குடிபோதை காரணமாக ஒருவர் தன் மனைவியை கோடரியால் வெட்டி கொலை செய்து விட்டு தலைமறைவாகியுள்ள சம்பவம் புதுக்கோட்டையில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள பனங்குளம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்ற விவசாயியே (68வயது) தனது மனைவி சகுந்தலாவை (60வயது) கோடரியால் வெட்டி கொலை செய்துள்ளார்.
சண்முகம் சகுந்தலா தம்பதியினருக்கு கிருஷ்ணமூர்த்தி (40வயது ) என்ற மகனும் 3 மகள்மாரும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் நடைபெற்றுவிட்டது. மகன் கிருஷ்ணமூர்த்தியும் தனிகுடித்தனம் போய்விட்டார்.
பனங்குளத்தில் சண்முகமும் சகுந்தலாவும் மட்டுமே வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அடிக்கடி மது போதையில் வரும் சண்முகம் மனைவியிடம் சண்டை போடுவது வழக்கமாக இருந்துள்ளது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டதால் மனைவி கழுத்தில் இருந்த தாலியை சண்முகம் அறுத்து வீசியுள்ளார்.
இந்த தகவல் அறிந்த மகன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் உறவினர்கள் சண்முகத்திடம் தட்டிக்கேட்டுள்ளனர். அதன் பிறகும் தொடர்ந்து மனைவி சகுந்தலாவிடம் குடிபோதையில் சண்டை போட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சகுந்தலாவை குடிபோதையில் இருந்த கணவர் சண்முகம் அருகில் கிடந்த கோடரியால் பின்தலை மற்றும் கழுத்து பகுதியில் ஆழமாக வெட்டியுள்ளார்.
இதனால் சம்பவ இடத்திலேயே சகுந்தலா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பின்னர் அதிகாலை அந்த பகுதியில் தோட்டத்திற்கு வந்தவர்கள் 7 மணிக்கு மேலும், வீட்டிற்குள் சகுந்தலா தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்து எழுப்ப அருகில் சென்று பார்த்துள்ளனர்.
அதன்போது அவர் படுக்கையிலேயே சடலமாக கிடந்துள்ளமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து கீரமங்கலம் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.அதற்குள் சண்முகம் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
கீரமங்கலம் பொலிஸார் தப்பி ஓடிய சண்முகத்தை தேடி வருவதோடு தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.