இன்னும் கொஞ்சம் நாட்களுக்கு யூடியூப்பில் இந்த வீடியோதான் கலக்கிக்கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். ஈந்த வீடியோவை நீங்கள் பார்த்தாலும் வியந்து போய் அப்படியே உங்கள் நண்பர்களுக்கு ஃபேஸ்புக்கிலோ, வாட்ஸ் அப்பிலோ பார்வேர்ட் செய்வீர்கள். அதே நேரத்தில் ஈந்த வீடியோவை பார்க்கும் போது ஒரு கட்டத்தில் லேசாக திடுக்கிடவும் நேரலாம்.
இந்த வீடியோ, கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரோபோ நாயின் சாகசத்தை விவரிக்கும் வீடியோ. கூகிள் தனது வீடியோ பகிர்வு சேவையான யூடியூப் மூலம் அறிமுகம் செய்துள்ளது.
அந்த ரோபோ நாயின் பெயர் ஸ்பாட். ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட பெரிய ரோபோ நாயின் தோழனாக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரோபா நாய்க்கும் கூகுளுக்கும் என்ன சம்பந்தம் என்ற சந்தேகம் எழலாம். விஷயம் என்னவென்றால் கூகுள் தேடல் தவிர,மேலும் பல துறைகளில் ஆர்வம் காட்டி வருகிறது. இவை தொடர்பான ஆய்விலும் ஈடுபட்டு வருகிறது. கூகுள் ஆர்வம் கொண்டு ஆய்வும் செய்து வரும் துறைகளில் ரோபோட்டிக்சும் ஒன்று.
எதிர்காலத்தில் ரோப்போக்களின் பங்கு முக்கியமாக இருக்கப்போவதை உணர்ந்து கூகுள், ‘போஸ்டன் டைனமிக்ஸ்’ எனும் ரோபோ நிறுவனத்தை கடந்த ஆண்டு விலைக்கு வாங்கியது.
போஸ்டன் டைனமிக்சின் எந்திர படைப்புகளின் ஒன்று தான் ரோபோ நாய். நாலு கால் பாய்ச்சல் என்பார்களே அதே போல நான்கு கால்களில் மேடுபள்ளங்கள் நிறைந்த கடினமான பகுதிகளில் கூட நடந்து செல்லகூடிய திறன் படைத்ததாக இந்த ரோபோ நாய் உருவாக்கப்பட்டது.
போர்க்களம் மற்றும் மீட்பு பணிகளுக்கான இடங்களில் இந்த ரோபோ நாய் அச்சமின்றி நடந்து சென்று சொன்ன வேலையை செய்யும். வீரர்களின் ஆயுதங்களை தூக்கிச்செல்வது, மற்ற கனமான பொருட்களை சுமந்து செல்வது ஆகிய பணிகளை இதனால் செய்ய முடியும்.
அது மட்டும் அல்ல, மனிதனின் நண்பனான நாயைப்போலவே இதனாலும் மனிதர்களை பின்பற்றி நடந்து செல்ல முடியும். எல்லாம் அதன் தலையில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் செய்யும் மாயம்.
கூகுள் போஸ்டன் டைனமிக்சை வாங்கிய பிறகு இந்த நாய் பற்றி அதிக செய்திகள் இல்லாமல் இருந்தது. இப்போது இந்த ரோபோ நாயின் சிறிய வடிவமான ஸ்பாட்டை உருவாக்கி அதன் செயல்பாட்டை வீடியோவாக படம் பிடித்து கூகுள் வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் ஸ்பாட் போஸ்டன் டைனமிக்ஸ் அலுவலகத்தின் மேஜை நாற்காலிகளில் மோதிக்கொள்ளாமல் நடக்கும் அழகை பார்க்கலாம். தனது பெரிய அண்ணான குஜோவுடன் ஜோடியாக நடப்பதையும் பார்க்கலாம்.
இந்த நாய் சுய சமாளிப்பு திறன் கொண்டது. அதாவது கீழே விழுந்தாலும் தானே சமாளித்து நிற்கும் தன்மை கொண்டது. இந்த ஆற்றலை உணர்த்துவதற்காக வீடியோவில் ஒருவர், ரோபோ நாயை எட்டி எட்டி உதைப்பதையும், அது தள்ளாடினாலும் சமாளித்து நிற்பதையும் பார்க்கலாம்.
ரோபோ நாய் தான் என்றாலும் எட்டி உதைக்கப்படும் வேகத்தை பார்த்தால், உதைக்காதீங்கள் ப்ளீஸ் என்று குரல் கொடுக்கத்தோன்றும். எதிர்காலத்தில் ரோபோக்கள் தொடர்பான இத்தகைய சங்கடங்கள் நிறையவே உருவாக வாய்ப்புள்ளது . இது சாம்பிள்தான்.
நிற்க! ஏற்கனவே கூகுள் போஸ்டன் டைனமிக்சின் அட்லஸ் ரோபோவின் மேம்பட்ட வடிவை சமீபத்தில் அறிமுகம் செய்தது நினைவு இருக்கலாம். இந்த அட்லஸ் ஒரு முழு எந்திரன்.
ரோபோ நாயின் வீடியோ : https://www.youtube.com/watch?v=M8YjvHYbZ9w