1976ஆம் ஆண்டு, தமிழ்க் கட்சிகளின் தலைமைகளுக்கு ஓர் இக்கட்டான காலகட்டம். கடந்த வருடங்களில் அவர்கள் தொடர்ந்து சிங்கள அரசுகளுடன் நடத்தி வந்த பேச்சுவார்த்தைகள் ஒரு பயனுமளிக்கவில்லை.

அத்துடன், தமிழர்களின் உரிமைகளை மேலும் வேரறுத்த 1972ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தினையும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அன்றைய ஐக்கிய முன்னணி அரசு பல்கலைக்கழகம் புக விழையும் தமிழ் மாணவர்களுக்கு எதிராகக் கொண்டு வந்த தரப்படுத்தலையும் ஏன் என்று கேட்க முடியவில்லை.

இவற்றினால்  இவர்கள் கையாலாகாத்தன்மையினர் என தமிழ் இளைஞர்கள் முடிவெடுத்து தமது இயக்கங்களை ஆரம்பித்த காலம் அது.

தமிழ் மக்கள் மத்தியில் தீவிரவாதப் போக்குகள் நிலைகொள்ளத் தொடங்கி விட்டன. பொதுத் தேர்தல்களோ இந்தா வரப்போகின்றன.

இந்த நேரத்தில் தமது தலைமையினை எவ்வாறு தக்க வைப்பது என சிந்தித்து கொண்டு வரப்பட்டதே வட்டுக்கோட்டைத் தீர்மானமாகும். தனிநாட்டுக் கோரிக்கையினை அது பிரகடனப்படுத்தியது.

இத்தீர்மானம் தமது தலைமைத்துவத்தை ‘பெடியன்களிடமிருந்து’ காப்பாற்றிக் கொள்ளும் தந்திரோபாய முயற்சி என்பது அடுத்த தேர்தல்களில் நிரூபணமானது.

“எம்மைப் நாடாளுமன்றத்துக்கு அனுப்புங்கள், சென்ற அந்த நாளே தமிழீழப் பிரகடனத்தை மேற்கொள்ளுவோம்” என தமிழ் மக்களையெல்லாம் கூவி உசுப்பி உசுப்பி வாக்குகள் கேட்டனர்.

1977ஆம் ஆண்டு தமிழ் மக்கள் வழங்கிய ஆணையின் மூலம் இலங்கையின் வரலாற்றிலேயே முதன்முறையாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பிரதான எதிர்க்கட்சியாகவும், அதன் தலைவர் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகவும் வந்தார்.

அதற்குப் பின்போ எல்லாம் கப்சிப். அங்கு ஒரு பிரகடனமும் நடக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவருக்குரிய மரியாதைகளுடன் பெருமையுடன் திரு. அமிர்தலிங்கம் வலம் வந்ததுதான் எஞ்சியது.

பல ஆண்டுகளுக்குப் பின்பு காலஞ்சென்ற தலைவர் திரு. சிவசிதம்பரம் அவர்களிடம் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியின்போது இது பற்றி வினவினேன்.

“மக்களின் ஆணையை எடுத்துக்கொண்டு நாம் சர்வதேசத்துக்குச் (அதாவது இந்தியாவுக்கு) சென்றோம். ஆனால், அது ஆதரிக்காமல்  விட்டதனால்தான்  தமிழீழப் பிரகடனத்தைக் கைவிடவேண்டியதாகியது” என்றார்.

சர்வதேச சக்திகள் அங்கீகரித்தால்தான் தமிழீழக் கோரிக்கையை எடுக்கலாம் என்றால், மக்களின் ஆணையை அதற்காகக் கோர முன்னமேயே இந்தியாவிடம் அதற்கான அனுமதி கேட்டு வந்திருக்கலாமே.

அதுதானே முறை? தமிழ் மக்கள் ஒருங்கிணைந்து இக்கோரிக்கையினை முன்வைத்தால் இந்தியா இதனைப் பரிசீலிக்கத் தயாராக இருக்கின்றது.

ஆகவே, உள்;ளூருக்காகவும் சர்வதேசத்துக்காகவும் அந்த ஆணையைத் தாருங்கள் என்று கேட்டிருக்கலாமே. அப்படிச் செய்யவில்லை. அதனால்தான் இதனை வெறும் தந்திரோபாய முயற்சி என வர்ணிக்க வேண்டியதாக இருக்கின்றது.

2015ஆம் ஆண்டு, தமிழ்  மக்களின் ஒரேயொரு எதிர்ப்புப் போராட்டமும் அழிக்கப்பட்டு  ஐந்து வருடங்களுக்கு மேலாகின்றது.

இதுவரை காலமும​ராஜபக்‌ஷ ஆட்சியின் கடினத்தில் இறுகிப்போனதாக தமிழ் மக்களுடைய அரசியல் இருந்தது. எனவே, தமிழ் மக்களின் தலைமைக் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும், அதன் உண்மையான தலைமைத்துவமான தமிழரசுக் கட்சிக்கும் ஒன்றையும் சாதிக்க முடியவில்லை. ஜனவரி ஆட்சி மாற்றத்துடன் ஒரு வெளி தெரிந்தது.

ஆனால், அந்த வெளியினை இந்த அரசியல் தலைமைத்துவம் எவ்வாறு கையாளப் போகின்றது என்பதில் பல சந்தேகங்கள் தோன்ற ஆரம்பித்து விட்டன. திரும்பவும் அரசுடனான பேச்சுவார்த்தைகளுக்குப் போவார்களா?

ஒருவித துருப்புச் சீட்டுக்களும் இல்லாமல் பேச்சுவார்த்தைக்குப் போவதில் ஒரு பயனுமில்லையென்று காலங்காலமாகக் கண்டாயிற்றே.

அத்தகைய துருப்புச் சீட்டு இவர்களிடம் என்ன இருக்கின்றது?

சர்வதேச ரீதியாகத் தங்கள் பிரசாரங்களைக் கொண்டு போக வேண்டுமெனில், மக்கள் இழந்த காணிகள், தொலைந்த நபர்கள், சிறையிலிருக்கும் கைதிகளின் நிலைமைகள் இத்தியாதி விடயங்கள் பற்றிய தகவல் திரட்டுக் களஞ்சியம் இவர்களிடம் இருக்கின்றதா?

இதனைக்கொண்டு நாடு நாடாகப் போய் வாதிடும் திறமைசாலிகள் கட்சிக்குள் இருக்கின்றனரா? தமது கோரிக்கைகளுக்காக மக்களை அணி திரட்டும் பொறிமுறைகளை இவர்கள் வைத்திருக்கிறார்களா?

கிராமந்தோறும் சென்று மக்களுக்கு அரசியல் நிலைமைகளை விளக்கி இதில் அவர்களின் வகிபங்கு என்னவென்று தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் எங்காவது நடக்கின்றனவா? இவைதான் சந்தேகத்திற்கான காரணங்கள். இச்சந்தேகங்களை நிவர்த்தி செய்யுமளவுக்கு ஒரு காரணியும் தென்படவில்லை.

தென்பட்டதோ எதிர்மறையான விடயங்களே. கட்சியானது சம்பந்தர், சுமந்திரன் என்கின்ற இரு தலைமைகளினால் மட்டும் வலிக்கப்படுகின்ற ஓடமாக இருக்கின்றது.

கட்சிக்கு மேற்குறிப்பிடப்பட்ட நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய கட்டமைப்போ பொறிமுறைகளோ ஒன்றுமேயில்லை. குறைந்தபட்சம் பதிவு செய்யப்பட்டு   நிதித்திரட்டலுக்கும் கட்சி உறுப்பினர்கள்  நடவடிக்கைகளுக்கும் ஒழுங்கான ஏற்பாடுகள் வழங்கும் கட்சியாகக்கூட அது இல்லை.

சாத்வீகப் போராட்டம் என மொழிவது மட்டும்தானேயொழிய அதற்கான ஒரு ஆயத்தங்களையும் காணவில்லை. உள்ளூராட்சி, மாகாண சபை போன்ற கட்டமைப்புக்களிலும், அங்கத்துவக் கட்சிகளிலும் அங்கம் வகிக்கின்ற உறுப்பினர்கள் அனைவரும் உதிரிகளாகச் செயற்படுவதையே பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

போதாக்குறைக்கு கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக சுதந்திரதின விழாவில் பங்கெடுத்துக்கொண்டு இத்தலைமை இன்னும் சொல்லடிபடத் தொடங்கி விட்டது.

இதனால், பரந்த மட்டங்களில் அதிருப்தி ஏற்படுமல்லவா? அந்த அதிருப்தியானது இப்போது திறக்கப்பட்டிருக்கும் அரசியல் வெளியில் நடவடிக்;கைகளாக உருமாறியிருக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணிகள் விரக்தி மேலீட்டால் “நாங்கள்” என்கின்ற புதிய மக்கள் இயக்கத்தினை ஆரம்பித்திருக்கின்றனர்.

இதன் மூலமாக  காணாமற்போனோரின் பிரச்சினைகளை உலகின் கவனத்துக்குக்கொண்டுவர முயற்சிக்கின்றனர். சுன்னாகம் நிலத்து  நீர்ப் பிரச்சினை பற்றி கூட்டமைப்பு ஒன்றும் செய்யவில்லை என்கின்ற ஆதங்க மேலீட்டால் இன்னுமொரு இளைஞர் குழாம் அதற்கான பொதுப் போராட்டங்களைத் தாமாகவே முடுக்கி விட்டிருக்கின்றனர்.

புலம்பெயர் சமூகம் மத்தியிலும் இந்த அதிருப்தி ஊடுருவியிருக்கின்றது. இது இன்னும் ஆபத்து மிகுந்தது. ஏனெனில், அங்கிருந்துதான் கூட்டமைப்பின் நிதி ஆதாரமே இதுவரை வந்திருக்கின்றது.

தமிழர் சக்தி என்று தன்னைக் கூறிக்கொள்ளும் ஒரு குழுவினர் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தினை துரோகிகள் என வர்ணித்து சகலருக்கும் மின்னஞ்சல்கள் அனுப்பிக்கொண்டிருக்கின்றது.

ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு என்பது அமெரிக்காவில் ஜனாதிபதி ஒபாமாவுக்கு ஆதரவாக இயங்கும் மிகச் செல்வாக்கு பொருந்திய ஈழத்தமிழர் அமைப்பாகும். அது திரு. சம்பந்தருக்கு திறந்த கடிதம் ஒன்றினை எழுதியுள்ளது.

அக்கடிதத்தில் மறைமுகமாக திரு. சம்பந்தர் கிண்டலடிக்கப்பட்டிருக்கின்றார். “நீங்கள் இத்தனை வருட காலமாக தமிழ் மக்களின் பிரச்சினைகளைச் சுமந்து அளப்பரிய சேவைகளை ஆற்றி ஓர் அரசியல் மேதையாக உங்களை நிரூபித்திருக்கிறீர்கள்.

ஆயினும், அரசியல் மேதைகளுக்கு எப்போது என்ன செய்ய வேண்டும் என்பதுடன், எப்போது ஒதுங்கி வழிவிடவேண்டுமென்பதும் கூடத் தெரியும். மண்டேலா இதற்குச் சிறந்த உதாரணமாகும்… எனவே, நீங்கள் இப்போது ஓய்வுபெற்று  இளந்தலைமுறையினருக்கு   உங்கள் தலைமைத்துவத்தினைக் கொடுத்து ஒதுங்கும் நாள் வந்து விட்டது” என எழுதியிருக்கின்றனர்.

இந்திய தேசியவாளர்களில் ஒருவர் “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு மண்குதிரை” எனவும் எழுதத் துணிந்து விட்டார்.

தங்களுடைய சொந்தத் தலைமைத்துவத்தில் இளைஞர்கள் இயங்கத் துணிந்து விட்டதுமல்லாமல் புலம்பெயர் சமூகமும் தலைமைத்துவத்தினை மாற்று என்று கோரவும் ஆரம்பித்து விட்டது. பொதுத் தேர்தல்களும் வரப்போகின்றன. இந்நிலைமை 1976ஆம் ஆண்டு போல் இருக்கின்றதே.

அப்போதுதான், இதுவரை இனவழிப்பு என்னும் சொல்லாடலையே உபயோகிப்பதற்கு கூச்சப்பட்டுக்கொண்டிருந்த தலைமைத்துவம், சென்ற வருடம் இதே மாதிரிப் பிரேரணை கொண்டுவர எத்தனிக்கப்பட்டபோது எதிர்த்த தலைமைத்துவம், கடந்த தேர்தல்  பிரசாரங்களின்போது  மைத்ரி பிரசாரத்தினை தமிழர்களின் கோரிக்கைகளை முன்வைத்து  சங்கடப்படுத்தக்கூடாது என மிகக் கவனமாக நடந்து கொண்ட  தலைமைத்துவம், அவசர அவசரமாக வடக்கு மாகாண சபை மூலமாக இலங்கைத் தமிழர் மீதான இனவழிப்பு நடவடிக்கைககள் என்னும் கண்டனப் பிரேரணையை இவ்வாரம் கொண்டு வந்திருக்கின்றது.

அவ்வளவு ‘அவசரமாக’ இது கொண்டு வரப்பட்டதால் இப்பிரேரணைக்கு தமிழ் மொழிபெயர்ப்பும் செய்யப்படவில்லை. வரலாற்றின் பாடங்களை  நாம் கற்பவர்களாக இருப்போமாகில், இப்பிரேரணையும் தமிழீழப் பிரகடனம் சென்ற வழியில்தான் செல்லும் எனக் கண்ணை மூடிக்கொண்டு கூறி விடலாம்.

இப்பிரேரணை எதற்காகக் கொண்டுவரப்பட்டது என்று இங்கு கூறப்படும் வாதம் சரியானதெனின், இப்பிரேரணையை இப்போது கொண்டுவருவது உகந்த இராஜதந்திரமா என்னும் விடயத்தில் கூட்டமைப்பு அவ்வளவு கவனம் செலுத்தியிருக்காது என்றே நம்பலாம்.

இன்னமும் மைத்திரி ரணில் ஆட்சி ஸ்திரப்படுத்;தப்படவில்லை. ராஜபக்‌ஷ சிங்களத் தீவிரவாத சக்திகளின் உதவியுடன் திரும்பவும் ஆட்சியைக் கைப்பிடிக்கும் நோக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

இந்த நிலைமையில், ரணிலுக்கு கைகொடுத்து அவரின் நிலைமையைப் பலப்படுத்தாமல் ராஜபக்‌ஷ குழுவினரின் கையைப் பலப்படுத்துவதாகவே இது இருக்கின்றது என ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர்.

தமிழர் போராட்டத்தை அடக்க இயற்றப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம், ஜே.வி.பி. கலவரத்தின்போது கிட்டத்தட்ட 62,000 சிங்கள உயிர்களைக் காவு கொண்டது.

தமிழ் மக்களை நசுக்க அனுப்பி வைத்த அரக்கன் சிங்கள நாட்டின் வளங்களையெல்லாம், காணி, நிதி, தங்கம் எல்லாவற்றையும் விழுங்கி ஏப்பமிட்டான்.

இவ்வாறு, தமிழ் மக்களை ஒடுக்குவது தம்மைத்தாமே தாக்கும் இரு முனைகொண்ட வாள் என்பதை சிங்கள மக்கள் இன்னமும் உணரவில்லையாகில் நாம் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் உணரும் வரையிலும் ஒவ்வொரு தேர்தலும் நடந்து முடிய விட்டுக் காத்துக்கொண்டிருக்க முடியாது.

7604_content_VICK353SDGஆயினும், இப்பிரேரணை தமிழீழப் பிரகடனம் போல ஆகாமலிருப்பதற்கு வழி செய்யலாம். வட மாகாண முதலமைச்சர், இப்பிரேரணையை அறிமுகம் செய்யும்போது சிங்கள மக்களிடம் பேசப் போகின்றோம் என்று கூறியிருக்கின்றார். அம்முறைவழியினை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.

வட மாகாண சபை தென்னிலங்கையின் சகல ஊடகவியலாளர்களுக்கும் பகிரங்கமாகக் கடித அழைப்பு விடுத்து, வடக்கினைப் பார்வையிடவும் அங்குள்ள மக்களுடனும் அரசியல்வாதிகளுடனும் மனந்திறந்து பேசவும் சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.

இந்த அரசின் வெற்றிக்குப் பாடுபட்ட தென்னிலங்கையின் சிவில் அமைப்புக்களுடன் மாவட்டச் சந்திப்புக்களை மேற்கொண்டு அவர்களுடன் தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் கஷ்டங்கள் பற்றி விளக்க வேண்டும்.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் ஒரு புதிய அணுகுமுறையை நாம் கடைப்பிடிப்போமே. தமிழ்க்கட்சிகள் தனியே தமிழ் மக்களுக்குத்தான், அவர்களுக்கு எப்போதோ தெரிந்த விடயங்கள் பற்றித் திருப்பித் திருப்பி வியாக்கியானம் செய்யும் பழங்கால வழக்கத்தை உடைப்போமே.

பிரசாரம் செய்யாமல் விட்டாலும்கூட தமிழரின் வாக்குகள் வீட்டுச் சின்னத்துக்கு விழும் அல்லவா? அதை விட்டு எமது கட்சியின் பிரசாரங்கள் அனைத்தையும் சிங்களப் பிரதேசங்களில் செய்தால் என்ன?

இந்த வகையில் அங்கு போட்டியிடும் சிங்கள அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் வாதங்களின் பயனாக சிங்கள மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு நிர்ப்பந்திக்கப் படுவார்களல்லவா? குறைந்தபட்சம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை சிங்கள மக்கள் மறந்தொதுக்க முடியாத அவர்களின் பேசுபொருளாகவாவது மாற்றிவிடுவோமே.

by Shanthi Sachithanandam

Share.
Leave A Reply

Exit mobile version