நியூயார்க்: எகிப்திய கிறிஸ்தவர்கள் 21 பேரை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொடூரமாக தலையைத் துண்டித்துக் கொலை செய்த வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். சம்பவம் நடந்த இடம் லிபியா தலைநகர் திரிபோலி அருகே உள்ள கடற்கரை என்று தெரிய வந்துள்ளது.
ஆரஞ்சு நிற உடையை அணிந்துள்ள கிறிஸ்துவ பிணைக்கைதிகளை முகமூடி அணிந்த தீவிரவாதிகள் கொலை செய்யும் காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
கிறிஸ்துவ பிணைக்கைதிகளை மண்டியிடவைத்து அந்த தீவிரவாதிகளுக்கு தளபதி போன்ற ஒருவர் கட்டளை இட மற்றவர்கள் ஒரே நேரத்தில் அதனை நிறைவேற்றுகின்றனர்.
21 பேரும் கொடூரமாக கொல்லப்பட்ட பின்னர் கடைசியாக இந்த போர் தொடரும் என அந்த தளபதி அறிவிப்பு வெளியிடுகிறார். மேலும் விரைவில் ரோமை பிடிப்போம் என்றும் வீடியோவில் கொக்கரித்துள்ளனர் அவர்கள்.
இந்த செயலை எகிப்து அரசு வன்மையாக கண்டித்துள்ளது. எகிப்தியர்கள் கொலை செய்யப்பட்டதற்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என எகிப்து அதிபர் அறிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தக்க பதில் சொல்ல வேண்டும் என அவர் கூறியுள்ளார்.