எறும்புத்தின்னி என்று அழைக்கப்படும் விலங்குதான் அலுங்கு என்றும் அழைக்கப்படுகின்றது. வெப்ப மண்டல பிரதேசத்திலேயே இந்த விலங்குகள் வசிக்கின்றன. ஆபிரிக்க நாடுகள், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் நமது நாட்டிலும் இந்த விலங்குகள் காணப்படுகின்றன.
பீடபூமி மலைக்காடுகள், மலைக்குன்றுகள், போன்றவற்றிலேயே இந்த விலங்குகளை காணக்கூடியதாக இருக்கின்றன. இந்த விலங்கினுடைய உடலில் மேல்பகுதி மற்றும் வால் பகுதிகள் என்பன கடினமான உறுதியான செதில்களை (Perils) கொண்டிருக்கும்.
ஆமை ஓடு போன்ற அமைப்பு காணப்படும். செதில்களுடனான மேல் கூடுதான் இந்த விலங்குக்கு பாதுகாப்பளிக்கின்றது. இந்த விலங்கை எதிரிகள் தாக்க வரும்போது பந்து போல் சுருண்டு கொள்ளும். இதன்மூலம் தம்மை பாதுகாத்துக் கொள்ளும்.
இந்த விலங்கு மிகவும் விரும்பி உண்ணும் உணவு எறும்புகள், கரையான்கள் என்பனவையாகும். புற்றுக்களில் உள்ள எறும்பு மற்றும் கரையான்களை தனது நீண்ட நாக்கை உட்செலுத்தி அதில் ஒட்டச்செய்து இழுத்து உண்கின்றது.
இது சாதுவான பிராணி. எவருக்கும் தீங்கு விளைவிக்காது. சந்துக்கள் மற்றும் பொந்துக்கள் இவற்றின் வசிப்பிடமாகும். பெண் அலுங்கு குட்டிகளை ஈன்று இரண்டு தினங்களுக்குள் குட்டிகளின் செதில்கள் உறுதியடைந்து விடுகின்றன.
அப்போது முதலே தாயைப் போன்று தன்னை சுருட்டி பந்து போல் ஆக்கிக் கொள்ளவும் பழகி விடுகின்றன. தாய் இரை தேட செல்லும் போது அதன் முதுகில் குட்டிகள் அமர்ந்து சவாரி செய்கின்றன.
தமிழில் அலுங்கு என்றும் சிங்களத்தில் கபல்லேவா என்றும் கேரளாவில் ஈனம்பேச்சி என்றும் இதனை அழைக்கின்றனர்.
உலகில் அழிந்து வரும் விலங்குகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டுமென்று குரல் கொடுக்கப்பட்டு வருகின்றது.