பிரெஞ்சு நாட்டு ஓவியர் கோகென் வரைந்த ஓவியம் ஒன்று 300 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டிருக்கிறது. இதுவரை விற்கப்பட்ட கலைப்படைப்புகளிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட படைப்பு இதுவாகும்.
தற்போது கத்தாரில் இருக்கும் ஒரு அருங்காட்சியகத்திற்கு இந்த ஓவியம் விற்கப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்பாக, பால் செஸன் வரைந்த ஒரு ஓவியத்தை 259 மில்லியன் டாலருக்கு காத்தார் நாடு வாங்கியிருந்தது.
இதுவரை இந்த ஓவியம் சுவிட்ஸர்லாந்தின் பாஸெலைச் சேர்ந்த ருடால்ஃப் ஸ்டாச்செலின் என்பவரிடம் இருந்தது.
பல வருடங்களாக இந்த ஓவியத்தை, பாஸெலில் இருக்கும் கன்ஸ்ட் அருகாட்சியகத்திற்கு கடனாகக் கொடுத்திருந்தார் ஸ்டாச்செலின். தற்போது அந்த அருங்காட்சியகத்துடன் ஏற்பட்ட சில பிரச்சனைகளையடுத்து, அதனை விற்க அவர் முடிவெடுத்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனை வாங்கியவர் யார் என்ற விவரத்தை வெளியிடப்போவதில்லையென ஸ்டாச்செலின் தெரிவித்துள்ளார்.
விற்பனை நடந்து முடிந்ததா என்பதை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை.
இருந்தபோதும், கத்தாரைச் சேர்ந்த ஒருவரிடம் இந்த ஓவியம் விற்கப்பட்டுவிட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த விற்பனையை கத்தார் நாட்டு அதிகாரிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
கத்தார் நாட்டு அரச குடும்பத்தினர் சமீப காலமாக, மேலை நாட்டு ஓவியங்களை சேகரிப்பதில் பெரும் பணத்தை செலவிட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு மரணமடைந்த கத்தார் நாட்டின் கலாச்சாரத் துறை அமைச்சர் ஷேக் சவுத் பின் முகமது அல் தனி, சுமார் 1 பில்லியன் டாலர் அரசுப் பணத்தை இம்மாதிரி கலைப்படைப்புகளை வாங்குவதில் செலவழித்தார்.