தமிழர் மீது நிகழ்த்தப்பட்டது இனஅழிப்பே என்பதை வலியுறுத்தி, வடக்கு மாகாணசபையில் இன்று தீர்மானத்தைக் கொண்டு வந்து வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நிகழ்த்திய உரை-
கௌரவ அவைத்தலைவர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே, கௌரவ எதிர்த்தரப்புத் தலைவர் அவர்களே, கௌரவ மாகாணசபைப் பிரதிநிதிகளே,
கௌரவ சிவாஜிலிங்கத்திற்குச் சென்ற வருட கடைசி மாதக் கூட்டத்தில் ஒரு உறுதிமொழி அளித்திருந்தேன். அதாவது போதிய தரவுகள் தரப்பட்டால் நானே குறித்த இனப்படுகொலை பற்றியதான பிரேரணையைத் தயாரித்து இச்சபையில் முன்மொழிவேன் என்று.
பலத்த சிரமங்களுக்கிடையே அந்த உறுதிமொழியை நிறைவேற்றச் சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மகிழ்வடைகின்றேன். பல சட்டத்தரணிகளினதும், பேராசிரியர்களினதும், நண்பர்களினதும் உதவியின் பேரில் உருவாகியதே இந்தப் பிரேரணை.
ஆனால் குறித்த பிரேரணையை என்னால் ஆங்கிலத்தில் மட்டுமே இயற்ற முடிந்தது. தமிழாக்கம் செய்ய நேரம் போதவில்லை.
எனவே பிரேரணையை ஆங்கிலத்தில் வாசிப்பதற்கு முன்பதாக இதன் தாற்பரியம் பற்றி ஒரு சில வார்த்தைகளைத் தமிழில் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன்.
இலங்கைத் தமிழ் மக்களின் உரித்துக்களின் நிலை, அவர்களின் எதிர்பார்ப்புக்கள், அவர்களின் அபிலாசைகள், அவர்களின் தேவைகள், அவர்களின் வருங்காலம் ஆகியன யாவும் இன்று ஒரு மயக்கமுற்ற நிலையை அடைந்துள்ளன.
விளையாட்டுத்திடல் பந்து போன்று உலக அரங்கில் பலரின் உதைக்கும் எதிர் உதைக்கும் எறிவுக்கும் எதிர்எறிவுக்கும் ஆளாகி வருகின்றது எமது நிலை.
தமிழ் மக்கள் இந்நாட்டின் பூர்வீகக் குடிகளில் ஒரு சாரார் என்ற உண்மையையும் காலாதி காலமாக அவர்கள் வாழ்ந்து வந்த பிரதேசங்களில் அவர்களே பெரும்பான்மையினர் என்ற உண்மையையும்,
அதன் பொருட்டு அவர்களுக்கு மற்றைய பூர்வீகக் குடிகளுக்கு இருக்கும் அதே அளவு உரித்துக்கள், மொழி, பாரம்பரியங்கள், வாழ்க்கைமுறை, வாழ்விடங்கள் மீதான அதே அளவு கரிசனைகள், கடப்பாடுகள் இருக்கின்றன என்பதையும் எடுத்துக்காட்டி உரிய அந்தஸ்தைப் பெற அவர்கள் பிரயத்தனங்கள் எடுத்து வந்துள்ளார்கள்.
ஆனால் எமது எதிர்பார்ப்புக்களை எங்கள் சிங்கள சகோதர சகோதரிகள் சந்தேகக் கண்கொண்டே நோக்கி வந்துள்ளார்கள்.
அது மட்டுமல்ல. சந்தேகக் கண்கொண்டே எமது சகோதர இனம் எம்மைப் பார்க்க வேண்டும், அதன் பொருட்டுத் தாம் அரசியல் குளிர்காய்தலில் ஈடுபட வேண்டும் என்ற சிங்கள மக்களின் அரசியல்வாதிகளின் குறுகியகால சிந்தனைக்கு நாம் இதுகாறும் பலியாகி வந்துள்ளோம்.
“உரித்தைக் கேட்டால் உதையடி தருவோம். நாம் உவந்தளிப்பதை உறுதியாகப் பற்றிக்கொள். இல்லையேல் அதுவும் கிடைக்காது” என்ற உன்மத்த உளப்பாங்கிற்கு நாம் உள்ளாக்கப்பட்டு வந்துள்ளோம்.
தமிழ்ப் பேசும் மக்கள் நீதியைத் தேடும் போராட்டத்தில் இன்றைய நாள் முக்கியமான ஒரு நாள்.
வரலாற்று ரீதியாக இன அழிப்பை எதிர்கொண்டு வந்த நாங்கள் எமது மக்களின் இதுவரையான உள்ளக் குமுறல்களை உலக அரங்கிலே கொட்டித் தீர்த்து நீதியைச் சர்வதேச விசாரணை மூலம் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம் என்று கட்டியங் கூறும் நன்நாள்.
அரசாங்கக் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடில்லாமல், இதுவரை காலமும் எம்மிடையே பல்வித முரண்பாடுகளையும், மூர்க்கமான முடிவுகளையும் நாம் எம்முள் வெளிக்காட்டி வந்தாலும் நாம் யாவரும் பாதிக்கப்பட்ட மக்களே என்ற விதத்தில் ஒன்று சேர்ந்து எமது உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தும் ஒரு உயர்ந்த நன்நாள்.
எமது இன்றைய பிரேரணையை, முக்கியமாக எமது சிங்கள சகோதர சகோதரிகளுக்கு நாம் உண்மையை எடுத்துக் கூறும் ஒரு கருவியாகவே நான் பார்க்கின்றேன்.
எனவே இந்தப் பிரேரணையைச் சிங்கள, தமிழ் மொழிகளுக்கு மொழிபெயர்த்தல் அவசியம்.
எமது இலங்கைவாழ் மக்களைப் பிரித்து வைத்து அரசியல் இலாபம் பெற முயன்ற எமது அரசியல்வாதிகளின் முகத்திரையைக் கிழிக்கும் ஒரு சாதனமாகவே இந்தப் பிரேரணையை நான் பார்க்கின்றேன்.
எமக்கு நேர்ந்த அவலங்கள், அல்லல்கள், அடிபிடிகள், அனர்த்தங்கள் பற்றி வெளிநாட்டு மக்கள் உணர்ந்துள்ள அளவுக்கு எமது உள்நாட்டு பெரும்பான்மையினத்தினர் அறிந்து கொள்ள நாம் இடமளிக்கவில்லை.
ஆகவே எமது நாட்டு மக்கள் யாவரும் எமக்கு இதுவரை நேர்ந்த கதியை கரிசனையோடு கருத்துக்கெடுக்க வேண்டும் என்ற விதத்திலேயே இந்த பிரேரணை கொண்டு வரப்படுகின்றது.
தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்களால் தமிழ்ப் பேசும் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக்கு நீதி தேடுவோருக்கு இந்தத் தீர்மானம் உறுதியாக இருக்கும் என்று நம்புவதோடு இது இலங்கைத் தீவில் நிலையான அமைதியையும் மீள் நல்லிணக்கத்தையும் உருவாக்க வழி அமைக்கும் என்று எதிர்பார்க்கின்றேன்.
அடக்குமுறையும், உரிமைப் புறக்கணிப்பும், நீதி மறுப்பும், பக்கச்சார்பும் நிலையான சமாதானத்திற்கும் மீள் நல்லிணக்கத்துக்குமான சூழலை உருவாக்க இடமளிக்கமாட்டா.
எனவேதான் உண்மையை எதிர்கொள்ள முன்வருவோர், நிலையான சமாதானத்தையும் இதய சுத்தியுடன் கூடிய மீள் நல்லிணக்கத்தையும் விரும்புவோர், மனிதாபிமானிகள் போன்ற யாவரும் இந்தத் தீர்மானத்தை வெற்றிகரமாக அமுல்படுத்த துணைபுரிய வேண்டும் என்று அன்புரிமையுடன் வேண்டிக் கொள்கின்றேன்.
இதற்கு இன,மத பேதமின்றி எமது சிங்கள சகோதரர்கள் உட்பட சகலரும் தமது ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
இது யாரையும் பழிவாங்கும் நோக்கத்துடன் எடுக்கப்படும் முயற்சியல்ல.
மாறாக யாவருக்கும் நீதியானது பொது, யாவருக்கும் நீதி மறுக்கப்படக் கூடாது என்பதற்கான முன்னெடுப்பே இது.
பல்லாயிரக்கணக்கான உயிர்களைத்தான் எங்களால் படுகொலைகளில் இருந்து காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.
குறைந்த பட்சம் அவர்களுக்கான நீதியைத் தானும் நிலைநாட்ட வேண்டும் என்ற நியாயமான வேட்கையின் வெளிப்பாடே இந்தப் பிரேரணை.
இரண்டாம் உலகப் போரில் இன அழிப்பைச் செய்தவர்கள் தற்போதும் தேடிக்கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படுவது எந்தக் காலகட்டத்திலும் நீதி மறுக்கப்படக்கூடாது என்ற உலக மக்களின் சிந்தனைச் சிறப்பின் எதிரொலியே என்பதை நாம் மறந்து விடலாகாது.
எனவே நீதியைத்தேடும் பெரும் பயணத்தில் எம்முடைய இந்தப் பிரேரணையானது அதனுடைய வகிபாகமானது முக்கியத்துவம் வாய்ந்தது.
மிகமுக்கியமான தருணத்தில் மிக உன்னதமான ஒரு முடிவை என் சகோதர சகோதரிகளான நீங்கள் ஒவ்வொருவரும் சேர்ந்து எடுத்திருக்கின்றீர்கள் என்று வருங்காலச் சந்ததிகள் உங்களைப் பற்றிச் சொல்வன.
பிரேரணையைப் பிரேரிதல் போதாது. அது முழுமையாகச் செயற்படுத்தப்பட வேண்டும்.
என் வாழ்க்கையின் மாலை நேரத்தில் இருந்து நான் இதைக் கூறுகின்றேன். செயற்படுத்துவதற்கு எமது இளைய சந்ததியினரின் இடையறாத பங்களிப்பும் ஊக்கமும் அவசியம்.
இதுவரை காலமும் இலங்கையில் நடந்த சதிக் காரியங்கள் பல எவ்வாறு சர்வதேசச் சட்டத்தின் சரத்துக்களின் கீழ் சந்தேகமில்லாமல் இன அழிப்பு என்று ஏற்றுக் கொள்ளப்படலாம் என்பதை இந்தப் பிரேரணையானது எடுத்தியம்புவதாய் அமைந்துள்ளது.
பலர் இதனை இந்தத் தருணத்தில் கொண்டு வரவேண்டுமா என்று கேட்பார்கள்.
நாங்களே உவந்து ஒரு அரசாங்கத்தை உருவாக்கி விட்டு அதனை உரசிப் பார்ப்பது போல் இந்த உபாயம் அமையாதா என்று கேட்பார்கள். அதற்குப் பதில்கூற நான் கடமைப்பட்டுள்ளேன்.
உண்மையை உரைப்பதற்கு நேரகாலங்கள் தேவையில்லை. நீதியைப் பெறுவதற்கு நீண்ட நேரம் நிற்க வேண்டும் என்ற கடப்பாடொன்றில்லை.
ஆனால் இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டிய நிட்சயமான நல்ல நேரம் இதுதான் என்பதே என் கருத்து.
இளைஞர் கௌரவ ருவான் விஜேவர்தன அவர்கள் இராணுவத்தினரைச் சந்தித்து உங்கள் முகாம்கள் ஒன்றினையும் நாம் அகற்றப் போவதில்லை என்று அண்மையில் உறுதிமொழி அளித்துள்ளார். இது அவரின் கருத்து என்று நான் நம்பவில்லை.
UNCLE NEPHEW PARTY என்று ஐக்கிய தேசியக் கட்சியை அந்தக் காலத்தில் அழைப்பார்கள். இன்றைய மாமன் கூறி மருமகன் மதித்துரைத்த கருத்தாகவே இதனைக் காண்கின்றேன்.
காரணம் தேர்தல் வெற்றியின் பின்னர் நான் கொழும்பில் மேற்படி இளைஞரின் மாமனார் கௌரவ ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தபோது அவர் என்னைப் பார்த்துக் கூறிய வார்த்தைகள் “நாங்கள் மகாநாயக தேரர்களிடம் வடமாகாண இராணுவ முகாங்கள் எதனையும் அப்புறப்படுத்தப் போவதில்லை என்ற உறுதிமொழியை அளிக்கவுள்ளோம்” என்பது.
அதனைக் கூறிவிட்டு அவரின் மாமனார் ஜே.ஆர்.ஜயவர்த்தனா போன்று, பொதுவாகச் சிரிக்காத அவர், சற்றுச் சிரித்தார்.
அதிலிருந்து நான் புரிந்து கொண்டது என்னவென்றால் “மகா நாயக்க தேரர்களுக்கு இவ்வாறு கூறி அவர்களின் மனங்களைக் குளிர்விக்கப் போகின்றேன். அடுத்த தேர்தலில் நாங்கள் வெல்ல வேண்டும் அல்லவா?” என்பது போலத்தான் அவரின் கூற்றை அர்த்தப்படுத்திக் கொண்டேன்.
அந்தச் சூழ்நிலை காரசாரமான கருத்துப் பரிமாறல்களுக்கு உகந்த சூழ்நிலையல்ல. மௌனம் காத்தேன்.
சில வாரங்களுக்கு முன்னர் தான் எமது மீள்குடியேற்ற அமைச்சர் கௌரவ சுவாமிநாதன் அவர்களைச் சந்தித்து வலிகாமம் வடக்கில் இராணுவத்திற்கு வேண்டப்படாத காணிகளில் மக்கள் மீளக் குடியேற வசதி அளிக்க வேண்டும் என்று கோரி அதற்கான அங்கீகாரத்தையும் பெற்று வந்தோம்.
6500 ஏக்கர் காணியில் ஐயாயிரம் ஏக்கரையாவது விடுவிக்க வேண்டும் என்று கேட்டு வந்தோம். அதற்குப் பச்சைக் கொடியையும் கௌரவ சுவாமிநாதன் அவர்கள் காட்டியிருந்தார்.
கௌரவ ருவான் விஜேவர்த்தன கூறுவதைப் பார்த்தால் இராணுவத்தினருக்கு இடநெருக்கடி வரும் போல் இருக்கின்றதே!
6500 ஏக்கரில் ஹாயாக இருந்த அத்தனை இராணுவத்தினரையும் ஒருவரைக் கூடக் வெளியேற்றாமல் ஆயிரம் ஏக்கரினுள் அடைபட்டுக் கிடக்க ஆயத்தங்கள் மேற்கொள்ளப் படுகின்றதா என்று எண்ணிப் பார்த்தேன்.
இராணுவத்தினரைக் குறைக்கமாட்டோம், இராணுவ முகாம்களை நீக்கமாட்டோம் என்பது இராணுவத்தினருக்குஞ் சிங்கள மக்களுக்கும் புதிய அரசாங்கம் கூறும் கூற்று.
இராணுவத்தினரை அப்புறப்படுத்துவோம், முகாம்களைக் குறைப்போம், மக்களை மீளக் குடியமர்த்துவோம் என்பது தமிழ் மக்களுக்குக் கூறும் கூற்று.
இது எங்கோ சென்று இடிக்கின்றதே என்று சிந்தித்துப் பார்த்தேன்.
தேர்தலில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காகவே இவையெல்லாம் கூறப்படுகின்றன என்பதை உணர்ந்தேன்.
ஆனால் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கேட்கின்றேன். வரும் பாராளுமன்றத் தேர்தலில் எங்கள் அனுசரணையுடன் தமிழ்ப் பேசும் மக்களின் வாக்குகளுடன் நீங்களும் வெற்றி அடைகின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
நீங்கள் மீண்டும் பிரதமர் ஆகின்றீர்கள் என்றும் வைத்துக் கொள்வோம். அப்பொழுது இராணுவ முகாம்களை நீங்கள் அப்புறப்படுத்த உங்களுக்கு வாக்களித்த சிங்கள சகோதர சகோதரியினர் விடுவார்களா? அனுமதி வழங்குவார்களா?
நீங்கள் அப்புறப்படுத்த மாட்டோம் என்று உங்கள் மருமகனைக் கொண்டு உறுதிமொழி அளித்ததால்த்தானே நாங்கள் உங்களுக்கு வாக்களித்தோம் என்று அவர்கள் கூற மாட்டார்களா?
அப்பொழுது நீங்கள் எங்களைப் பார்த்து “நான் என்ன செய்ய? சிங்கள மக்கள் இராணுவத்தைக் குறைக்க, முகாம்களைக் குறைக்க இடம் அளிக்கின்றார்கள் இல்லை” என்று கூற உங்களுக்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்? இதைத்தானே சரித்திரம் எமக்கு எடுத்துக் காட்டியுள்ளது.
Reasonable use of Tamil அல்லது நியாயபூர்வமான தமிழ்மொழிப் பிரயோகம் என்ற ஒரு சட்ட வரைவைக் கொண்டு வந்தார் அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க அவர்கள்.
200 புத்த பிக்குமார் ரொஸ்மிட்பிளேஸ் என்ற தெருவில் இருந்த அவரின் வீட்டிற்கு முன்னால் சென்று வரைவைக் கிழியுங்கள் என்றார்கள். உடனே கிழித்து விட்டார்.
காரணம் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதி தமிழ் மொழியின் நியாயபூர்வமான பாவனைக்கு இடமளிப்பதல்ல. “சிங்களம் மட்டும்” என்ற வாக்குறுதியே.
எனவே “பழைய குருடி கதவைத் திறடி” என்ற நிலைக்கே நாங்கள் வந்துள்ளோம். எம்மை ஏமாற்ற சதிகள் நடக்கின்றன என்று தெரிந்து கொண்டேன்.
இதனையே திரு ரணில் விக்கிரமசிங்க அவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
மேலும் மேன்மைதகு நிஷா பிஸ்வால் அம்மையாருடன் அண்மையில் நான் பேசிய போது அமெரிக்காவுக்கு சகாயமான அரசாங்கம் என்ற முறையில் இலங்கை அரசாங்கத்திற்கு அனுசரணையான விதத்தில் நடந்து கொள்ள விரும்புகின்றது அமெரிக்கா என்பதைப் புரிந்து கொண்டேன்.
ஜெனிவா அறிக்கை காலம் தாழ்த்தி வெளியிடப்பட்டால் சிங்கள மக்களிடையே கொந்தளிப்பைத் தவிர்த்து இதே அரசாங்கம் மீண்டும் பதவிக்கு வரச் செய்யலாம் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.
அப்பொழுது திரு.சம்பந்தன் அவர்களும், திரு.சுமந்திரன் அவர்களும், திரு.சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களும் திரு.செல்வம் அடைக்கலநாதன் உள்ளடங்கலாக ஜெனிவாத் தீர்மானம் உரிய காலத்தில் வெளிவருவதே உகந்தது என்ற கருத்தை முன்வைத்தார்கள்.
“எது உரியகாலம்?” என்று என்னிடம் கேட்டார் நிஷா அம்மையார்.
முன்னர் தீர்மானிக்கப்பட்ட மார்ச் மாதத் தினமே உரிய காலம் என்றேன். அதை அவர் ஏற்கவில்லை.
அப்போது நான் கூறினேன் தாமதம் சிங்கள வாக்குகளைப் பெற உதவும் என்று நினைக்கின்றீர்கள். ஆனால் தாமதம் தமிழ் வாக்குகளைப் புறக்கணிக்குந் தன்மையது என்பதை மறக்க வேண்டாம் என்றேன்.
அந்தக் கருத்துப் பரிமாற்றம் பற்றி மேலும் கூற நான் விரும்பவில்லை.
ஆனால் இவற்றை நான் இங்கு கூறுவதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு.
அதனை எமது மாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன புரிந்திருக்கும் அளவுக்கு பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பதே எனக்கு வருத்தத்தைத் தருகிறது.
இவ்வளவு நடந்தேறியும் அரசியல் சதிராட்டத்தில் குளிர் காயவே அரசியல்வாதிகள் எத்தனிக்கின்றார்கள்.
புதிய அரசாங்கத்திடம் கேட்கின்றேன் “இன்றைய நிலையை, இதுவரை தமிழ் மக்கள் அனுபவித்த நிலையை, இன்னல்களை, இடர்களைச் சிங்கள மக்களிடம் எடுத்துக் கூறி நாம் இந் நாட்டில் புதியதொரு அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க எண்ணியுள்ளோம்.
நாம் வடகிழக்கில் இராணுவ முகாம்களை ஒரு சில கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் மட்டும் நிலை நிறுத்தவுள்ளோம்.
மற்றைய இடங்கள் எல்லாவற்றிலும் இருந்து வாபஸ் பெற்று மேலதிகமாயுள்ள இராணுவத்தினரை குடியியல் வாழ்க்கைக்குத் திரும்ப, நடவடிக்கை எடுக்கப்போகின்றோம்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் சேர்ந்து சகோதரத்துவத்துடன் எமக்கு வாக்களிக்க வேண்டும்” என்ற ஒரு புதிய கலாசாரத்தை ஏன் உருவாக்க முன்வருகின்றீர்கள் இல்லை?
வடக்கையும் தெற்கையும் ஒன்று சேர விட வேண்டும் அவர்களின் மனங்களை இணைக்க வேண்டும் என்று மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் கூறியுள்ளார்.
ஜனநாயகவாதி என்று பெயர் பெற்ற நீங்கள் ஏன் பத்தாம் பசலிப் பழைய அரசியல் தந்திரோபாயங்களுள் அமிழ்ந்து இருக்கின்றீர்கள்? என்று இதைத் தான் கௌரவ பிரதம மந்திரி அவர்களிடம் நான் கேட்கின்றேன்.
ஏமாற்றுதலை அரசியல் கலாச்சாரமாக வளர்க்காமல் உண்மையையும் உரிய உள்ளன்பையும் உலகத்திற்கு எடுத்துக் காட்டும் ஒரு உயர்ந்த கலாசாரமாக அரசியலை நாங்கள் மாற்றி அமைக்க முடியாதா?
இதனால்த் தான் அவசரப் பட்டு, அல்லல் பட்டு, அசதியான உடல் நிலையிலும் இந்தப் பிரேரணையைக் கொண்டு வந்துள்ளேன்.
இந்தப் பிரேரணை உண்மையை உலகிற்கு உணர்த்தும் பிரேரணை.
உள்நாட்டு மக்களின் உன்மத்தங்களால் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை உலகத்திற்கு எடுத்துரைக்கும் பிரேரணை.
வெள்ளையன் விட்டுச் சென்ற போது அவன் தந்த யாப்பில் 29வது ஷரத்தைத் தந்து சென்றான். அதனை அப்புறப்படுத்தினார்கள்.
1972ஆம் ஆண்டின் அரசியல் யாப்பினால் தமிழ் மக்களை நிர்க்கதிக்குள்ளாக்கினார்கள் சிங்கள அரசியல் வாதிகள்.
இதனை சிங்கள மக்களுக்கு எடுத்துரைக்கும் ஆவணமாகவே இந்தப் பிரேரணையைக் கொண்டு வந்துள்ளேன்.
இன்றைய சூழ்நிலையில் இராணுவ முகாம்கள் அப்புறப்படுத்தப்படாவிடில், ஜெனீவாத் தீர்மானம் உரிய காலத்தில் உண்மையை உரைக்காவிடில் எமது தமிழ் மக்களின் பாடு எவ்வாறு அமையப் போகின்றது என்பதைக் கட்டியம் கூறும் கருத்து மிகுந்த ஆவணமாகவே இந்தப் பிரேரணையை இந்த மதிப்பு சால் சபை முன்னே பிரேரிக்கின்றேன்.
இதை இன்று இங்கு உங்கள் முன்னிலையில் பிரேரித்து அது ஏற்கப்படாது விட்டால் நாங்கள் இராணுவ கெடுபிடிகளுக்கு எமது வாழ்நாளெல்லாம் முகம் கொடுக்க நேரிடும்.
நடந்தது பிழையென்ற மனப்பக்குவத்தை எமது சகோதர சிங்கள அரசியல் வாதிகளின் மனதில் விதைக்கவே இதைக் கொண்டு வந்துள்ளேன்.
தொடர்ந்து வந்த தமிழர் அழிப்புச் செயல்கள் இனியும் தொடர வேண்டுமா என்ற கேள்வியை உலக அரங்கில் கேட்டுவைக்கத் தயாரித்த தமிழ் மக்களின் ஆவணம் இந்த ஆங்கில மொழியிலுள்ள ஆவணம்.
தொடர்ந்து வந்துள்ள சிங்கள அரசியல் வாதிகளின் பேராதிக்கச் செயல்களால் துயருற்ற தமிழ் மக்களின் துன்பங்களை எடுத்துரைக்கும் ஆவணம் இது.
இது உலக மக்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இலங்கையின் தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சினைகள் உடனேயே தீர்க்கப்பட வேண்டும் என்ற அவசியத்தை வலியுறுத்தும் நல்லாவணம்.
இதனை தம்மைக் குறை கூறும் ஆவணமாக அரசாங்கம் எடுக்காமல் அரசியல் இலாபம் பெறலாம் என்று எதிர்க்கட்சியினர் எண்ணாமல் உண்மையை உணர்ந்து உகந்ததைச் செய்ய இந்த உண்மையாவணம் உதவி புரிய வேண்டும் என்று கூறி பிரேரணையை முன்மொழிகின்றேன்.- என்றார்.