யாழ்.கோப்பாயில் தாயின் இறுதிச் சடங்கில் பூதவுடலை அவரது பெண் பிள்ளைகள் நால்வரும் முன்வந்து கண்ணீர் சிந்தியவாறு காவிய சம்பவம் அங்கு நின்ற அனைவரதும் நெஞ்சங்களை உருக்கியதுடன் வியப்பிலும் ஆழ்த்தியது.

திருநெல்வேலி சிவன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும் தற்போது இராமநாதன் கலட்டி கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்டவர் திருமதி அருள்பிரகாசம் தையல்நாயகி.

இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். இந்த நிலையில் நான்கு பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இவருக்கு உள்ளனர்.

இவரது மூத்த பெண் பிள்ளை தனது தாயார் நோய்வாய்ப்பட்ட நிலையில் கடந்த சில வருடங்களாக பராமரித்து வந்துள்ளார். இந்த நிலையில் தாயாரின் தொண்டைக் குழாய் சுருங்கிக் காணப்பட்டதால் கடந்த இரண்டு வருடங்களாகப் பாலை மட்டுமே பருகி உயிர் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 01 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு தாயார் திடீரென இறந்துள்ளார்.

ammaaa_01பெற்று வளர்த்தாளாக்கிய தாய் தகப்பனை அநாதையில்லத்தில் தவிக்க விட்டு விட்டு அவர்களது இறுதிச்சடங்கு நிகழ்விற்குக் கூட எட்டிப் பார்க்க மறுக்கும் கலிகாலத்தில் தாயின் மரணச் செய்தி அறிந்ததும் துடி துடித்துப் போய் வெளிநாட்டிலிருந்து  வருகை தந்த அவரது மூன்று பெண்பிள்ளைகளும் தமது தாய் மீது வைத்த அதீத பாசத்தால் இங்கிருந்த இரு சகோதரர்களோடும் சேர்ந்து தமது தாயாரின் மரணச் சடங்கை முன்னின்று நடாத்தினர்.

உச்சக்கட்டமாகத் தமது தாயாரின் பூதவுடல் தாங்கிய பேழையைத் தம் தோள்களில் கண்கள் கண்ணீர்க் குளமாக உருவாகச் சுமந்து சென்று தமது எல்லையில்லாத பாசவுணர்வை வெளிப்படுத்தினர்.

அத்துடன் சுடலைக்கும் சென்று தாயாருக்குச் செய்ய வேண்டிய இறுதிக் கடன்களை நிறைவேற்றினர்.

இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில்,

எங்களை எங்கள் அண்ணாவுடன் சேர்த்து ஐந்து ஆம்பிளைப் பிள்ளைகள் என்று கூறித் தான் வளர்த்தவா. அம்மா எங்கள மிகவும் கஷ்ரத்தின் மத்தியில் வளர்த்து ஆளாக்கினவா.

 அம்மான்ர இறுதிக் காலத்தில நாம் அம்மாவ உயிருடன் நேரில காணச் சந்தர்ப்பம் கிடைக்காவிட்டாலும் இரு சகோதரங்களுக்கு அந்த வாய்ப்புக் கிடைத்திருக்கு. அம்மா எங்கள அன்புடன் வளர்த்தாளாக்கியதற்கு நாங்க எப்பவும் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம். அந்த நன்றியுணர்வை வெளிப்படுத்தவே எங்கட அம்மாவை நாங்கள் நான்கு பேரும் தோள்களில் சுமந்தோம் என்றனர்.

யாழ்.மாவட்டத்திலே ஏன் இலங்கையிலேயே இவ்வாறு பெண் பிள்ளைகள் தாமாகவே முன்வந்து அன்னையின் பூதவுடல் தாங்கிய பேழையைச் சுமந்து சென்றமை இது தான் முதல் தடவையாகவும் இருக்கலாம்.

பெண்கள் சுடலைக்கு போகக் கூடாது என்ற எங்கள் சமுதாயத்தின் பார்வையும் அவ்வாறு தான் இன்றளவுமிருக்கிறது.

இருந்த போதும் பெண்கள் தற்காலத்தில் ஆணுக்கு நிகராக அனைத்து வேலைகளையும் செய்வதுடன் எல்லாத் துறைகளிலும் ஒளிவீசிப் பிரகாசிக்கும் போது இதனையும் மாற்றத்திற்கான ஆரம்பமாகப் பார்ப்போமே.

Share.
Leave A Reply

Exit mobile version