சென்னை: தமிழகத்தின் செல்லக் குரல்களுக்களுக்கான தேடல் என்று விஜய் டிவி ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகின்ற “ஏர்டெல் சூப்பர் சிங்கர் 4” நிகழ்ச்சியில் இரண்டாவது இடம் பிடித்தவர் கனடாவாழ் ஈழச்சிறுமியான ஜெசிகா.
ஆனால் தான் பரிசாக பெற்ற 1 கிலோ தங்கத்தையும் தமிழகம் மற்றும் ஈழத்தில் வாழும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அப்படியே தாரைவார்த்துக் கொடுத்து தமிழர் நெஞ்சில் நீங்காத முதலிடத்தைப் பெற்றுவிட்டார்..
கனடா வாழ் ஈழத் தமிழராக இக்குழந்தையின் பாடல்களில் அரங்கம் மட்டுமல்ல, டிவி வழியாக இந்நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்த ஒவ்வொரு மனமுள்ள மனிதர்களும் கண்டிப்பாக கண்ணீர் சிந்தியிருப்பார்கள்.
அந்தக் குழந்தையின் உருக வைக்கும் குரலும், சோகம் கலந்த கானமும் கல்லையும் கரைய வைத்திருக்கும் என்பது உறுதி.
கண்ணீர் மழையில் கரைந்த இதயங்கள்:
ஈழத் தமிழர்களின் தேசிய கீதமாக போற்றப்படுகிற “தோல்வி நிலையென நினைத்து” என்ற தன்னம்பிக்கை கலந்த பாடலையும், ஈழத் தமிழரின் துயரம் தோய்ந்த வலியை வெளிப்படுத்தும் “விடை கொடு எங்கள் நாடே” என்ற உருக்கமான பாடலையும் ஒன்றாக கலந்து ஜெசிக்கா பாடி முடித்தபோது நடுவர்கள், சிறப்பு விருந்தினர்கள், விஜய் டிவியின் தொகுப்பாளர்கள் உட்பட அரங்கத்தில் குவிந்திருந்த அனைவரும் கண்ணீர் மழையில் நனைந்திருந்தனர்.
உள்ளார்ந்த வலியை உணரவைத்த பாட்டு:
நடுவர்கள் அனைவரும் எழுந்து நின்று அவருடைய பாடலுக்கு கைத்தட்டலை அளித்தனர். அப்பாடல் மூலமாக ஈழத் தமிழர்களின் உள்ளார்ந்த வலியின் தாக்கத்தினை ஒவ்வொரு தமிழனின் மனதிலும் விதைத்துள்ளார், ஜெசிக்கா
தமிழர்கள் ஒன்றுதான்:
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த தனுஷ், “தமிழர்கள் எல்லாரும் ஒன்றுதான். அவர்களுடைய வலிகளை நான் பிரித்துப் பார்ப்பதில்லை.
மகத்தான விஷயம்:
ஆனால், இந்த சிறுவயதில் அங்கு நின்று கொண்டு அவர்களின் வலி, வேதனை, ஓலம் பற்றியெல்லாம் பகிர்ந்துக் கொள்கிறாய். நீ எவ்வளவு பெரிய, உன்னதமான விஷயம் செய்திருக்கின்றாய் என்பது உனக்கு தெரியாது” என்று மனம் கசிந்த நிலையில் தெரிவித்தார்.
தமிழர்களை உயர்த்திய ஜெசிக்கா:
மக்களின் பலத்த கரகோஷத்திற்கிடையில் வெளியான முடிவுகளில் குட்டிக் குழந்தையாய் பாடிய ஸ்பூர்த்தி முதலிடம் பெற்றார். இரண்டாம் இடத்தைப் பிடித்து 1 கிலோ தங்கம் வென்ற ஜெசிக்கா தமிழர்களே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் வகையில் ஒரு காரியம் செய்தார்.
தமிழ்க் குழந்தைகள் வாழ்வு மலர:
தனக்கு பரிசாக வழங்கப்பட இருக்கின்ற 1 கிலோ தங்கத்தை தமிழகம் மற்றும் ஈழத்தில் இருக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அளிப்பதாக தன்னுடைய தந்தை சார்பில் தெரிவித்து எல்லோரையும் உருக வைத்து விட்டார்.
நீங்க இடம் பிடித்த ஜெசிக்கா:
முதலிடமோ, இரண்டாம் இடமோ பெரிதல்ல… அதன் பலனை எப்படி நாம் எடுத்துக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். அந்த வகையில் நம்மைப் போன்றவர்களே செய்யத் தயங்கும் ஒரு விஷயத்தை செய்து எத்தனை, எத்தனையோ கோடி உள்ளங்களிலும் நீங்காத இடம் பிடித்து நெகிழ்வில் ஆழ்த்தி விட்டார் ஜெசிக்கா.
நாமும் வாழ்த்துவோம்:
ஜெசிக்கா என்றால் கடவுளின் குழந்தை, செல்வம் என்று அர்த்தமாம். அப்படித்தான் தனக்கு கிடைத்த செல்வத்தை ஏழைக்குழந்தைகளுக்கு அதுவும் கொடூரப் போரில் பெற்றோரை இழந்த ஈழத் தமிழ்க் குழந்தைகளான தன்னுடைய உறவுகளுக்கு அப்படியே தாரைவார்த்துக் கொடுத்து நிஜமாகவே கடவுளின் குழந்தையாக மாறிவிட்டார்
ஜெசிக்கா… கண்கள் கலங்க…வணங்குகிறோம் ‘தமிழச்சி’ ஜெசிக்கா!