திருமணப் பதிவு இடம்பெறுவதற்கு ஒரு சில நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில் மணமகளின் பெயரை மறந்த மணமகன் வசமாக குடிவரவு அதிகாரிகளிடம் சிக்கிய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஸுபைர் கான் (28 வயது) என்ற இளைஞருக்கும் ஹங்கேரியை சேர்ந்த பீற்றா ஸஸிலக்யி (33 வயது) என்ற பெண்ணுக்கும் ஹல் எனும் இடத்திலுள்ள திருமணப் பதிவு அலுவலகத்தில் திருமணம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்படும் நிலையை எதிர்கொண்டிருந்த ஸுபைர் கான், அந்நாட்டில் தொடர்ந்து தங்கியிருக்கும் முகமாகவே பீற்றாவை போலியாக திருமணப் பதிவு செய்ய தீர்மானித்திருந்தார்.
இந்த போலி திருமணத்துக்கு காலிக் தத் கான் என்பவர் ஏற்பாடு செய்திருந்தார்.
திருமணப் பதிவு அலுவலகத்தில் திருமணம் நடைபெறுவதற்கு ஒரு சில நிமிடங்களே இருந்த நிலையில் மணமகளின் பெயரை நினைவுகூர முடியாத ஸுபைர் கான், காலிக் தத் கானுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு மணமகளின் பெயர் என்ன என வினவியுள்ளார்.
இதனை அவதானித்த திருமண பதிவு உத்தியோகத்தர் செய்த முறைப்பாட்டையடுத்து ஸுபைர் கானும் பீற்றாவும் குடிவரவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டனர்.
இந்நிலையில் மேற்படி வழக்கை விசாரித்த நீதிபதி, ஸுபைர் கானுக்கு 20 மாத சிறைத்தண்டனையும் பீற்றாவுக்கு 17 மாத சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். அதே சமயம் காலிக் தத் கானுக்கும் 20 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எஜமானி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையை தேடிக் கண்டுபிடித்து சென்ற காணாமல்போன நாய்
நான்ஸி பிராங் (64 வயது) என்பவருக்கு சொந்தமான சனூஸர் என்ற நாயே இவ்வாறு மருத்துவமனைக்கு விஜயம் செய்துள்ளது.
காணாமல் போன தனது அன்புக்குரிய நாயை வலைவீசித் தேடியும் கண்டுபிடிக்க முடியாத நான்ஸி பெரிதும் கவலையடைந்திருந்தார்.
இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
இதன்போது குறிப்பிட்ட நாய் நான்ஸி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்குள் பிரவேசித்துள்ளது.
இதனையடுத்து அந்நாய் நான்ஸியைத் தேடியே மருத்துவமனைக்குள் பிரவேசித்துள்ளது என்பதை உணர்ந்த நான்ஸியின் கணவர் டேல் பிராங், அந்நாய் தனது மனைவி அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் பிரவேசிப்பதற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அனுமதியை பெற்றார்.
காணாமல்போன நாயைக் தனது மருத்துவமனை அறையில் கண்ட நான்ஸி ஆனந்த மேலீட்டால் கண்ணீர் சிந்தி அழுதார்.
அந்நாய் நான்ஸியின் மருத்துவமனை அறையை நோக்கிச் செல்வதற்கான மாடிப் படிக்கட்டு வரை முகர்ந்தவாறு முன்னேறிச் செல்வதை வெளிப்படுத்தும் காட்சி அந்த மருத்துவமனையிலுள்ள வீடியோ கண்காணிப்பு கருவிகளில் பதிவாகியுள்ளது.