பிப்ரவரி 14 ஆம் தேதி…. காதலர்களின் இன்ப நாள். தங்களது காதலை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக வெளிப்படுத்துவதுண்டு. பார்க், பீச், ஓட்டல், சினிமா தியேட்டர் போன்ற இடங்களில் காதலர்களின் கூட்டம் அலைமோதும்.

சென்னையில் காதலர் தினத்தை கொண்டாட சென்ற ஒரு காதல் ஜோடிக்கு, இந்த காதலர் தினம் மரண தினமாகி இருக்கிறது. இறக்கையை விரித்து பைக்கில் பறந்த அந்த காதல் ஜோடிக்கு, எமன் லாரி உருவத்தில் வந்து இருக்கிறான்.

இந்த சோக சம்பவத்தின் விவரம்: திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூரை அடுத்த பட்டாபிராம் கருணாகரசேரியில் உள்ள வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், அந்த காதல் ஜோடி மின்னல் வேகத்தில் பயணித்துக் கொண்டு இருந்தது.

பைக்கை முதலில் காதலன் ஓட்டினாலும், பின்னர் காதலி ஓட்ட…… அவருக்குப் பின்னால் காதலன் அமர்ந்திருந்தார். காதல் ஜோடி இருவரும் அன்பை பகிர்ந்து கொண்டே பைக்கில் பறந்தனர்.

அப்போது கருணாகரசேரி சர்வீஸ் சாலையில் எதிரில் ஒரு லாரி வந்தது. ஒருவழிப்பாதையான அந்த சர்வீஸ் சாலையில் லாரி வந்ததை காதலி கவனிக்கவில்லை.

கண்இமைக்கும் நேரத்தில் லாரியும் பைக்கும் மோதியது. இதில் காதல் ஜோடி தூக்கி வீசப்பட்டது. இதில் சம்பவ இடத்திலயே காதலி பலியாகினார்.

உயிருக்குப் போராடிய காதலன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இப்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் விசாரணை நடத்தி வருகிறார்.

விசாரணையில், விபத்தில் பலியானவர் தனியார் கல்லூரி மாணவி என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் காதல் ஜோடிகள்.

காதலர் தினத்தைக் கொண்டாட பைக்கில் சென்ற போதுதான் இந்த விபரீதம் நடந்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகின்றனர்.

இதில் வேதனை என்னவென்றால் இந்த சர்வீஸ் மற்றும் வெளிவட்ட சாலையில் போக்குவரத்து அதிகம் இருக்காது. இதனால். விபத்து நடந்த சில மணி நேரத்துக்கு பிறகே அவர்களுக்கு முதலுதவிகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் தலையில் காயமடைந்த காதலி சம்பவ இடத்திலேயே பலியாகி இருக்கிறார்.

காதலர்கள் காதலர் தினத்தை கவனத்துடன் கொண்டாட வேண்டும்…!

-எஸ்.மகேஷ்

Share.
Leave A Reply

Exit mobile version