இலங்கையின் 67ஆவது சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கலந்து கொண்டமை பற்றி பல்வேறு வாதப்பிரதி வாதங்கள் ஏற்பட்டுள்ளன.
கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இலங்கையின் தேசிய சுதந்திர கொண்டாட்டங்களை தமிழ் மக்கள் புறக்கணித்தே வந்துள்ளார்கள்.
இன்னும் விரிவாக பார்ப்போமாயின் 1956ஆம் ஆண்டுக்கு பின்னுள்ள எல்லாக்காலப்பகுதி சுதந்திர தினக் கொண்டாட்டங்களையும் தமிழ் மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர்த்தே வந்துள்ளனர்.
இந்த வரலாற்றுப்போக்கை மாற்றும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் இலங்கையின் 67ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இவ்வாறு கலந்து கொண்டமை அவர்களின் அரசியல் போக்கு மாற்றத்தைக் காட்டுகிறதா? இல்லையாயின் வரலாற்று மாற்றத்தைக் காட்டுகிறதா?
இல்லை அரசியல் மாற்றத்தின் பொதுப்போக்குத் தன்மையைக் காட்டுகிறதா? என்பது பற்றியெல்லாம் மக்கள் மத்தியில் கலந்துரையாடப்படுகிறது.
கடந்த 60 வருட கால அரசியல் போக்கில் எதிர்ப்பு அரசியலிலேயே ஊறி நனைந்து போன சமூகமாக தமிழ் மக்கள் பார்க்கப்பட்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக 1983ஆம் ஆண்டுக்குப் பின்னுள்ள நிலைமைகளை கோடிட்டுக்காட்ட வேண்டிய அவசியமில்லை.
இந்த தேசிய எதிர்ப்புக்குரிய வரலாற்றுக்காரணங்களை அடுக்கிக் கொண்டே போக முடியும்.
ஒரு சிறுபான்மை இனம் ஒடுக்கப்படுவதற்குரிய சகல காரணங்களையும் சம்பவங்களையும் தமிழ் மக்கள் சந்தித்திருக்கின்றார்கள். பெரும்பான்மை தேசிய சமூகமென்ற பலத்தின் அடிப்படையில் அரசியல் அநியாயங்களும் அட்டூழியங்களும் பெரும்பான்மை சமூகத்தால் செய்யப்பட்டிருக்கிறது.
சேர்.பொன். இராமநாதன் சேர். பொன். அருணாசலம் போன்ற ஜாம்பவான்களின் அரசியல் சாணக்கிய ஒத்துழைப்புடன் பெறப்பட்ட சுதந்திரத்தை தமிழ்மக்கள் எப்போதிருந்து பகிஷ்கரிக்கத் தொடங்கினார்கள் என்பதற்கு வரலாற்று பதிவுகள் உண்டு.
மலையக மக்களின் வாக்குரிமையை இல்லாதொழிப்பதற்கான பிரஜா உரிமை சட்டத்தை இலங்கையின் முதலாவது பிரதமரான டி. எஸ். சேனாநாயக்கா 15.11.1948இல் கொண்டு வந்தார்.
இந்த சட்டத்தின் தீவிரதாக்கம் 1949 ஆம் ஆண்டின் தேசிய சுதந்திரத்தின் மீது மலையக மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் அவநம்பிக்கைகளை ஊட்டி விட்டன. இதன் பிரதிபலிப்பாகவே இலங்கை தமிழரசுக்கட்சி தோற்றம் பெற்றது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் முதலாவது தேசிய மாநாடு திருகோணமலையில் 1951ஆம் ஆண்டு ஏப்ரல் 13, 14, 15ஆம் திகதிகளில் நடைபெற்றபோது தமிழ்த் தலைவர்கள் ஒன்றை சுட்டிக்காட்டியிருந்தார்கள்.
இலங்கையின் உத்தியோகபூர்வமான தேசிய கொடி தமிழ் மக்களை இரண்டாந்தரப்பிரஜைகளென சுட்டிக்காட்டுகிறது எனக்குறிப்பிட்டிருந்தார்கள். இவையும் ஒருவகை எதிர்ப்புணர்வை காட்டி நின்றன.
இந்த எதிர்ப்பின் உச்சவெளிப்பாடாக 1956ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சிங்கள மொழிச்சட்டம் ஆகியது. பண்டாரநாயக்கவினால் கொண்டு வரப்பட்ட தனிச்சிங்கள சட்ட மூலம் காரணமாக காலிமுகத்திடலில் தமிழ் மக்கள் (06.06.1956) சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை நடத்தினர்.
இந்தச் சத்தியாக் கிரகத்தைப் பொறுக்க முடியாத இனவாதிகள் கலவரத்தைத் தூண்டினார்கள். தமிழ் தலைவர்கள் தாக்கப்பட்டார்கள்.
இதன் தொடர்ச்சியாகப் பல்வேறு அரசியல் கெடுபிடிகள் நடைபெற்ற நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழரசுக்கட்சியின் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் இடம்பெற்றதுடன் இலங்கையின் 9ஆவது சுதந்திர தினத்தை (1957) துக்க தினமாக அனுஷ்டிக்கும்படி தமிழரசுக்கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்ததன் விளைவாக திருகோணமலையில் தமிழர் ஒருவர் கொல்லப்பட்டார்.
திருகோணமலை மக்கள் சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்த வேளையில் நகரில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரத்தில் ஏறி கறுப்புக்கொடியேற்ற முயற்சித்த 22 வயதான நடராஜன் என்பவன் மீது எப். ஜி. மனுவல் டி. சில்வா துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதில் நடராஜன் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டான்.
இந்த சம்பவம் வட கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் மனதில் சொல்லொண்ணாத் துயரை உருவாக்கியது.
இதன் இன்னொரு இன வெறுப்பு சம்ப வங்களாக 1958ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் திகதி கொண்டு வரப்பட்ட வாகனங்களுக்கான ‘சிங்கள ஸ்ரீ’ யை கூறலாம்.
தமிழ் மக்கள் குறிப்பாக வட கிழக்கு மக்கள் தீவிரமாக எதிர்த்ததன் கடும் விளைவுதான் 1958ஆம் ஆண்டு வெடித்த இனக்கலவரமாகும்.
மே 26, 27ஆம் திகதிகளில் பேரினவாத காடையர்களால் மேற்கொள்ளப்பட்ட கொடூர வன்முறைகள் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடு வாசல்களை இழந்தார்கள் கொல்லப்பட்டார்கள்.
இந்த இனக்கொடூரம் தமிழ் மக்கள் மத்தியில் தீராத கோபத்தையும் மாறாத வஞ்சத்தையும் உண்டாக்கியது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.
இதன் எதிர்போக்குக் காரணமாகவே 1958ஆம் ஆண்டுக்குப்பின் வந்த எல்லா சுதந்திர தினங்களையும் தமிழ் மக்கள் ஆவேசமாக எதிர்த்து வந்திருக்கிறார்கள். கறுப்புக் கொடிகளை ஏற்றி தமது தீவிரமான எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள்.
இதன் இன்னொரு பரிமாணம் தான் 1972ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவினால் கொண்டுவரப்பட்ட (22.05.1972) குடியரசு எனும் விடயமாகும்.
1970ஆம் ஆண்டு மே 1ஆம் திகதி முதல் 1971யூன் 20 வரை புதிய அரசியல் யாப்பை உருவாக்க முனைந்த வேளை தமிழரசுக்கட்சியினர் அரசியல் அமைப்புக்கு முன்வைத்த திருத்தங்கள் யாப்பு ஆக்கிகளாலும் அரசாங்கத்தாலும் நிராகரிக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் சுதந்திரத்துக்கு எதிரான தீவிரத்தன்மை வளர்ந்த நிலையில் சுதந்திர தினத்தை தீவிரமாக எதிர்க்கும் முனைப்புக் கொண்டார்கள்.
இதன் இன்னொரு மறுவடிவம் தான் யாழில் 1974ஆம் ஆண்டு இடம்பெற்ற (10.1.1974) உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் நடைபெற்ற அசம்பாவிதங்களாகும். இதன் கூட்டு வடிவங்களே பின்னாளில் ஆயுதப் போராக வெடித்தது.
சுமார் கால் நூற்றாண்டு காலம் (1983 – 2009) நடைபெற்ற ஆயுதப்போர் காலத்தில் சுதந்திர தினமென்பது தமிழ் மக்களால் எண்ணிப்பார்க்க முடியாததொரு மோசமான நாளாகவே அது கருதப்பட்டது.
ஆனால் இன்றைய சூழ்நிலையில் எல்லாமே மாற்றத்துக்குள்ளாகிக் கொண்டிருக்கின்ற நிலையில் 67ஆவது தேசிய சுதந்திர தினத்துக்கு தமிழ்த் தலைவர்கள் சமூகமளித்திருந்தமை கடுமையான விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டிருப்பது கவலை தருகின்ற விடயம்தான்.
கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக உள்நாட்டிலும் சர்வதேசத்தளவிலும் இலங்கை அரசாங்கம் பிரசாரங்களை மேற்கொண்டது மாத்திரமின்றி தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற அவர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய நியாயமான அரசியல் தீர்வை நான் வழங்க தயாராக இருக்கின்றேன் என்ற வாக்குறுதிகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உள்நாட்டளவிலும் இந்தியா உட்பட சர்வதேச சமூகத்துக்கும் அளித்திருந்தார்.
அவர் நிலையானதும் நீடித்து நிற்கக்கூடியதுமான நியாயமான அரசியல் தீர்வை வழங்குவார் என தமிழ் மக்களும் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் காத்துக்காத்து இருந்தே இறுதியில் இலவு காத்த கிளிகள் ஆக்கப்பட்டார்கள்.
யுத்தத்துக்கு உதவி புரிந்து தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு சாவு மணியடித்த இந்திய வல்லரசு தன்னால் முன்மொழியப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை பூரணமாக அமுல்படுத்த வேண்டுமென இலங்கை அரசைக் கட்டாயப்படுத்தாது போக்குக்காட்டியே ஏமாற்றி வந்தார்கள்.
இந்த நிலையில் இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி தோற்கடிக்கப்பட்டு நரேந்திரமோடியின் தலைமையிலான பா.ஜ. கட்சி ஆட்சி பீடமேறியது. பாரதப் பிரதமர் நரேந்திரமோடியின் வருகையின் மீது தமிழ் மக்கள் அதீத மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். இறுதியில் அதுவும் கானல் நீராகிப்போன கதையாகவே ஆகியது.
இவ்வாறானதோர் சூழ்நிலையில்தான் தற்பொழுது இலங்கை அரசியலில் புதிய மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த மாற்றம் தமிழ் மக்கள் விரும்புகின்ற தீர்வை தந்துவிடுமென்று எதிர்பார்க்க முடியாது விட்டாலும் மாற்றத்துக்கான அடையாளங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தெரிவதை நாம் நம்பித்தான் ஆக வேண்டும்.
இலங்கையின் புதிய மாற்றத்துக்கான பங்காளிகாக வட கிழக்கு வாழ் தமிழ் மக்கள் இருந்துள்ளார்கள் என்பதை உலகம் ஏற்றுக்கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சுதந்திர தினவிழாவுக்கு பிரசன்னமாகியிருக்கிறார். அவருடைய ராஜதந்திரங்கள் தோற்றுப்போவதில்லையென்ற நம்பிக்கை வாதங்கள் தமிழ் மக்களின் பொதுவான அபிப்பிராயமாகும்.
பாராளுமன்ற ஜனநாயகத்தை நம்பும் இலங்கையின் பொதுத்தேர்தல்களிலும் சரி மறுபுறத்தே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தல்களிலும் சரி, வடகிழக்கு மக்கள் எதிர்ப்பு அரசியல் போக்கையே கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள் என்பதே யதார்த்தம்.
இதனால் தென்சமூகம் தமிழ் மக்களை விரோதிகளாகவும் எதிரிகளாகவும் பார்த்து வந்த காலங்களே அதிகம். இதுவே வரலாற்றுப் பாடமாகவும் இருக்கிறது. இவற்றுக்கான மாற்றத்தை தேட வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் தமிழ் மக்கள் இருக்கின்றார்கள் என்பதேயுண்மை.
இரா.சம்பந்தனின் தீர்மானிப்பு சரியானதா? பிழையானதா? என்ற வாதத்துக்கு அப்பால் காலத்தின் நியதியும் தேவையும் கவனிக்கப்பட வேண்டுமென்பதே சரியான விடையாக இருக்க முடியும்.
இலங்கையரசியலில் தமிழ் மக்கள் இழக்கப்பட்டவையும் ஏமாற்றப்பட்டவையும் தோல்வி கண்டவையும் அதிகமென்பது மறுக்கப்பட முடியாத உண்மைதான்.
ஆனால் எதிர்ப்பு நிலைவாதந்தான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வாகுமென்று நம்பிக்கை கொண்டிருப்பது அர்த்தமற்றது என்பதே புத்திஜீவிகளின் ஆழ்ந்த கருத்தாக இன்று கருதப்படுகின்றது.
இதை பட்டறிந்த பொதுமக்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். எதிர்ப்பு நிலைவாதம் தமிழ் மக்களுக்கு இன்று என்ன திரவியத்தை தேடித் தந்திருக்கிறது என்று வினாவிப் பார்த்தால் கிடைக்கும் விடை பூஜ்ஜியமாகவே இருக்கும்.
இவ்விடத்தில் ஒன்றை நினைவுபடுத்திப் பார்க்க முடியும். 13ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவரச் செய்து வடகிழக்கு இணைந்த மாகாண ஆட்சிமுறையொன்றை இப்போதைக்கு ஏற்றுக்கொள்ளுங்கள்.
பின்னாளில் பூரண வலுவுடைய ஆட்சி முறைமையை உருவாக்கித் தருவோமென இந்திய வல்லரசு அழுத்தம் தந்தவேளை ஏற்று நடந்திருந்தால் இன்றைக்கு இந்த அவலம் நேர்ந்திருக்குமா என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும்.
மாற்றங்கள் உள்வாங்கப்பட வேண்டும். ஜீரணிக்கப்படவும் வேண்டும். புதிய மாற்றத்தின் போக்கை இந்த அரசில் காண முடியும் என்பதற்கு அடையாளமாக ஏலவே மஹிந்த ராஜபக்ஷவின் கரத்தைப் பலப்படுத்திக்கொண்டு தமிழ் மக்களின் நேர்விரோதிகளாக இருந்த ஹெல உறுமயவின் தலைவர்களும் ஜே.வி.பி. யின் பிரதிநிதிகளும் இன்று தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் மாற்று நிலையொன்று இலங்கையரசியலில் ஏற்பட்டிருக்கிறது.
இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட சிறுதுண்டு நிலங்களைக்கூட தமிழ் மக்களுக்கு மீண்டும் கையளிக்கப்பட வேண்டுமென ஹெல உறுமய தலைவர்கள் அடித்துக்கூறும் அளவுக்கு நிலைமைகள் மாறியுள்ளது.
30 வருட கால யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, சமாதானம் வந்து விட்டதாக கூறப்பட்டாலும் வடக்கு தெற்கு மக்களின் இதயங்களை இணைப்பதற்கான இயலுமை இல்லாது போய்விட்டது.
எனவே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தி மனிதாபிமானம்மிக்கவர்களின் தேசமாக இலங்கையை கட்டியெழுப்பி முன்னோக்கி பயணிக்க வேண்டிய தருணம் உருவாகியுள்ளது என தெரிவித்திருந்தார்.
இவை அவரின் வார்த்தை ஜாலங்கள் என நாம் கருத முடியாது. ஏனெனில் கிராமத்தில் இப்படியொரு பழமொழி சொல்வார்கள். புலி ராஜ்ஜியம் போல் பசு ஆளுகை இருக்காது என்று.
இதன் கருத்தென்னவென்றால் புலி போன்ற அட்டகாசத்தை பசு செய்யாது என்பதாகும். இதன் மறைபொருள் என்னவென்றால் மைத்திரியின் ஆட்சி பசுவாண்மை கொண்டதாகவே இருக்குமென்பதாகும்.
எனவேதான் ஒன்றை நாம் மனங்கொண்டு பார்க்க வேண்டும். ஓடுகிற நதியோடு சேர்ந்து ஓடி நன்மைகளை பங்கு போட்டுக்கொள்வோர் இந்த நாட்டில் இருக்கும்போது எதிர் நீரோடி சாதிக்க முடியாதவற்றை இணைந்தோடி சாதிக்க நினைக்கும் சாணக்கியத்தையும் ராஜதந்திரத்தையும் நாம் ஏன் கற்றுக்கொள்ளக்கூடாது.