குரோதம், வைராக்கியம் போன்ற அனைத்து தீய குணங்களின் மொத்த வடிவமாய் இருந்த சிறிய தந்தை அவள் குடும்பத்தை வேரறுக்க வேண்டும். புதிய விடியலில் அவள் உயிருடன் இருக்கக் கூடாது என்று இரவு முழுவதும் தனது இமைகளை சற்றும் மூடாமல் அவளை பழி வாங்க வேண்டும் என்ற வெறியுடன் காத்திருந்தான்
பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்டது தான் வாழ்க்கை. இந்த வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு தான் அன்பு, பாசம், காதல், பாதுகாப்பு என்ற உணர்வுச் சுவர்களினால் குடும்பம் என்னும் அழகிய கோயில் கட்டப்பட்டுள்ளது.
தாத்தா, பாட்டி, மாமன், மாமி, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா என்று அன்பாக பெயர் சொல்லி அழைக்கும் கூட்டுக்குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு ஏது குறைவு. ஆனால் இன்று கூட்டுக் குடும்பம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களே அதிகம்.
இதற்கு காரணம் புரிந்துணர்வின்மை, விட்டுகொடுப்பின்மை, சந்தேகம் என்ற தீய சக்திகளின் கட்டுக்களில் குடும்பங்கள் கட்டப்பட்டுள்ளமையே ஆகும்.
அதுவும் சிறு சிறு பிரச்சினைகளுக்கெல்லாம் விலை மதிப்பற்ற மனித உயிர்களை மிக துச்சமாக வேட்டையாடுதல் குடும்பங்களில் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு அண்மையில் காலி, தடல்ல பிரதேசத்தின் மகமுதலி மாவத்தையில் இடம்பெற்றது. இக்கொ லைச்சம்பவத்தில் 24 வயது மதிக்கத்தக்க யுவதியொருவர் உயிரிழந்ததுடன்,அவளது தாயும் சகோதரனும் கடுமையான வெட்டுக்காயங்களுடன் காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அவரச சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
இதேவேளை 58 வயதான குறித்த யுவதியின் மாமன் முறையான கொலையாளி கிங்தொட்ட, பாலத்திற்கு அருகில் ரயில் பாதையில் தலை வைத்து தற்கொலை செய்துள்ளான்.
இதை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து யுவதியின் கணவரது சித்தாப்பாவுக்கும், யுவதியின் குடும்பத்தாருக்குமிடையே நிலவிய சச்சரவே இந்த கொலைக்கான காரணம் என்று தெரிய வருகின்றது.
அதன்படி தனது திருமணத்தின் பின் தனது பிறந்த வீட்டை விட்டு காலி, தடல்ல பிரதேசத்தின் மகமுதலி மாவத்தையிலுள்ள தன் கணவனான சிசிரவின் வீட்டுக்கு புது மணப்பெண்ணாக தன் புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தாள்.
திருமணமாகி சில நாட்கள் மட்டுமே சந்தமாலிக்காக நேரத்தை செலவழித்த சிசிர மீண்டும் தனது தொழிலுக்காக யாழ்ப்பாணத்துக்கே சென்றுவிட்டான். அதன் பின் விடுமுறை நாட்களில் மட்டுமே சிசிர வீட்டுக்கு வருவான்.
எனவே பெரும்பாலும் சந்தமாலி கணவனின் தாய், தந்தை, சகோதரன் என்ற தனது புகுந்த வீட்டு சொந்தங்களின் பாதுகாப்பிலேயே இருந்தாள். மேலும், அனைவருடனும் சகஜமாக பழகும் இயல்புடைய அவளுடன் மாமன், மாமி, மைத்துனன் என அனைவருமே அன்பாக இருந்தார்கள்.
அதுமட்டுமின்றி கணவனின் சிறிய தந்தையின் வீடும் இவர்களின் வீடு அமைந்திருந்த அதே வளவுக்குள்ளேயே அமைந்திருந்தது.
இது தான் குடும்ப உறுப்பினர்களிடையே குரோதம்,வைராக்கியம் போன்ற தீய சக்திகளை ஊடுருவச் செய்ததுடன் இறுதியில் சந்தமாலியின் உயிரைக் குடிக்குமளவுக்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தியது.
கணவனின் சிறிய தந்தைக்கு ஆரம்பத்திலிருந்து சந்தமாலியை அவ்வளவாகப் பிடிக்கவில்லை.. சிறிய சிறிய விடயங்களுக்கும் அதிகமாக குழப்பமடையும் குணவியல்பினை கொண்ட அவர் தொட்டதுக்கெல்லாம் அவள் மீது குறைகளைச் சுமத்தியவாறே இருந்தார்.
இதனிடையே பௌர்ணமி தினமான பெப்ரவரி மாதம் மூன்றாம் திகதி விடுமுறை நாள் என்பதால் அன்றைய தினத்தில் தன்னைப் பார்க்க காலி தடல்ல, மகமுதலி மாவத்தையில் அமைந்துள்ள தனது கணவனின் வீட்டுக்கு வருமாறு, தன் தாய்க்கும், சகோதரனுக்கும் சந்தமாலி அழைப்பு விடுத்திருந்தாள்.
எனவே மகளின் அழைப்பினை ஆசையுடன் ஏற்ற தாய் தனது மகனையும் கையோடு அழைத்துக் கொண்டு மகள் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளையும் செய்து எடுத்துக் கொண்டு சந்தமாலியின் புகுந்த வீட்டுக்கு பெப்ரவரி இரண்டாம் திகதி வந்து சேர்ந்தாள்.
சந்தமாலியினதும், சிசிரவினதும் திருமணத்துக்கு பிறகு மகளை பார்க்க அவள் புகுந்த வீட்டுக்கு அவர்கள் வருவது அதுவே முதல் தடவை. எனவே தான் மகளின் அழைப்பினை அவர்களால் தட்டிக்கழிக்க முடியவில்லை.
பகல் வேளையாகும் பொழுது மகளின் புகுந்த வீடான காலி தடல்ல பிரதேசத்தை வந்தடைந்த இருவரையும் கை,கால் முகத்தை கழுவி விட்டு சாப்பிட வருமாறு கூறி, அவர்களை வரவேற்பதற்காக வகை வகையாய் சமைத்த உணவுப்பொருட்களை மேசையில் ஆயத்தமாக்கினாள்..
இதேவேளை, அயல் வீட்டிலிருந்த சந்தமாலியின் கணவனின் சிறிய தந்தை தனது இளைய மகன் முறையான இளைஞனுக்கு ஒரு கோப்பை இறால் கறியை கொடுத்து அனுப்பியுள்ளார்.
இதனை குறித்த பிள்ளையிடமிருந்து பெற்றுக் கொண்ட சந்தமாலி அந்த பிள்ளையின் செய்கை காரணமாக சற்றுக் கடிந்தும் கொண்டாள் இதனை தொலைவிலிருந்து மாமன் முறையான குறித்த நபர் அவதானித்ததுடன் சந்தமாலியின் வீட்டினை நோக்கி வந்துள்ளார்.
இதேவேளை, சந்தமாலி அந்த பிள்ளை கொண்டு வந்திருந்த இறால் கறியில் தனது தாயாருக்கும் தம்பியாருக்கும் சற்று அதிகம் பரிமாறி விட்டு தனது கணவரின் தம்பிக்கு குறைந்த அளவில் பரிமாறியுள்ளார்.
இதனையும் அவதானித்த மாமன் முறையானவர் சந்தமாலியுடன் சற்று ஆவேசமாக முரண்பட்டுக்கொண்டார். அவர் இதற்கு முன்னும் சந்தமாலியின் மீது எதற்கெடுத்தாலும் குறை கண்டு பிடிப்பவர். எனவே இதை அவர் விடுவதாய் இல்லை.
“நான் அவனுக்கு தான் அந்த இறால் கறியை அனுப்பினேன் நீ எப்படி உன்னுடைய தாய்க்கும், சகோதரனுக்கும் இதைப் பரிமாற முடியும்” என பலத்த சத்தத்துடன் கத்தியதுடன், கூடாத வார்த்தைகளையும் அவளை நோக்கி பிரயோகித்துள்ளார்.
அதுமட்டுமின்றி அவளின் தாயையும் தம்பியையும் கூடவே பேசியுள்ளார். எனவே அவளும் பதிலுக்கு அவரைத் தீட்டித் தீர்த்தாள். இதே வேளை சாந்தமாலியின் தாயாரோ ஆசையாய் மகளைப் பார்க்க வந்த இடத்தில் இப்படி நடந்து விட்டதே என்று மகளை சாந்தப்படுத்தினாள்.
அதன் பின் அவ்விடத்தை விட்டுச் சென்ற சிறிய தந்தைக்கு மாலை வேளையில் நடந்த சம்பவத்தை அவனால் மறக்க முடியவில்லை.
எனவே குரோதம், வைராக்கியம் போன்ற அனைத்தின் தீய குணங்களின் மொத்த வடிவமாய் இருந்த சிறிய தந்தை அவள் குடும்பத்தை வேரறுக்க வேண்டும். புதிய விடியலில் அவள் உயிருடன் இருக்கக் கூடாது என்று இரவு தனது இமைகளை சற்றும் மூடாமல் அவளை பழி வாங்க வேண்டும் என்ற வெறியுடன் காத்திருந்தார்.
அதன்படி முழு மதி தினமான பெப்ரவரி மூன்றாம் திகதி அதிகாலை வேளையிலேயே ஆழ்ந்த நித்திரையிலிருந்த சந்த மாலியை கொலை செய்யும் நோக்கத்துடன் வீட்டின் மூலையிலிருந்த கோடரியை எடுத்துக் கொண்டு அவளை வெட்ட சென்றார் அதன்படி இளம் பெண்ணான சந்தமாலியின் உடலை சரமாரியாக வெட்டிச் சாய்த்தார்.
இதில் சந்தமாலியின் சகோதரனின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலையில் இருந்து வெளி வரும் செய்திகள் மூலம் அறியப்படுகின்றது.
கோடரியால் தனது மருமகளையே தாக்கிக் கொலை செய்த கொலை குற்றவாளியான சிசிரவின் சிறிய தந்தை கொழும்பு, காலி பிரதான ரயில் பாதையில் உள்ள கிங்தோட்டை ரயில் பாதையின் பாலம் அருகே சென்று அங்கு தண்டவாளத்தில் தன் தலையை வைத்து ஓடும் ரயில் முன் தற்கொலை செய்து கொண்டான்.
இதைத் தொடர்ந்து சடலம் துண்டு துண்டாய் சித றிய நிலையில் ஜீன் கங்கையிலிருந்து மீட் கப்பட்டது.
எனவே “ஆத்திரக்காரனுக்கு புத்தி” மட்டு என்பார்கள். சாதாரணமாக தீர்க்க வேண்டிய ஒரு பிரச்சினை இது. அற்பத் தனமாக ஒரு கோப்பை இறால் கறிக்காக ஒரு குடும்பத்தையே வேரறுத்து உள்ளமை மனிதாபிமானமில்லாத அரக்கன் என்பதையே எடுத்துக்காட்டுகின்றது.