பலாங்கொடை நகரில் அமையப் பெற்ற சிங்கள மொழி மூலப் பாடசாலையில் முஸ்லிம் மாணவிகள் அணியும் நீண்ட காற்சட்டைக்கு பாடசாலை நிர்வாகம் திடீரென தடை விதித்தமையால் மாணவிகள் அசெளகரியத்திற்கு உள்ளாகி இருப்பதாக பெற்றார் கவலை தெரிவிக்கின்றனர்.
பலாங்கொடை பிரதேசத்தில் சிங்கள மொழி மூலத்தில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவ மாணவிகளை இப் பாடசாலையிலேயே பெற்றோர் சேர்க்கின்றனர்.
இப் பாடசாலையின் ஆரம்ப காலம் தொட்டு முஸ்லிம் மாணவியர் தமது கலாசாரத்திற்கு உகந்த ஆடையை அணிய பாடசாலை நிர்வாகம் அனுமதி வழங்கி வந்தமையே இதற்கு காரணமாகும்.
ஆனால் 2015 ஆம் ஆண்டிற்காக பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில வாரங்கள் கடந்துள்ள நிலையில் இத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது விடயமாக பெற்றோர் கல்வி காரியாலயத்திற்கு தெரியப்படுத்தியும் இதுவரையில் சுமுகமானதொரு தீர்வு கிட்டவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டிலே நல்லாட்சி நிலவும் இக்கால கட்டத்தில் இது வரையில் அப்பாடசாலையில் கல்வி கற்று வந்த முஸ்லிம் மாணவியருக்கு மட்டுமாவது கல்வி நடவடிக்கைகளை முடித்துக் கொள்ளும் வரையில் முன்னர் வழங்கி வந்த சலுகைகளைப் பெற்றுத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்தல் வேண்டும் என பிரதேச வாசிகள் வேண்டுகின்றனர்.