்­கப்­பட்டுள்ளன என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் நகர அபி­வி­ருத்தி, நீர் முகா­மைத்­துவ அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

மரு­த­முனை கலா­சார மண்­ட­பத்தில் நேற்று நடை­பெற்ற அம்­பாறை மாவட்ட முஸ்லிம் காங்­கிரஸ் மத்­தி­ய­குழுக் கூட்­டத்தில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனை தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும் கூறு­கையில், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சி காலத்தில் நாம் அந்த அர­சுக்கு ஆத­ரவு வழங்­கி­ய­துடன், கிழக்கு மாகாண சபைக்கு இரண்­டரை வரு­ட­காலம் முத­ல­மைச்சர் பதவி வழங்கப்­பட வேண்டும் என கேட்டுக் கொண்டோம்.

அந்­த­வ­கையில் புதிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் இந்த உடன்­ப­டிக்­கையை நாம் எடுத்து கூறி­ய­துடன், மிகுதி இரண்­டரை வரு­டத்தை மு.கா. வுக்கு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டோம்.

இந்த உடன்­ப­டிக்­கையை அவர் ஏற்றுக் கொண்­ட­துடன், முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு முத­ல­மைச்சர் பத­வியை வழங்­கு­வ­தா­கவும் உறு­தி­ய­ளித்தார்.

இதற்­க­மைய நாம் கிழக்கு மாகாண சபையில் முத­ல­மைச்சர் யார் என்ற பெயர் விப­ரங்­களை அடுத்த 72 மணி நேரத்தில் வெளி­யி­டுவோம்.

கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எமக்கு ஆத­ரவு வழங்­கு­மென எதிர்­பார்க்­கிறோம் அதற்­கான அழைப்பை விடுவோம்.

இதே வேளை கிழக்கு மாகா­கண சபை தேசிய அர­சொன்­றுக்கு முன்­னு­தா­ர­ண­மாக அமையும் என நான் கரு­து­கின்றேன். மேலும் அரசின் 100 நாள் வேலை­திட்­டத்தில் அபி­வி­ருத்தி குறித்து நாம் எதிர்­பார்க்க முடி­யாது.

இது அர­சியல் யாப்பு திருத்தம், சட்­ட­ரீ­தி­யான ஏற்­பா­டுகள் மற்றும் நல்­லாட்சி ஒன்­றினை உறுதி செய்யும் வகை­யி­லேயே அமைந்­துள்­ளது.

இது தொடர்பில் சிறு­பான்மை மக்கள் மத்­தியில் உரிய தெளிவு அவ­சி­ய­மாகும். அதே­வேளை, அர­சியல் யாப்பு திருத்தம் தொடர்­பிலும் சிறு­பான்மை மக்­களின் அபிப்­பி­ரா­யங்கள் அவ­சி­ய­மாகும்.

இது குறித்து நாம் கலந்­து­ரை­யாடி ஆலோ­ச­னை­களை முன்­வைக்­கலாம். எதிர் காலத்தில் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு அர­சுடன் இணைந்து செயற்­படும் சாத்­தி­யக்­கூ­றுகள் உள்­ளன.

அந்­த­வ­கையில் சிறு­பான்மை கட்­சிகள் இந்த ஆட்­சியில் பங்­கு­தா­ரர்­க­ளாகி சாத்­தி­ய­மான ஆட்சி அதி­கா­ரத்தை நிர்­வ­கித்துக் கொள்­வது அத்­தி­யா­வ­சி­ய­மாகும் என்றார்.

இதே­வேளை, சம்­மாந்­துறை அப்துல் மஜீட் மண்­ட­பத்தில் வெள்­ளிக்­கி­ழமை மாலை நடை­பெற்ற எம்.வை.எம். மன்­சூரின் 25ஆவது நினை­வு­தின நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக்க கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறு­கையில்,

இன்று தமிழ், முஸ்லிம் சமூ­கங்­களின் அர­சியல் ஒரு புதிய கட்­டத்தை அடைந்­தி­ருக்­கின்­றது. இன்று பரஸ்­பரம் விட்­டுக்­கொடுப்­போடு இலங்கை என்ற தேசி­யத்­துக்குள் தமிழ்ப்­பேசும் சமூ­கங்கள் உச்­சக்­கட்ட அதி­காரப் பகிர்வை அனுபவிப்பதற்கான தகுதி குறித்து போரா­டிக்­கொண்­டி­ருக்­கின்றோம்.

கிழக்கில் முஸ்லிம் காங்­கிரஸ் நியா­யப்­ப­டுத்­து­கின்ற விட­யங்­களைப் பொறுத்­த­வ­ரையில் ஆசன வித்­தி­யா­சங்­களை வைத்து கிழக்கு மாகாண சபை ஆட்சி என்ற விட­யத்தில் ஒரு பெரிய கயி­றி­ழுப்பு நடந்­து­கொண்­டி­ருக்­கின்­றது.

கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்­தலில் எங்­க­ளுக்கு வித்­தி­யா­ச­மான மக்கள் ஆணை கிடைத்­தது. அது சாதா­ர­ண­மான மக்கள் ஆணை­யல்ல. நீண்ட இடை­வெ­ளிக்குப் பின்னர் கிடைத்த மக்கள் ஆணை­யாகும்.

ஆனால், அந்தத் தேர்­தலின் பின்னர் முஸ்லிம் காங்­கிரஸ் வாக்­க­ளித்த மக்­களின் விருப்­பத்­திற்கு மாற்­ற­மாக நடந்­து­கொண்டு ஆளுங்­கட்­சி­யுடன் சேர்ந்து அதனை விரயஞ் செய்து விட்­ட­தா­கவும் சோரம்போய் விட்­ட­தா­கவும் கூறப்­பட்­டது.

இன்றும் கூட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் அதற்­காக எங்கள் மீது வசை பாடிக்­கொண்டு இருக்­கின்­றார்கள். ஆனால் அர­சி­யலில் சில நியா­யங்­களை அவர்கள் புரிந்­து­கொள்ளல் வேண்டும்.

அன்று கிழக்கு மாகா­ண­சபை விட­யத்தில் அர­சுடன் நாங்கள் ஒத்துப் போகா­தி­ருந்தால் வட­மா­காண சபைத் தேர்­த­லையே நடத்­தி­யி­ருக்க மாட்­டார்கள்.

இன்னும் சில மாதங்­களில் பாரா­ளு­மன்றத் தோதல் நடை­பெற உள்ள சூழ்­நி­லையில் இந்­நாட்டு தெற்கில் வாழும் சிங்­கள மக்கள் மத்­தியில் இன, மத, கட்சி வேறு­பா­டு­க­ளுக்கு அப்பால் நல்­லாட்சி நிறு­வப்­ப­டு­வ­தற்­காக வரிந்து கட்­டிக்­கொண்டு புறப்பட்ட முற்­போக்குச் சக்­திகள் இன­வாதம் என்ற பிற்­போக்கு அர­சியல் படு­கு­ழிக்குள் இழுத்­துக்­கொண்டு போய்த் தள்­ளு­கின்ற விதத்தில் நாம் வட­கி­ழக்கு அர­சியல் பற்றி சிந்­திப்­பது தவ­றாகும்.

அதே­வே­ளையில் முஸ்லிம் காங்­கி­ர­ஸு­டைய உரி­மையை வழங்க வேண்­டிய கடப்­பாட்டை புதிய ஜனா­தி­பதி ஏற்றுக்கொண்டு இருக்கிறார்.

ஜனாதிபதியின் பார்வையில் யார் எந்தப்பதவியில் இருந்தார் அல்லது இருக்கின்றார் என்பது அவருக்கு முக்கியமல்ல. தனது அரசியல் கூட்டணி செய்து கொண்ட உடன்படிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற நம்பகத் தன்மையோடு முஸ்லிம் காங்கிரஸுக்கு கிழக்கில் முதலமைச்சர் பதவியை வழங்குவது என்ற முடிவை எடுத்திருக்கின்றார்.

அதற்காக அவருக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டு இருக்கின்றோம் என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version