இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கலந்து கொண்டதை அவர் சார்ந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
இது தொடர்பில் அக்கட்சியின் மத்தியக் குழு கூட்டம் உடனடியாக கூட்டப்பட்டு அதில், சுதந்திர தின நிகழ்வில் சம்பந்தரும், சுமந்திரனும் கலந்து கொண்டது தொடபில் விவாதிக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத்தலைவர் சிற்றம்பலம் கோரியுள்ளார்.
நாட்டில் புதிதாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தாலும், புதிய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தில், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து ஏதும் தெரிவிக்கப்படாத சூழலில், இவ்விருவரும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டது தவறு என அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஒற்றையாட்சியின் கீழேயே அரசியல் தீர்வு எனக் கூறியுள்ளார் எனச் சுட்டிக்காட்டும் அவர், தமிழர்கள் எதிர்பார்ப்பான பூரண சமஷ்டி குறித்து எவ்வித முன்னெடுப்புகளை இல்லாதபோது, சுதந்திர தின நிகழ்வில் ஏன் பங்கேற்க வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்புகிறார்.
நல்லிணக்கம், சமூக ஒற்றுமை போன்றவை பெரும்பான்மை ஆகியவற்றை பெரும்பான்மை இன மக்களே முதலில் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்கு மாறாக, அதை வெளிப்படுத்தும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், மற்றொரு உறுப்பினரும் கலந்து கொண்டது இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஏற்புடையது இல்லை எனக் கூறுகிறார்.
அரசியல் ரீதியான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்போது, கட்சியின் மத்தியக் குழு கூடியே முடிவுகளை எடுக்கும் என்றும், ஆனால் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வது தொடர்பில் அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றும் சிற்றம்பலம் தெரிவித்தார்.
அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தக் கருத்துக்களை இங்கே கேட்கலாம்.